இளையவள்

               இளையவள்


பாலா.... இங்கே  வா...."
           "இதோ....வந்தேன் அண்ணி..."நாலுகால்
பாய்ச்சலில் ஓடினாள் பாலா.
"அந்த குடத்தில் தண்ணீர் இல்லை. ஒரு எட்டு
ஓடிப்போய் கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டு
வைத்துவிடு."
"சரி அண்ணி..."குடத்தையும் நீர் இறைக்கும் பட்டையையும்
கையில் எடுத்து கொண்டு புறப்பட்டாள் பாலா.
அதற்குள் இளைய அண்ணி," பாலா இங்க கொஞ்சம்
வாயேன். தொட்டிலில் தம்பி அழுகிறான்.
கொஞ்சம்  ஆட்டி விடு.. "
"சரி அண்ணி."
கையில் எடுத்த குடத்தைக் கீழே வைத்துவிட்டு
தொட்டிலில் கிடக்கும் அண்ணன் மகனை
ஆட்டி விட ஓடினாள் பாலா.
பாலா இந்த வீட்டு கடைக்குட்டிப் பெண்.
அம்மா இருக்கும்வரை செல்லமாக
வளர்ந்தாள்.
அம்மா போன பின்னர் நாய்படாத பாடுதான்.
யாரிடம் சொல்ல...எடுபிடி வேலை செய்தவள்
எந்திரமாய்ப் போனாள்.
தொட்டிலைப் பார்த்தாள்...அங்கே
குழந்தை துருதுருவென்று விழித்துக் கொண்டு
கிடந்தான் இளைய அண்ணன் மகன்.
இப்படியே விட்டுவிட்டுச் சென்றால் ...தொட்டிலில்
இருந்து கீழே விழுந்து விடுவான் என்று தொட்டிலை
ஆட்டிக் கொண்டே நின்றாள்.
"பாலா இன்னும் தண்ணீர் எடுக்கப் போகல...."மூத்த அண்ணியிடமிருந்து ரிமைன்டர் வந்தது.
"இதோ போயிட்டேன் அண்ணி." தொட்டிலை விட்டுவிட்டு
மறுபடியும் குடத்தைத் தூக்கினாள் பாலா.
தலைவேறு சுற்றுவதுபோல இருந்தது.
காலையில் இருந்து ஒருவாய் காப்பி தண்ணி
வாயில் ஊற்றல...
ஆளாளுக்கு வேலை வாங்குவதிலேயே
குறியாக இருந்தார்களே தவிர சாப்பிட்டியா...
சாப்பிடுறியா...என்று ஒரு வார்த்தை கேட்கல....
அம்மா இருக்கும்வரை அந்த வருத்தம் தெரியல..
பொங்கி வைக்கும்முன்னர் முதல் ஆளாக
தட்டைத் தூக்கிட்டுப் போய் நின்று விடுவாள்
பாலா.
கொஞ்சம் ஆறட்டும் என்றாலும் பொருக்க
மாட்டாள்.
"வயிற்றில் அப்படி என்ன தீயா எரியுது "
அம்மா சும்மா கேட்டு வைப்பார்.
"போம்மா... எனக்குச் சோறு வேண்டாம் "
பொய்யாக கோபித்துக் கொண்டு தனியாக
போய் உட்கார்ந்து கொள்வாள்.
"அம்மாவும் சும்மா சொன்னேன். வா...சாப்பிடு "என்று
கையைப் பிடித்து இழுப்பார்.
"போம்மா...எனக்கு வயிறு பசிக்கல..."என்று பொய்யாகப்
பிடிவாதம் காட்டுவாள்.
"அம்மாதானே சொன்னேன் இதற்குப் போய் இவ்வளவு
கோபமா... வா நான் ஊட்டி விடுகிறேன் "பிடிவாதமாக
அம்மா ஊட்டி விடுவார்.
அம்மாவின் நினைப்பு வந்ததுமே கண்களில் இருந்து
கண்ணீர் வடிந்தது.
அம்மா இறந்து ஒருமாதம்தான் ஆகியிருந்தது.
அதற்குள் போதும் என்று சொல்லும்படி
எல்லாம் பட்டாயிற்று.
கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
வயிற்றைப் பிசைவதுபோல் இருந்தது.
ஏதாவது சாப்பிடணும்போல் இருந்தது.
ஆனால் அண்ணி சொல்லாமல் ஒரு இட்லிகூட
  வாயில் வைக்கமுடியாது.
  "அதுக்குள்ள என்ன அவசரம்...உங்க அண்ணன்
  வந்து சாப்பிட்டுவிட்டு போகட்டும்" என்பார்.
" அண்ணன் வந்து சாப்பிட உட்காரும்முன் பாலா
  சாப்பிட்டாளா...".என்று கேட்டுக் கொண்டுதான்
   சாப்பாட்டை வாயிலேயே வைப்பார்.
" எல்லோரும் சாப்பிட்டாச்சி... நீங்க மட்டும்தான்
  பாக்கி" என்று சொல்லி அண்ணன் வாயை
   அடைத்துவிடுவார் அண்ணி.
   அண்ணிமீது உள்ள நம்பிக்கையில்
   அண்ணனும் சாப்பிட்டியா என்று கேட்பதில்லை.
   இப்படி ஏதேதோ மனதிற்குள் வந்து போக...
     அட....நேரம் ஆகிவிட்டதே
     அண்ணி திட்டுவாங்களே
என்ற நினைப்பு வர குடத்தைத் தூக்கி
இடுப்பில் வைத்தபடி கிணற்றிற்குச் சென்றாள் பாலா.
தண்ணீர் இறைத்து குடத்தை
  நிறைக்கும்முன் மூச்சே போய்விடும்
  போல் இருந்தது.
  முப்பது அடி ஆழக் கிணறு.அதுவும்
  தூருக்குள்ள கொஞ்சம்போல தண்ணீர்
  கிடக்கும்.அரைபட்டை தண்ணீர்கூட
  மேலே வந்து சேராது.
ஒருவழியாக குடத்தை நிறைத்துவிட்டு தூக்கி
இடுப்பில் வைத்தாள்.
கால் தடுமாறி இடுப்பில் இருந்த குடம் கீழே விழுந்தது.
" அட...பார்த்து...பத்திரமா ....தூக்க முடியல என்றால்
என்ன ஒரு கை பிடிக்கச் சொல்லி இருக்கப்பிடாது."
பரிதாபப்பட்டார் தண்ணீர் இறைத்துக்
கொண்டிருந்த ஒரு பாட்டி.
"அடடே...தண்ணீர் பாதி
சிந்தி போயிற்றே ..சரி நீ கீழே உட்காரு..
  நான் நாலு பட்டை எடுத்து ஊற்றுகிறேன் "
  என்ற பாட்டி  விடுவிடுவென்று தண்ணீர் இறைக்க
ஆரம்பித்தார்.
" வேண்டாம் பாட்டி நான் இறைக்கிறேன்"
" கிணத்துக்குள்ள விழுந்து கிடக்கதுக்கா...வீட்டுல
ரெண்டு குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்குக....
அதுகள் வரப்பிடாது.... பச்சப்புள்ளையைப் போய்
தண்ணீர் ஏடுத்துட்டு வா என்று அனுப்பி
விட்டுருக்கிறாளுவ..".பாட்டி முணுமுணுத்தபடி
தண்ணீர் இறைத்து ஊற்றினார்.
குடம் நிறைந்ததும்  குடத்தைத் தூக்கி
இடுப்பில்  வைத்துவிட்டு
" பார்த்து பத்திரமா போ. மக்கா.....மறுபடியும்
விழுந்து கிழுந்து தொலைச்சிடப்போற..."
கரிசனப்பட்டார் பாட்டி.
" ம்உம்..சரி பாட்டி .."என்று சொல்லிவிட்டு
தண்ணீர் குடத்தோடு வீட்டிற்கு வந்தாள் பாலா.
" தண்ணி எடுக்கப் போனால் சீக்கிரம் வரத் தெரியாது.
போனா போன இடம்தான்....அப்படியே வாய்ப் பார்த்துட்டு
நிற்பியா...போ...போ...குடத்தை வச்சிட்டு
அந்த பாத்திரங்களை விளக்கிப் போட்டுரு..."
மூத்த அண்ணி  அடுத்த வேலைக்கு விரட்டினார்.
" சரி அண்ணி ..".என்று திரும்பவும்
" பாலா தம்பி தொட்டிலில்  ஒன்றுக்குப் போய் விட்டான்.
அந்த தொட்டிலை அவிழ்த்து தொட்டில் வேட்டியை
துவைத்துப் போடு "என்றார் சின்ன அண்ணி.
எந்த வேலையை முதலில் செய்வது...புரியாமல்
சுவற்றில் சாய்ந்தபடி மலங்க மலங்க
விழித்துக் கொண்டு  நின்றாள் பாலா.
மனசுக்குள் ஏதோ பிசைவதுபோல் இருந்தது.
சாப்பிட்ட பாத்திரத்தை கழுவ மாட்டாள்.
காலம் வாழ்க்கையை எப்படி புரட்டி
போட்டுருக்கு...
" இயந்திரமா....ஆமா நான் இப்போ வேலை
செய்யும் இயந்திரம்தான்."உள மனசு பேசியது.
" எளியவளா பிறந்தாலும் இளையவளா
பிறக்கக் கூடாது ... " தோழி லட்சுமி சொன்னது
நினைவுக்கு வந்தது.
"சரியாதான் சொல்லி இருக்கா...அப்போ
புரியல...
இப்போதான் புரியுது... பட்டால்தானே புரியும்...
வேண்டாம்பா இந்த இளைய பொறப்பு....
நாய்க்குகூட நல்ல தண்ணி கிடைக்கும்.
கடவுளே ...இனியொரு பிறவி இருந்தால்
மனிதப்பிறவியே வேண்டாம். அப்படியே
பிறக்க வைத்து விட்டாலும்
இளையவளா பிறக்க வைத்திடாதே..."
  மனதிற்குள் கடவுளுக்கு்  விண்ணப்பம் எழுதி
  வைத்துவிட்டு அடுத்த வேலைக்குத்
  தாயாரானாள் பாலா.


Comments

Popular Posts