நாற்பது வயதில் நாய்க்குணம்
நாற்பது வயதில் நாய்க்குணம்
" நாற்பது வயதில் நாய்க்குணம்
அறுபது வயதில் பேய்க் குணம்"
என்பார்கள்.
"நாற்பது வயதில் நாய் குணம் அதை
நாம் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம் அப்ப
அனுசரிச்சு நாம் அணைக்கணும்
நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும்
நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும் கண்ணில்
எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்"
இது கவிஞர் வாலியினுடையப் பாடல்.
ஆனால் நாற்பது வயதில் நா குணம் .
அதைத்தான் நாய்க்குணம் என்று
சொல்லி இருப்பார்கள்.
அறுபது வயசில் சேய் குணம்.
அதாவது சிறுபிள்ளை போன்று மாறி
விடுவராம் .இப்படி விளக்கம் கூறுவர்.
நாற்பது வயசில் நாவை எங்கெல்லாம்
பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம்
வந்துவிடும்.
அதாவது பேசும் பக்குவம் வந்து விடும்.
உலக அனுபவங்களை முழுதாக
தெரிந்து கொண்ட வயது நாற்பது வயது.
அதனால்தான் நாற்பது வயதில் நா குணம்
என்று சொல்லி இருப்பார்கள்.
அதைத் தவறுதலாக நாய்க் குணம்
என்று கூறி வருகிறோம் என்பது ஒருசாரார்
கருத்து.
ஒருவேளை சரியாகவே சொல்லி
இருந்தாலும் நாய்க்குணம் வருவதில் என்ன தப்பு.?
இது பெருமைப்பட வேண்டிய செயல்தானே....
நாய் என்ன வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய
விலங்கா...
கொஞ்சம் கத்தி பேசிவிட்டால் போதும்
ஏன் நாய் மாதிரி கத்துற....என்பார்கள்.
அதுவும் நாற்பதுக்கு மேலே அப்படி கத்திவிட்டால்....
நாற்பதுக்கு மேல நாய்க் குணம் என்று சும்மாவா
சொன்னாங்க ...
இதுக்குத்தான் சொல்லியிருப்பாங்க....
அம்மாக்கள் அப்பாக்களைப் பார்த்து
கூறும் டயலாக்.
பெரும்பாலும் அம்மாக்களைவிட அப்பாக்களுக்குத்தான்
இந்த நாய்க்குணம் இருப்பதாக சொல்லிக்
கொண்டுத் திரிவர்.
அதென்னவோ ஆண்கள் மட்டுமே கத்துவது
மாதிரியும் பெண்கள் எல்லாம்
அமைதியானவர்கள் என்பது மாதிரியும்
அப்படி ஒரு பிரம்மையை ஏற்படுத்தி
வைத்துள்ளனர்.
இப்படி ஆண்களையே குறி வைத்து
சொல்லப்படும் குற்றச்சாட்டு சரியானதுதானா....
"பிறகு என்னங்க...எப்பவும் வள்ளு... வள்ளு "
என்று கத்தினா அப்படித்தான் சொல்வாங்க...
இது பெண்கள் தரப்பு புகார்.
"நீங்க சும்மா இருந்தா நாங்க ஏன் கத்தப் போறோம்..."பாதிக்கப்பட்டவர்கள்
பக்கமிருந்து வரும் பதில்.
எனக்கு என்னவோ இரண்டு பக்கமும்
நியாயம் இல்லாதது போல்தான்
தோன்றுகிறது.
பெண்களுக்கும் உடல் ரீதியான சில
மாறுதல்கள் நடைபெறும்போது கோபம்
வரத்தான் செய்யும்.
சரியான புரிதல் இல்லாததால்தான்
ஆளாளுக்கு இப்படி சண்டை
போட்டுக் கொள்கிறார்கள்.
புரிதல் இல்லாததால் வருவதுதானே
சண்டை என்பீர்கள்.
அந்தப் புரிதல் இல்லங்க...
இந்தப் பழமொழியைப் பற்றியசரியான
புரிதல் இல்லை என்பேன்.
இப்போது நாய்க்குணத்துக்கு வருவோம்.
அதென்ன நாய்க்குணம்....
நாய்க்குக் குரைக்க மட்டும்தான் தெரியுமா....
நாய்க்குணம் என்பதுதான் என்ன...
நாய் நன்றி உள்ள பிராணிங்க....
வீட்டைக் காக்கும் கடமையும் பொறுப்பும்
தனக்கு இருக்கு என்று
சதா வீட்டு வாசலிலேயே காத்துக் கிடக்கும்.
தூங்குவதுபோல் கிடக்கும்.
ஆனால் தூங்காது.
தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஒன்று
என்றால் விட்டுக் கொடுக்காது.
துரத்தித் துரத்தி குரைக்கும்.
இதுதாங்க நாய்க்குணம்.
இந்தப் பக்குவமும் பொறுப்பும் ஒரு
மனிதனுக்கு வருவது
நாற்பதாவது வயதில் தாங்க...
தூங்கினால் தூக்கம் வராது....
பிள்ளைகள் பற்றிய நினைப்பு மனதுக்குள்
வந்து தூங்கவிடாது.
இதுநாள்வரை பொறுப்பில்லாமல் இருந்திருப்போம்.
முழு கடமையையும் உணரும் வயதும்
நாற்பதாவது வயதுதான்.
இதுதாங்க இந்த பழமொழிக்கான
பொருளாக இருக்கும்.
பிள்ளைகள் கடைக்குள் சென்றால்
நாயாக கடை வாசலிலேயே காத்துக் கிடப்போம்.
பள்ளி வாசலில் காத்துக் கிடப்போம்.
வெளியில் சென்று விட்டால் வீட்டு வாசலிலேயே
காத்திருப்போம்.
இந்தக் காத்திருப்பும் கடமை உணர்வும்
மிகுந்திருக்கும் வயது நாற்பது வயது.
அதனால் நாய்க்குணம் என்றாலும் தப்பில்லை
என்கிறார் ஒரு நாற்பது வயதுக்காரர்.
நாற்பது வயது நரையோடு
வந்து எட்டிப் பார்க்க
முட்டிப் பார்த்துவிட
வரிந்து கட்டினாள் பத்தினி
எட்டி நின்று எதிரிபோல்
பார்த்த பிள்ளைகள்
குட்டியாய் முணுமுணுக்க
சட்டிப்பானை உருட்டும்
குருட்டுப் பூனையென
பெயர் தந்து
துரட்டெடுத்து விரட்டாமல்
நாய்க்குணம் என்றனர்
தூங்காமல் கிடப்பதால்
நாய் என்னும் பட்டமாம்
பலமணி நேரம்
மனைவி மக்களுக்காய்
நாயாய்க் காத்துக் கிடப்பதால்
கிடைத்ததிந்த சிறப்புப் பட்டம்
பட்டம் கிடைத்ததில்
இல்லை வருத்தம்
குடும்பத்திற்கு நான்என்றும்
நன்றியுள்ள நாய்தான்
நாற்பதில் என்ன !
எப்போதுமே நாய்தான்!
Comments
Post a Comment