குழலினிது யாழினிது...

  குழலினிது யாழினிது....


" குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
  மழலைச்சொல் கேளா தவர்
                            குறள்.  : 66

குழல்  _  புல்லாங்குழல்
இனிது  _  இனிமையானது
யாழ்     _ யாழ் என்னும் இசைக்கருவி
இனிது _ இனிமையானது
என்ப    - என்று சொல்லுவர்
தம் மக்கள் _  தமது மக்கள்
மழலை  _ குதலை , பால் மணம் மாறா பேச்சு
சொல்.    _ மொழி , பேச்சு
கேளாதவர் _  கேட்காதவர்

தங்களுடைய குழந்தைகள் குழறும் மழலைச்
சொல்லைக் கேட்டு  மகிழாதவர்கள்தாம்
பிறர் வாசிக்கும் புல்லாங்குழல் இசையையும்
மிழற்றுகின்ற யாழிசையையும்  இனிது என்று
கூறி மகிழ்வர்.

இசை என்பது செவிக்கு இன்பம் ஊட்ட வல்லது.
குழல் , யாழ்  ஆகிய கருவிகளை மீட்டி
எழும் இசை விலங்குகளைத் தன்வயப்
படுத்தும் ஆற்றல் மிக்கதாகும்.
எத்தகைய இசைக்கருவியாலும் மீட்ட முடியாத
இனிமையானது குழந்தைகளின் மழலைப் பேச்சு.
அது கேட்கக் கேட்க தெவிட்டாதது.
பொருள் விளங்காத அந்த மொழியை
எந்த இசைக் கருவியிலும் மீட்டுதல்
அரிதினும் அரிது.
எல்லா குழந்தைகளின் மழலைப் பேச்சும்
  சுவையானதுதான்.
ஆனால் வள்ளுவர் தம்மக்கள் என்று கூறியதன்
காரணம் தம்  மக்கள் மீது எப்போதுமே அலாதி அன்பு
இருக்கும்.தம் குழந்தைகளை அன்புருவாக
காண்பதால் பேசும் மழலையிலும்
இனிமையை மட்டுமே உணருகின்ற
இயல்பு தானாகவே ஒவ்வொரு பெற்றோரிடமும்
வாய்த்திருக்கும்.
பேசும் பக்குவம் வராத குழந்தைகளின்
பேச்சு மட்டுமே மழலை எனப்படும்.
இதனை குதலை என்றும் கூறுவர்.
கலித்தொகையில் ஒரு தாய்" அத்தத்தா....
என்று பிஞ்சு வாயில் எச்சில் ஊற  தன்
குழந்தை கொஞ்சுமொழி பேசுவதைக்
கேட்டு மெய் சிலிர்த்தாள் "என்று கூறப்பட்டுள்ளது.
" நாவாற் பயின்று பேசப்படாத ,
கேட்டார்க்கு மகிழ்ச்சியைத் தர வல்லது
இனிய குதலைச்சொல்
"என்கிறது
அகநானூறு.
அமிழ்தாய் ஊறும் அமுதமொழி மழலை மொழி.
  அதற்கு ஈடாய்ப் பேசும் தாய்...
  தாய் குழந்தையோடு பேசும்
  மொழியை என்னவென்பது?
  அப்பப்பா என்னதொரு உலகம்...
  குழந்தைக்கும் தாய்க்குமான உலகம்...
  அந்த உளறலைக் கேட்டல் எத்துணை இன்பம் !
  நி..னை..த்..தா...லே.....இ...னி..க்..கு...ம்.
மொத்தத்தில் மழலைச்சொல் கேளாதவரே
குழலிசை இனிது, யாழிசை இனிது என்று
கூறுவர் என்கிறார் வள்ளுவர்.

English couplet. :

"The pipe is sweet, the  lute is sweet ,by  them't
Will be averred,
Who music of their infants ' lisping lips
have never heard "

Explanation :

"The pipe is sweet, the lute is sweet" say those
Who have not heard the prattle of their own children.

Transliteration :

"Kuzhalinidhu yaazhinidhu enpadham makkaL
mazhalaichchol KaeLaa thavar "

Comments

Post a Comment

Popular Posts