காளமேகத்தின் கவிமழை

      காளமேகத்தின் கவிமழை
     
எண்ணற்ற  புலவர்கள் தமிழுக்குப்
பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களுள் தனிப்பிறவி எடுத்து வந்தவர்
கவி காளமேகம் என்றால் மிகை ஆகாது.
காளமேகம் பாடலைப் படிக்காமல்
தமிழ் இலக்கியம் பற்றிப் பேச முடியாது.
ஏன் கவிதைகூட எழுத முடியாது.
தற்கால கவிஞர் அனைவருமே
காளமேகம் பாடலில் மூழ்கி எழுந்தவர்களாக
நொடிப்பொழுதில் பாடல் எழுதும்
ஆற்றல் மிக்கவர்.
இதனால் இவரை ஆசு கவி என்று கூறுவர்.
சிலைடை கவி  அதாவது இரட்டை அர்த்தப் பாடல்கள்
பாடவேண்டும் என்றால் காளமேகத்திற்குக் 
கொண்டாட்டம்.
இவருடைய பாடல்களில் விவேகமும் இருக்கும்.
கூடவே குறும்பும் குசும்பும் கொஞ்சி
விளையாடும்.
சொல்லில் பஞ்சம் இருந்தாலும்
பொருளில் பஞ்சம் இருக்காது.

இவரது இயற்பெயர் வரதன். 
சாதாரண வரதனாக இருந்தவர்
காளமேகமாக மாறி கவிமழை பொழிவதற்குப்
பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உண்டு.
இவர் ஒரு கோவிலில் உதவியாளராக வேலை 
பார்த்து வந்தாராம்.
அப்போது கோவிலில் நாட்டியம் ஆடும்
மோகனாங்கி என்ற பெண்மீது காதல்
அரும்பியது.
நாளாக ஆக காதல்
தீராக்காதலாக மூண்டெழுந்தது.
இருவரும் கோவில் உள்ளேயே 
காதலை வளர்த்துக் கொண்டனர்.
ஒருநாள் மோகனாங்கி வரவுக்காக 
கோவிலின் உட்புற பிரகாரத்தில் 
காத்திருந்திருக்கிறார் வரதன்.
நெடுநேரமாகியும் மோகனாங்கி வரவில்லை.
அப்படியே பிரகாரத்தில் அசந்து 
தூங்கிவிட்டார் .

நேரமாகியதால் கோவில் நடை 
சாத்தப்பட்டுவிட்டது.
கோவிலின் மற்றொருபுறத்தில் அந்தணர்
ஒருவர் சரஸ்வதிதேவி அருள் வேண்டி
 தவம் இருந்திருக்கிறார்.

சரஸ்வதி தேவியும் அந்தணருடைய 
வேண்டுதலுக்கிணங்க அங்கு வந்திருக்கிறார்.
சரஸ்வதிதேவி தன் அருள் தருவதற்காக 
தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அந்தணர்
வாயில் உமிழப் போக அந்தணருக்கு வந்தது
கோபம்.
"யாரடி எச்சிற்றம்பலத்தை என் வாயில்
உமிழ்வது "என்று வெகுண்டு எழுந்து
வாங்க மறுத்து சென்றுவிட்டாராம்.
இப்போது சரஸ்வதிதேவி தான் தர
நினைத்த வரத்தை யாருக்காவது
தந்துவிட வேண்டும் என்ற ஆசையில்
அங்குமிங்கும் பார்க்கிறார்.
அங்கே வரதன் அயர்ந்த நித்திரையில்
இருப்பதைப் பார்த்து
அந்தத் தாம்பூலத்தை
வரதன் வாயில் உமிழ்ந்துவிடுகிறார்.

வரதன் தன் காதலி நினைப்பிலேயே இருந்ததால்
தன் காதலி மோகனாங்கிதான்
 உமிழ்வதாக எண்ணி ஏற்றுக்கொண்டானாம்.
இப்போது சரஸ்வதிதேவியின் அருள்
வரதனுக்குக் கிடைத்துவிட்டது.
அன்றுமுதல் கற்காமலேயே கவிபாடும்
 புலமை வந்ததாக ஒரு கதை உண்டு.
கார்மேகமென கவி மழைப் பொழிய
காரணம் இதுதானாம்.

வரதன் என்ற பெயர் மாறி 
கவி காளமேகம் வாழ்ந்த காலம் 
பதினைந்தாம் நூற்றாண்டு
என்பர்.
ஆசுகவி, மதுர கவி , சித்திரக்கவி , 
வித்தாரக்கவி
அத்தனை கவிப்பட்டங்களும்
இவருக்கு உண்டு.

எந்த ஒரு சொல்லைக் கொடுத்தாலும் 
நொடிப்பொழுதில்
பாடி அசத்திவிடுவார்.
சொல் என்ன...எழுத்தைக் கொடுத்தாலும்
போதும். எதற்கும் கவி முந்தி வந்து
நிற்கும்.கூடவே நகைச்சுவையும்
நையாண்டியும் கைகோத்து ஓடிவரும்.

பால்காரர்களைப் போலவே மோர் விற்போரும்
நிறைய தண்ணீர் கலப்பது வழக்கம்.
ஒருமுறை ஒரு பெண்ணிடம் மோர் வாங்கி
குடித்தார் காளமேகம்.
மோரிலே நீர் அதிகமாக கலக்கப்பட்டிருப்பதை
 உணர்ந்தார்.
 அவள் மோர் என்று கொடுத்தது அவருக்கு 
 நீர் போலவே இருந்திருக்கிறது.
இப்போது மோர்க்காரிக்கு ஒரு பாடல்
பாட வேண்டும்.
பாடிவிட்டார். கேளுங்கள்.

கார் என்று பேர்படைத்தாய் 
ககனத்து உறும்போது
நீரென்று பேர்படைத்தாய் 
நீள்தரையில் வந்தற்பின்
வாரொன்று மென்கலையாய்ச்சியர்கை
 வந்தற்பின்
மோரென்று பேர் படைத்தாய் 
முப்பேரும் பெற்றாயே !

வானத்தை அடையும்போது உனக்கு கார்
என்ற பெயர்.
பூமிக்கு வந்த பின்னர் நீர் என்பது
உனது பெயராகியது.
ஆய்ச்சியர் கைகளிலே வந்ததும் மோர்
என்ற பெயர் பெற்றாய்.
ஒரே நேரத்தில் மேகமாகவும்
தண்ணீராகவும் மோராகவும்
அழைக்கப்படும் மூன்று பெயர்
பெற்று பெற்றுவிட்டாய் என்று
 மோரைப் பார்த்துப்
பாடுவது போல மோரில் அதிக அளவு
தண்ணீர் கலந்திருக்கிறது என்பதை
சொல்லி நையாண்டி செய்திருக்கிறார்
காளமேகம்.

மோர்க்காரிக்கே பாடலா!

சொல்லை வைத்துதானே பாடுகிறார்.
எழுத்தைக் கொடுத்துப் பார்ப்போம்.
பாடத்தெரிகிறதா என்று பார்ப்போம்
என்று நினைத்தார் ஒரு பெரியவர்.
நேரே காளமேகத்திடம் சென்று
ககர வரிசை எழுத்துகள்
மட்டுமே வரும்படி பாடுங்கள் பார்ப்போம்
என்று சவாலாகக் கேட்டுவிட்டார்.

க, கா, கி, கீ ,கு கூ.... வரிசைதானே ...
இதோ ...இப்பொழுதே என்று பாடத்
தொடங்கிவிட்டார் காளமேகம்.

"காக்கைக்கா காகூகை
 கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் 
கொக்கொக்க _ கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா " 

என மறுநிமிடம் கடகடவென்று பாடல் 
வந்து விழ கேட்டவர்
வாயடைத்துப்போய் நின்றார்.
அது எப்படி கா கீ கு கூ என்று
சொல்லிவிட்டுப் போனால் விட்டுவிடுவோமா?
பொருள் சொல்லையா மடக்கிப்
பிடித்தார் பெரியவர்.
பொருளில்லாமல் பாடலா?
இதோ பொருள் கேளும்.

காக்கைக்கு ஆகா கூகை _ காகத்திற்கு இரவில்
கூகையை வெல்ல முடியாது
கூகைக்கு ஆகா காக்கை _ கூகைக்கு பகலில் காகத்தை            வெல்ல முடியாது
கோக்கு - அரசனுக்கு
கூ - பூமியில்
காக்கைக்கு _  தன் நாட்டை பகைவரிடமிருந்து காப்பதற்கு
கொக்கொக்க _ கொக்கைப் போல  
                               உரிய காலம் வரும்வரை
                               காத்திராவிட்டால்
கைக்கைக்கு -பகையை எதிர்த்து
காக்கைக்கு _  நாட்டைக் காப்பதற்கு
கைக்கு  - திறமையான அரசனாயினும்
ஐக்கு ஆகா -இயலாதது ஆகிவிடும்


 விளக்கம் :

காக்கையானது பகலில் 
கூகையை வெல்ல முடியும்.
கூகையானது இரவில் 
காக்கையை வெல்ல முடியும்.
கோ என்று சொல்லப்படுகிற 
அரசனானவன்
பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் 
ஆந்தையைப் போலவும் பகலில் 
காக்கையைப்போலவும் 
காக்க வேண்டுமாம்.
எதிரியின் பலவீனமறிந்து
 கொக்கு காத்திருப்பது 
போல தக்க நேரம் வரும்வரை
காத்திருந்து எதிரிகளைத் தாக்கி 
வெற்றி பெற  வேண்டும்.
கொக்கைப்போல காத்திராவிட்டால்
திறமையான  மன்னனாக இருந்தால்கூட
வெற்றி பெறாமல் போக நேரிடலாம்"
 என்பது பாடலின் பொருள்.
 
 காக்கைக்கையோடு கூகையையும்
 அழைத்து வந்து
 கூடவே கொக்கு ஒன்றையும்
ஒற்றைக் காலில் குளக்கரையில்
நிற்க வைத்து
 மன்னனுக்குப் பாடம் சொல்லித்தர
 
 ககர வரிசை எழுத்துகளா...!
 அம்மாடியோவ்....
யாரப்பா இவர்?
இவர் புலமைக்குமுன்
யார் நிற்றல் கூடும்?
 
வியந்துபோய் பார்த்துக்கொண்டிருந்த 
இன்னொரு மனிதருக்கு 
தகர வரிசை கேட்டுப் பார்ப்போமே என்று
ஒரு ஆசை.

தன் ஆசையை காளமேகத்திடம் 
சொன்னதுதான்  தாமதம்
த , தா , தி, தீ ,து, தூ ...வெனக்
கவிமழை அருவியெனக் கொட்டத் 
தொடங்கியது.

தத்தித்தா தூதுதி தாதூதித் தந்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது ?

என்ன..தத்தக்கா...பித்தக்கா என்று பாடல்
இருக்கிறது என்று சிரிப்பாக வருகிறதல்லவா!

பாடல் தத்திக்கா துத்திக்கா என்று
இருந்தாலும் பாடலின் பொருளைக்  கேட்டால்
அசந்து போவீர்கள் ..
தித்திப்பான தேனுண்ட மயக்கத்தில்
மிதந்து போவீர்கள்..

தகரவரிசை கண்டமேனிக்குத்
தடம் புரண்டு கிடக்கிறது.
பொருள் மட்டும் சீராக வருகிறது.
பாருங்கள்.

வண்டைப் பார்த்துப் பாடுகிறாராம்
காளமேகம்.

தத்தி _ தாவிச்சென்று
தாது  _ பூவில் இருக்கும் தேன்
ஊதுதி  _ நுகர்கின்றாய்
தாது ஊதித்_  தேனை உண்ட பின்னர்
துத்தி _  ரீங்காரமிட்டு
துதைதி _  நெருங்கி  
துதைது  _ மிகுதியாக உண்ண வேண்டி
                       வேறொரு பூவிற்குச் சென்று
அத்தா தூதி _ அந்தப் பூவின் தேனையும்
                            உண்டு வெளி வருகிறாய்
தித்தித்தது _  அவை 
                           தித்திப்பாக இருந்திருக்கும்.
இத் தித்தித்த தாது  _ அந்த வகையில் உனக்கு 
                            மிகவும் தித்திப்பாக இருந்த தேன்  
எத்தாதோ _ எந்த மலரில் உள்ள தேனோ ?
தித்தித்தது யாது _ அவ்வாறு இனித்தமைக்குக்
                                     காரணம் யாதோ?
  
 விளக்கம் :

தத்தித் தாவி பூவிலிருக்கும் தேன்துளியாகிய
 தாதுவை உண்ணும் வண்டே  , நீ ஒரு
 பூவிலுள்ள தேனை உண்ட பின்னர்
மீண்டும் இன்னொரு பூவிற்குச் சென்று
தேனை  எடுத்து உண்ணுகின்றாய்.
இப்படி வேறுவேறு பூக்களிலிருந்து
தேன் எடுத்து உண்ணும்போது
 எந்தப் பூவிலிருந்து எடுத்த தேன்
 மிகவும் தித்தித்திப்பாக இருந்தது.
அப்படி மிகுதியாகத் தித்திப்பாக
இருந்தமைக்கான காரணம்தான்
யாதோ?   
அதனைக் கூறுவாயாக"

தத்தக்கா ...பித்தக்கா  ...தத்துதி ...
தாதூதி... தித்திக்க....தித்திக்க
திவட்டாமல் இன்பம் தந்தக்கா
இந்தக் காவன்றி வேறெந்தக் கா?

காளமேகத்திற்கு சட்டென்று கோபம்
வந்துவிடுமாம்.ஒருவிதத்தில் 
விசுவாமுத்திர முனிவரும் 
இவரும் ஒன்றுதான் என்பார்கள்.
விசுவாமுத்திரர் கோபம் வந்தால் சாபம்
கொடுத்து விடுவாராம்.
காளமேகத்திற்குக் கோபம் வந்தால் 
வசை பாடிவிடுவாராம்.

ஒருமுறை இப்படித்தான் திருமலைராயன்பட்டினம்
 என்ற ஊருக்கு வந்திருக்கிறார் காளமேகம்.
அங்குள்ள அரசவைக் கவியாகிய 
அதிமதுரகவி என்பவரிடம் போட்டி போட்டுப் 
பாடல் பாட வேண்டும்
என  அந்த நாட்டு அரசன் 
கேட்டுக் கொண்டான்.
பாடல் பாடியாயிற்று .
வெற்றி பெற்றுவிட்டார் காளமேகம்.
மன்னன் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மன்னனுக்கு தன் ஆஸ்தான கவியை 
வென்று விட்டானே என்று மனதிற்குள் 
கோபம்.பொறாமை என்றே சொல்ல வேண்டும்.

தன் ஆஸ்தான கவி இருக்க 
இன்னொருவருக்கு பாராட்டி பரிசளிப்பதா?
மனம் ஏற்க மறுத்தது.
பரிசு தர மனமில்லாமல் ஏளனம்
செய்வதுபோல் நடந்து கொண்டார்.
நாளை நாளையென 
காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தார்.

சும்மாவே காளமேகத்திற்குக் கோபம் 
மூக்கில் இருக்கும்.
இப்போது தன்னை அரசன் அவமானப்படுத்தி
விட்டான் என்ற தன்மானப் பிரச்சினை வேறு.
சும்மா  விடுவாரா .?..
வெகுண்டெழுந்தார்....
வார்த்தைகள் தடிமனாக வந்து விழுந்தன.

"கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் _ நாளையே
விண்மாரி யற்று வெழுத்து மிகக்கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான் "

 என்று வசை பாடி விட்டு அங்கிருந்து
 கிளம்பிவிட்டார்.

 இது கொலைகாரர்கள் இருக்கும் ஊர்.
கோள் மூட்டல், வஞ்சகம் செய்தல் என்பவற்றைக் 
கற்றிருப்பவர் நிறைந்த ஊர்.
கட்டுப்பாடற்று காளைமாடுகள் போல்
சுற்றித் திரியும் தறுதலைகள் 
 மிகுந்திருக்கும் ஊர்.
இப்படிப்பட்டோர் இருக்கும் ஊரில்
நாளை முதல் மழை பெய்யாமல் 
வறண்டு போகட்டும்.
புழுதி மழைமாரி வீசட்டும் .
மண்ணே மழையாகப் பெய்யட்டும்.
என்று சாபம் கொடுப்பதுபோல் 
பாடி இருக்கிறார்.

அறம்பாடுதல் என்பது இதுதானோ?

புலவர் மனம் வருந்திப் பாடிவிட்டால்....
ஊர் தப்பித்து விடுமா என்ன?

 பின்னர் மண்மழை பெய்து 
அவ்வூரே மண்ணால்
மூடப்பட்டதாகக் கூறுவர்.

கவிமழை பொழிந்து 
மண்மழை வரவழைத்த
மகா கில்லாடி காளமேகம்.

அப்பப்பா...கோபம்..கிண்டல் ...கேலி....
எதற்கெடுத்தாலும் பாடல்தானா !
 மழைக்காலம் எப்போதாவது வரும்.
காளமேகம் கவிமழை பொழிவதற்குக்
கால நேரம் கிடையாது.
கார் மேகம் தேவையில்லை.
 நினைத்த நேரத்தில் ..
நினைத்த இடத்தில்...
நினைத்தபடி ...
பெய்யும்.கானம் ஆறாக ஓடும்.
கவிமழையில் நனைய ஆவலா? 
மழை தொடர்ந்து பெய்யும்...Comments

  1. அருமையான பாடல்கள் விளக்கம் அதனினும் அருமை
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular Posts