முதல் எதிரி

                      முதல் எதிரி


கார் வந்து வாசலில் நின்றதும் "எல்லோரும் 
  வந்தாச்சி... எல்லோரும் வந்தாச்சி "
   ஓடி வந்தாள்  தங்கை கமலா.
  
  பின்னாலேயே அம்மாவும் வந்து எட்டிப் பார்த்தார்.
  காருக்குள்  இருந்து அப்பா முதலாவது
  இறங்கி வந்தார்.
  
  பின்னாலேயே அக்காவும் அத்தானும் வர...
  ஆவலோடு வாசலிலேயே நின்றிருந்தான் மாதவன்.
  
   வீட்டிற்குள் வந்து இருந்ததும்தான் தாமதம்
    அதற்கு மேலும் கமலாவால் வாயை மூடிக்
 கொண்டு சும்மா இருக்க   முடியவில்லை.
 
"  அக்கா ,....பொண்ணு பார்த்தாச்சா....
  பொண்ணு எப்படி இருக்கு...." என்று ஆர்வக்
  கோளாறில் ஒன்றுக்கு இரண்டு கேள்வியைக் கேட்டு 
  வைத்தாள் கமலா.
  
"  ம்....இருக்கு அப்பா கிட்ட கேளுங்க "என்றபடி
   சமையலறையை நோக்கிச் சென்றாள் அக்கா.
   
 "  ஏன் நீ சொல்ல மாட்டியா...." பின்னாலேயே சென்றாள்
 வாலு கமலா.
 
 கமலா அந்த வீட்டின் நாலாவது பெண்.
 
"   தலைவலிக்கும்மா...கொஞ்சம் காப்பி தாங்க..."
பேச்சை மாற்றினாள் அக்கா.

  அதற்குள் பின்னாலேயே வந்த  சின்ன அக்கா
  .."..ஆமா....பார்த்தாச்சி பார்த்தாச்சி...
  எல்லாம் பேசி முடிச்சாச்சி."என்று உப்பு சப்பு இல்லாமல்
 ஒப்புக்குச் சொல்லி வைத்தார்.
  
"  என்னது பேசி முடிச்சாச்சா...."அதிர்ச்சியாக 
கேட்டார் அம்மா.

  "பின்ன....சாப்பிட்டுவிட்டு வந்தாயிற்று....அப்போ 
  பேசி முடிச்சாச்சி என்றுதானே அர்த்தம்."
  
  அதுவரை என்ன நடக்கிறது என்று பார்த்துக்
  கொண்டிருந்த மாதவன் 
"  யாருகிட்ட கேட்டு பேசி  முடிச்சீங்க "என்றான் கோபமாக.

 " யாரு கிட்ட கேட்கணும்." என்றார் அப்பா.
 
 " என்கிட்ட கேட்கணும்."
 
 " ஏன் நீயும் கூட வந்திருக்க வேண்டியதுதானே..."
 
  அதற்குள் குறுக்கிட்ட அக்கா "நான் சொன்னேன்
  இல்லியா அவன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு
  முடிவு பண்ணுவோம் என்று...."
  
 " தம்பி ...என் பேரில் எல்லாம் தப்பு இல்லப்பா....
  அப்பாவும் சித்தப்பாவும்தான் கையை நனைச்சிருவோம்
  என்று சொல்லிட்டாங்க...அப்புறம் நாங்க 
  என்ன செய்ய முடியும் " தன்மேல் தப்பில்லை 
  என்பது போல சொல்லி ஒதுங்கிக் கொண்டாள் 
  சின்ன அக்கா.
  
  அக்கா சொல்வதிலிருந்து ஏதோ திருப்தி இல்லாதது
 என்பது நன்றாகவே  புரிந்து போயிற்று.
 
"  எனக்கு கலியாணம் வேண்டாம்...யாருக்கு
  வேணுமோ கட்டிகிடட்டும்..."கத்தினான் மாதவன்.
  
  " ஏய்... அப்பாவைபோய்...  என்ன பேசுற நீ...."
  கோபப்பட்டார் அம்மா.
  
"  வாங்க...போவோம் ...நாம வந்திருக்கவே கூடாது"
சலித்துக் கொண்டார் அக்கா.

   அதற்குள் கையில் பெட்டியைத் தூக்கி கொண்டு
   வெளியில் வந்தான்  மாதவன்.
    
    "நீ எங்க போகுற..."தடுத்தார் அம்மா.
    
 "   எனக்கு பிடிக்கல...போகிறேன்....வழியை விடுங்க...
    அம்மாவைத் தள்ளிவிட்டு விட்டு வெளியில் வந்தான்.
    கமலாவும் பின்னாலேயே வந்தாள்.
    
 கேட்வரை வேகமாக போன மாதவன்
 சற்று நின்று திரும்பிப் பார்த்தான்.
 
  "கமலா இங்க ஒரு நிமிடம் வந்துட்டுப் போ "
  என்று  அழைத்துவிட்டு தெருவைப் பார்க்க திரும்பி
  நின்று கொண்டான்.
  
  கமலா விடுவிடுவென  ஓடினாள்.அம்மாவும் கூடவே வந்தார்.
  
 " நான் இப்போ போகிறேன் ...
  அங்க போனதும் லட்டர் போடுறேன் .
  நீ போ..." என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமலே
  சென்றான்.

  என்ன இவன்...இப்படி ஒன்றும் சொல்லாமல்
  போறான்"  புலம்பிக் கொண்டே வந்தார் அம்மா.
  
  இதுவரை நடப்பவற்றை வேடிக்கைப்
  பார்த்துக் கொண்டிருந்த சித்தப்பா,
"  என்ன ஒருமாதிரியா குதிச்சிட்டுப்  போறான்...."
  மெதுவாக  வாயைத் திறந்தார்.
  
  "சரி...போறான்...விடு..  ".
  அப்பா ஒப்புக்கு ஏதோ சொன்னார்.
  
  ஆனால் ஏதோ தப்பு பண்ணிட்டோமோ என்ற
  எண்ணம் வந்து அவரை குமைத்தது.
  நாளைபின்ன அந்த ஆட்கள் முகத்தில விழிக்கணுமே
  என்ற ஒரு குற்ற உணர்வு வந்து குத்திக்
  காட்டியது.
  
  தம்பி போய் விட்டான் என்பது தெரிந்ததும்
  அக்கா இருவரும் வாயைத் திறந்தனர்.
  
  "நாங்க சொன்னோம்மா....அப்பாதான் பிடிவாதமா
  சாப்பிட்டுட்டுதான்  போகணும் என்று உட்கார்ந்துட்டார்"
  என்றாள் பெரியவள்.
  
  "இப்போ என்ன செய்யப் போறீக..".என்று அப்பாவைக்
  கேட்டார் மூத்த மருமகன்.
  
"  இப்போ என்ன ஆயிற்று...சாப்பிட்டுட்டுதான வந்துட்டோம்..
  வேண்டாம் என்று சொல்லிடலாம்..."
   தற்காலிகமாக  இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
   வைப்பதுபோல   சொல்லிவிட்டு 
   அப்பா வெளியில் புறப்பட்டு சென்றுவிட்டார்.
   
  இதுவரை நடந்ததை வேடிக்கைப் பார்த்துக்
  கொண்டிருந்த கமலா மெதுவாக அக்காவிடம்போய்..
"  அப்போ பொண்ணு சுத்தமா நல்லா இல்லையா..."
   அக்கறையாக விசாரித்தாள்.  
   
"  அதுக்கு இப்போ என்ன செய்ய முடியும்.  "... என்றாள் 
 சின்ன அக்கா .
 
 "பெண்ணுக்கு முடி. எவ்வளவு நீட்டம்...." கமலா
 ஒவ்வொரு கேள்வியாகப் போட்டு பெண்ணைப்
 பற்றிய தகவல்களைத் திரட்டினாள்.
  
"  ஏன் நீ ஒட்டு முடி வாங்கி உன் அண்ணிக்குத்
  தரப் போறியாக்கும்..."கிண்டலடித்தார் அத்தான்.
  
  "அதுக்கில்ல அத்தான். மாதவன் பெண்ணுக்கு
   தலைமுடி நீளமா இருக்கணும் என்பான் அதுதான்
   கேட்டுப் பார்த்தேன்." என்றாள் கமலா.
   
"  முடி சுத்தமா இல்ல...ஒரு சாண் நீட்டம் ...  . அதுவும்
  அடர்த்தி இல்லாம....எனக்குப் பிடிக்கலப்பா.."
  பெரிய அக்கா தனது மனதில் இருந்ததைக்
  கொட்டித் தீர்த்தாள்.
  
"  எது எப்படியோ தம்பிக்குக் கொடுத்து வைத்தது
  இவ்வளவுதான்...அப்போ நாங்க போறோம்மா..."
  வீட்டுக்குப் புறப்பட்டாள் சின்ன அக்கா.
  
  ஒருவழியாக பெண் பார்த்த கதைக்கு ஒரு 
  முற்றுப்புள்ளி வைத்து விட்டு பெரியவளும் கூடவே
  கிளம்பிப் போனாள்.
  
  எப்படியோ மூன்றுநாள் கழிந்து விட்டது.
  
    மூன்றாவதுநாள் காலையில் தபால்காரர்
    ஒரு கடிதத்தை கமலா கையில் தந்துவிட்டுப் போனார்.
  கடிதத்தை மாதவன்தான் எழுதி இருந்தான்.
  கடிதத்தைப் பிரித்து வாசித்தாள் கமலா.
  
"  பெண்ணைப்பற்றி அக்கா என்ன சொன்னாள்..."
  என்று விசாரித்து எழுதி இருந்தான்.
  
"  நான் சரியாக கேட்காமல் வந்துட்டேன்  . 
  நீ விபரமா கேட்டு இருப்பாய் அல்லவா.. 
  அந்த விபரத்தை தெளிவாக எழுது. 
  குறிப்பாக அக்கா எல்லோரும் பெண்
  எப்படி இருந்தது என்று   கூறினார்கள் என்பதை 
  எழுது "என்று எழுதி இருந்தான்.
  
  கமலாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
  முதன்முறையாக  மாதவன் தன்னிடம் ஐடியா
  கேட்டிருக்கிறான். உடனே கடிதத்தை எடுத்தாள்.
  அக்கா சொன்னது போல அப்படியே 
  அச்சு பிசகாமல் வரிசையாக வர்ணனையாக
  எழுதினாள்.
  
  கூடவே "உனக்கு இந்தப் பெண் வேண்டாம்.
  வேறு பெண் பார்க்கலாம் "என்று
  பின்குறிப்பு ஒன்றையும் சேர்த்து
  எழுதி இருந்தாள்.
  
"  மாதவன் என்னிடம் பெண்ணைப் பற்றி
  கேட்டிருக்கிறான்  "பெருமையாகச் சொல்லிக் கொண்டாள்.
  
  அதன் பின்னர் ஒரு மாதம் அந்த 
  பெண் பற்றி வீட்டில் பேச்சே அடிபடவில்லை.
  
  எல்லோரும் "அவனுக்குப் பிடிக்காததை நாம ஏன்
  செய்யணும் "என்று அப்படியே விட்டுவிட்டனர்.
  
  ஒரு மாதத்திற்குப் பிறகு 
  ஒருநாள் திடுதிப்பென்று வீட்டில்
  வந்து நின்றான் மாதவன் .
  
  வந்ததும் வராததுமாக
  கமலாவின் கையைப் பிடித்துக்கொண்டு 
  வெளியில் போய் ஏதோ காதில் ரகசியம்
  பேசினான்.
  
"  அவகூட  அங்க என்ன பேச்சு ...
  வந்தவன் ஒருவாய் காப்பிகூட குடிக்காம.."
  என்று ரகசிய பேச்சுக்கு இடையே புகுந்தார்  அம்மா.
  
  "இதோ  வந்துட்டேம்மா..."ரொம்ப 
  நல்ல புள்ளையாட்டும் வீட்டிற்குள்
  போனான்.
  
  வீட்டிற்குள் போனதுமே  அம்மா காதிலும்
  ஏதோ ஓதினான்.
  
"  எனக்கு ஒன்றும்  தெரியாதுப்பா...
  உனக்கு சம்மதம் என்றால் எங்களுக்கு சம்மதம்தான்."
  பட்டென்று சப்தமாக போட்டு உடைத்தார் அம்மா.
  
  "எப்படி இருந்தாலும்   வாழப் போறவன்...நீ..."
  என்று பேச்சை சுவாரசியமில்லாமல் முடித்தார்.
  
   "சரி விடும்மா.....அப்பாவிடம் சொல்லி அந்த
  பெண்ணையே பேசி முடிச்சிட சொல்லும்மா..."
  அம்மாவிடம் கெஞ்சாத குறையாக
  சொல்லிக்கொண்டிருந்தான்.
  
"  என்ன...என்னாயிற்று ...திடீரென்று 
  ஐயாவுக்கு அப்படி ஒரு ஞானோதயம்" என்றாள் கமலா.
  
"  பெண் நல்லாதான் இருக்குமாம்...பெண்ணுக்க 
  சொந்தக்காரங்க என்னை வந்து பார்த்தாங்க..."
  
"  ஓ... அதான் ஐயா மாறிட்டாரா...."என்றாள் கமலா.

"  எங்களுக்கு என்னப்பா...உங்க அப்பாவிடம்
  நீயே சொல்லு...."
 கை கழுவிட்டு ஒதுங்கி விட்டார் அம்மா.
  
  அப்பா வந்ததும் அப்பாவிடம் மாதவனே
  பேசினான்.
"  இதைத்தானே நான்  முதலாவதே சொன்னேன்....
  நல்ல குடும்பம்...சரி போய் பேசி
  நாள் குறித்துவிட்டு வருகிறேன் "என்றார்
  அப்பா.
  ஒருவழியாக திருமணமும் முடிந்தது.
  
 இரண்டுமூன்றுநாள்தான் ஆகியிருக்கும்.  
 கலியாண தடபுடல் எல்லாம் முடிந்தது.
 எல்லோரும் புதுப்பெண்ணைச் சுற்றி இருந்து
 கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டிருந்தனர்.
கமலாவும் அருகில் போய் அமர்ந்தாள்.
அவ்வளவுதான் விருட்டென்று எழும்பி அறைக்குள்
சென்றுவிட்டார் புது அண்ணி.  
கமலாவுக்கு என்னவோ போல் இருந்தது.
மறுநாளும் முகத்தை உம்மென்று முகத்தைத் 
திருப்பிக் கொண்டிருந்தார் அண்ணி.

"  என்ன...என்னாயிற்று"
  காரணம் புரியாமல் விழித்தாள் கமலா.
  
  கொஞ்ச நேரத்தில் மாதவனும் அங்குவர
  மாதவனிடம் போய்ப் பேசச்
  சென்றாள் கமலா.
  
  அவனும் கண்டு கொள்ளாததுபோல சென்றுவிட்டான்.
  
  இப்போ கமலா மனதில் ஒரே குழப்பம்.
  
  " நான் என்ன தப்பு செய்தேன் ...இருவரும்
  என்கூட பேசமாட்டேங்கிறார்கள்...".
  அம்மாவிடம் போய்  முறையிட்டாள் கமலா.
  
 " எனக்கென்ன தெரியும்..".கையை விரித்தார் அம்மா.
 
  தங்கையிடம் போய் "புது அண்ணி என்கூட 
   பேச மாட்டேங்குது...ஏன்  எனக்கு
  ஒரே குழப்பமாக இருக்கிறது "என்றாள் கமலா.
  
 " நீ இந்த பெண்ணைப் பற்றி ஏதும் தப்பா 
  சொன்னியா...."
  
   "ஒன்றும் சொல்லலியே...."
   
"    ஒன்றும் சொல்லலியா....கொஞ்சம்
    யோசித்துப் பாரு..."
    
 "   நான் யாருட்ட போய் சொன்னேன். "
 
    "யாருகிட்டேயும் சொல்லல....மாதவன்
    கிட்ட இந்த பெண் வேண்டாம் என்று சொல்லல...."
    
   " மாதவன் கிட்டயா....மாதவன்கிட்ட
    சொன்னது அவளுக்கு எப்படித் தெரியும்? 
    முட்டாள் மாதிரி  பேசுற....."
   
    "நீ பேசுவதுதான் முட்டாள்தனமா இருக்கு  ? 
    மாதவன் இப்போ அவ புருஷன்....இப்போ
    புரிகிறதா...நீ யாருக்கிட்ட அந்த பொண்ணு
    வேண்டாம் என்றது..."
    
    "...அப்படின்னா...அப்படின்னா...மாதவன்
    சொல்லி இருப்பான் என்று சந்தேகப்படுறீயா...."
    
    "சந்தேகம் என்ன சந்தேகம் ...உறுதியா சொல்கிறேன்.
    மாதவன் சொல்லியதால் அண்ணிக்கு 
    உன் மேல கோபமாம்."
    
    "யார் சொன்னா...."
    
    "அண்ணிதான் சொன்னாங்க...
    மாதவனை இனி உன் கூட பேச
    விட மாட்டார்களாம்"
    
    கேட்க ...கேட்க...அப்படியே காலுக்குக் கீழுள்ள
    நிலம் நகர்வது போல இருந்தது.
     இதயம் சில்லு சில்லாக உடைந்தது போல் இருந்தது.
    
    தலை சுற்றி அப்படியே கீழே  உட்கார்ந்தாள்.
    
     ஆமாம்....மாதவன் சமாதானமாக போய் விட்டான்.
    தான் நல்லவன் என்பதைக் காட்டிக் கொள்ள
    கமலாவை பகடைக்காயாய் பயன்படுத்திக்
    கொண்டான் .
    
    இனி காலத்துக்கும் அண்ணிக்கு
    கமலாதான்  எதிரி ...இது எத்தனை 
    தங்கைகளுக்குத் தெரியப் போகிறது.
 
    
 
      
   
  
  
  
  
  
  
  
  
  

Comments

Popular Posts