கைபேசிக்குள் பள்ளி

   
             கைபேசிக்குள் பள்ளி

    கைகள் கோத்து  கதைகள் பேசி
   களித்த காலம் போச்சு!
   கற்ற பள்ளியைக் கண்டு வர
   கடவுச்சீட்டு வேண்ட லாச்சு!
       
    புத்தகப் பையும் சீருடையும்
    புதைந்து கிடக்க லாச்சு!
    புதைமிதியும் நடை மறந்து
    பழுதி யாகிப் போச்சு!
       
                        கைபேசிக்குள் பள்ளி
                         களை இழந்தது வகுப்பு !
                             
  ஆசிரியர் காட்டும்  கோபம் எல்லாம்
  அடங்கி நாளும் ஆச்சு!
  அலங்கார  நடையில் பாடம் நடத்தும்
  ஆசை   ஓங்கி யாச்சு!
       
   செய்முறை பயற்சி எல்லாம்
   செவ்வனே நடக்க லாச்சு!
   செய்து  பார்க்க ஆய்வ கமும்
   செல்ல  வழியில் லாமல் போச்சு!
   
                             கைபேசிக்குள் பள்ளி
                             களை இழந்தது வகுப்பு !
                                
   பகுத்து உண்ணும் பழக்கம் எல்லாம்
   பள்ளியோடு  நின்று போச்சு!
   பக்கத்தில் நண்பனைத் தேடித் தேடி 
   பகலும் சாஞ்சுப் போச்சு!
                   
    ஓடி  ஆடும் கால்கள் எல்லாம்
    ஓய்ந்து  முடங்க லாச்சு             
    ஓட்டம் ஆட்டம் எதுவு மில்லா
    ஓய்வே கல்வி என்ப தாச்சு!
    
                      கைபேசிக்குள் பள்ளி
                      களை இழந்தது வகுப்பு!
                        
பள்ளி மணி சப்தம் கேட்டு
பல மாத மாகி யாச்சு
பழசை எல்லாம் நினைத்துப் பார்த்து
பகலும் வெறுமை ஆச்சு!
                       
                         
 வரிசையில் நிற்கும் பண்பு யாவும்
 வழி தெரியாமல் போச்சு
 வகுப்பு மாணவன் பெயரை மறந்து
 வருசக் கணக்காய் ஆச்சு!
 
                           கைபேசிக்குள் பள்ளி
                           களை இழந்தது வகுப்பு !
                              
 இறை வணக்கம் பாடா வகுப்பு
 இனிமை குறைந்துப் போச்சு
 இடைவேளை  நேர மகிழ்ச்சி யாவும்
 இடை நிற்ற லாகிப் போச்சு!
                          
           
 என்று திறக்கும் பள்ளி என்று
 ஏக்கம் அதிகம் ஆச்சு
 எமனாய் வந்த தொற்று நோயால்
 எங்கள் கல்வி தொலைந்து போச்சு!
 
                            கைபேசிக்குள் பள்ளி
                            களை இழந்தது வகுப்பு!
        
          
        
  
    
  !
                   
    
                         
 
 
          
        

Comments

  1. உண்மை நிலையை அருமையாய் உங்கள் வரிகளுக்குள் புகுத்தியுள்ளீர். மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts