கொக்கரக்கோ...கோ
சேவற்கோழி நான்கைந்து முறை கூவிக் கொண்டிருந்தது.
எரிச்சல்பட்ட பெட்டைக்கோழி"" விடியும் முன் ஏன் இப்படி கூவி கூப்பாடு போடுறீங்க...
நாங்கள் எல்லாம் தூங்குறது கண்ணுக்குத் தெரியல...."
என்று கோபப்பட்டது.
" அடி பைத்தியக்காரி .உனக்கு தூக்கம் வந்தால்
நீ போய் சத்தம் போடாமல் தூங்கு.
அதற்குபோய் ஏன் இப்படி கனைக்கிற..."
"நான் கனைக்கிறேனா...நான் கனைக்கிறேனா...."
"சரி...சரி ...கோபப்படாத....போய் தூங்கு
நான்என் வேலைய பார்க்கிறேன்..."
"வேலை....பொல்லாத வேலை...
கால்காசுக்கு பயனில்லாத வேலை..."
"என்ன சொன்னா....என்ன சொன்னா....
கால் காசுக்குப் பயனில்லையா...."
"பின்ன...நீ கூவி....கூவி தொண்டைத் தண்ணி
வற்றுறதுதான் மிச்சம்
யாராவது ஒரு கை இரை போடுவாகளா... "
" நான் கூவல என்றால் எப்படி விடியும்?
இருட்டாகவே இருக்கும்.பரவாயில்லையா? "
என்றது சேவல்.
"ஆமா ...ஆமா நீங்க கூவி தான் பொழுது விடியுது"
சலித்துக் கொண்டது பெட்டை.
"நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
நான் கூவிதான் பொழுது விடியுது.அது தான் உண்மை"
பெருமைப்பட்டுக் கொண்டது சேவல்.
" நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்குமாம்.
இப்படி ஒரு நினைப்பு இருக்கிறதாகும்"
காட்டமாகப் பேசியது பெட்டை.
"சும்மா பேசாம கெட....நான் கூவணும்.
அப்போது தான் சூரியன் உதிக்கும்.....கோக்கரக்கோ...கோ."
கடமையில் கண்ணாய் இருந்தது சேவல்.
" ஐயோ...ஐயோ இப்படி ஒரு முட்டாள நான்
எங்கேயும் பார்க்கல ...தலையில் அடிச்சிக்கலாம்
போல் இருக்கு ..."
" என்ன சொன்னா ...என்ன சொன்னா ? "
மறுபடியும் ஒருமுறை சொல்லு " ஆத்திரப்பட்டது சேவல்.
" ஒருமுறை என்ன ...ஆயிரம் முறை சொல்லுவேன்.
நீங்கள் ஒரு முட்டாள். முட்டாள்...முட்டாள்...முட்டாள் "
அழுத்தம் திருத்தமாகக் கூறியது பெட்டை.
" நான் கூவவில்லை என்றால் சூரியன் அப்படியே தூங்கிவிடும்"
கொண்டையைக் கொண்டையை ஆட்டியது சேவல்.
" சும்மா கொண்டையைக் கொண்டையை ஆட்டாதே.
நாளை ஒரு நாள் மட்டும் நீ கூவாமல் இரு.
சூரியன் உதிக்கிறதா...இல்லையா என்று பார்ப்போம்."
" பார்ப்போம்...பார்ப்போம்"
" பார்க்கத்தானே போறேன்.
சூரியன் உதிக்காவிட்டால் நீ சொலுறத
நான் நம்புகிறேன்...சவாலா ..." கேட்டது பெட்டைக்கோழி.
" ஒரு நாளைக்கு என்ன நாலு நாளைக்கு நான் கூவப்போவதில்லை
நீ அப்படியே இருட்டில் கிடக்கப் போகிறாய். "
" அப்படியாவது கூவாம கிடங்க ...நாலுநாள் உலகம்
நிம்மதியா தூங்கும் "
" நீயே வலிய வந்து கூவுங்க கூவுங்க
என்று கெஞ்சும் வரை நான் கூவப் போறதில்லை"
வீம்பாக பேசியது சேவல்.
" சவால்...சவால் தான் .நாளைக்கு விடியட்டும் பார்ப்போம் "
இன்றைய விவாதத்தை முடித்து வைத்தது பெட்டை.
மறுநாள் வரை அதே வீறாப்பாக சுற்றிக்
கொண்டிருந்தது சேவல்.
ஆனால் மனதிற்குள் ஏதோ ஒரு கலக்கம்.
" ஒரு வேளை பெட்டை கூறியது போல சூரியன்
தானாகத்தான் உதிக்குமோ?
நான் தான் அவசரப்பட்டு வார்த்தையை
விட்டுட்டேனோ "மண்டைக்குள் ஏதோ குடைய ஆரம்பித்து.
".சே...சே அப்படி இருக்காது?
இத்தனை நாள் நான் கூவிய பிறகு தானே
சூரியன் உதித்து. நாளையும் அதுதான் நடக்கும்."
தனக்குத் தானே சமாதானப்படுத்திக் கொண்டது சேவல்.
மறுநாள் அதிகாலை.
வழக்கம் போல் மறுநாள் காலையில் கூவுவதற்காக கோ..
என்று தொண்டை வரை வந்த குரலை அப்படியே
அடக்கிக் கொண்டது சேவல்.
பெட்டைக்கோழி பார்த்தும் பார்க்காதது போல் முகத்தைத்
திருப்பி வைத்துக் கொண்டது.
கொஞ்சம் கொஞ்சமாக நேரமாகிக் கொண்டே வந்தது.
சேவல் மனதில் படபடப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது.
மணி ஆறு ஆயிற்று.
சேவலின் கண்கள் கிழக்கு நோக்கியே இருந்தன.
" ஏதும் ஏறுக்கு மாறாக நடந்து விடக்கூடாதே "என்ற பதற்றம்
முகத்தில் தெரிய அப்பப்போ...தலையை வெளியில்
நீட்டி எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.
நேரம் நகர நகர இருட்டும் கொஞ்சம் கொஞ்சமாக
நகர்ந்து வெளிச்சத்திற்கு இடம் கொடுக்க
ஆரம்பித்தது.
கிழக்கு வெளுப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
" பெட்டை சொன்னது உண்மையாகி விடுமோ?
சேவலுக்கு இப்போது கால்கள் உதற ஆரம்பித்தன.
உள்ளுக்குள் என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம்.
ஓரக்கண்ணால் பெட்டையைப் பார்த்தது.
" இன்னும் சற்று நேரத்தில் சூரியன் உதிக்கப் போகிறது.
உன் சாயம் வெளுக்கத்தான் போகிறது." என்றது பெட்டைக்கோழி.
பெட்டைக்கோழி நினைத்தது போல் சாயம்
வெளுக்கத்தான் செய்தது.
கீழ் வானம் சிவக்கத்தொடங்கியது.
சூரியன் நான் வரலாமா? என்பது போல்
மெதுவாக வந்து எட்டிப் பார்த்தது.
சேவலுக்கு பகீர் என்று இருந்தது.
அவமானத்தால் உடல் குறுகிப் போனது.
இத்தனை நாள் இருந்த கர்வம் ஒரே நொடியில்
விழுந்து தவிடுபொடியாகிப் போனது.
பெட்டைக்கோழி "பார்த்தாயா ... நான் சொல்லல...
சூரியன் தானேதான் உதிக்கும் ...இப்போ புரிகிறதா
இப்போ புரிகிறதா.."என்று சேவலை
ஒரு பார்வைப் பார்த்தது.
சேவலுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.
" இதெல்லாம் இயற்கை நியதி.
யார் சொல்லியும் எதுவும் நடப்பதில்லை...
காற்றுவீசாமல் இருக்கப்போவதில்லை...
கடலில் அலை அடிக்காமல் நிற்கப் போவதில்லை..
மரங்கள் காய்க்காமல் ஓயப் போவதில்லை....
இதெல்லாம் இயற்கை நியதி
அதேபோன்றுதான் சூரியனும் உதிக்காமல் இருக்கப் போவதில்லை.
யார் சொல்லியும் இந்த வேலைகள் எதுவும்
நடைபெறுவதில்லை.
இயற்கை யாவும் அதனதன் வேலையை
அதனதன் நேரத்தில் செய்து கொண்டுதான் இருக்கும்." புரியும்படியாக எடுத்துக் கூறியது பெட்டை.
"இப்படி ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேனே!"
அவமானத்தால் தலை குனிந்தது சேவல்.
" அட...விடுங்க...குயிலைப் போன்று நம்மால் பாட முடியுமா...
அதுபோல உங்களைப்போல யாராலும் கூவ முடியுமா...
நீங்க நீங்கதான்...விட்டுத் தள்ளுங்க"
சேவலையும் விட்டுக் கொடுக்காமல் பேசியது பெட்டைக்கோழி.
சேவலுக்கு இப்போதுதான் உண்மை புரிய ஆரம்பித்து.
ண
Comments
Post a Comment