விடாமுயற்சி
விடாமுயற்சி
" முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். "
முயற்சி செய்து உழைத்துக் கொண்டே
இருந்தால் செல்வம் பெருகும்.
முயற்சி ஒன்றுமே செய்யாமல்
சோம்பேறியாக இருந்தால் வறுமை
வாசலில் வந்து நிற்கும் என்கிறார் வள்ளுவர்.
வெற்றி சாதாரணமாக யாருக்கும்
கிடைத்து விடுவதில்லை.
விடாமுயற்சி இருந்தால் மட்டுமே
வெற்றி கிட்டும்.
வெற்றிக்காக நாம் பல படிகளைக்
கடந்துவர வேண்டியிருக்கும்.
அதில் ஏறி மேலே வரும்முன்
ஐயோ! அம்மா! ...மூச்சு வாங்கும்.
அதற்காக பயணத்தை இடையில்
விட்டுவிடக் கூடாது.
வெற்றிக்காக நாம் வகுத்து வைத்துள்ள
தவறுதலான பாடத்திட்டம் நம்மை
பலமுறை சறுக்கி விழச் செய்யும்.
எங்கே சறுக்கல் இருந்தது என
ஆய்ந்து அதைக் களைந்துவிட்டால்
பயணம் ஓரளவு சுமுகமாக இருக்கும்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
தொடங்கும்போது இதனை நம்மால்
செய்துவிட முடியுமா என்று மலைப்பாகத்தான்
இருக்கும்.
இதெல்லாம் எதற்கு? என்று
இடையில் விட்டுவிடலாமா என்றுகூட
தோன்றும்.
இவனுக்கெல்லாம் இது எதற்கு
என்று நாலுபேர் நாலுவிதமாக பேசுவார்களோ
என்று மனம் அங்கேயும் இங்கேயும்
அலை பாயும். தோற்றுப்போனால் கேலி
செய்வார்களே என்ற அச்சம் எழும்.
இதற்கெல்லாம் அஞ்சி ஒதுங்கி நின்றால்
ஒதுங்கி நின்று கொண்டே இருக்க
வேண்டியதுதான்.
போரில் தோற்றுப்போய் ஒளிந்து கிடந்த
ஒரு மன்னனுக்கு வெற்றிக்கான
வழியைச் சொல்லித் தந்தது ஒரு
சிறிய சிலந்திப் பூச்சி. எத்தனை முறை
கீழே விழுந்தாலும் எழும்பி எழும்பி
விடா முயற்சி செய்து தன் கூட்டைக்
கட்டி முடித்த சிலந்தியின் விடாமுயற்சி
மன்னனின் மனதில் ஒரு புதிய உத்வேகத்தைக்
கொடுத்தது. இழந்த நாட்டை மீண்டும்
மீட்க , விடாமுயற்சி வேண்டும் என்ற
பாடத்தைச் சொல்லித் தந்தது.
பீனிக்ஸ் பறவை எத்தனை முறை
வீழ்ந்தாலும் என் முயற்சியைக் கைவிடப்
போவதில்லை என்று பிடிவாதம் பிடித்தது.
புதிய பறவையாக உயிர் பெற்று
மீண்டு வரும்வரை தன் முயற்சியைக்
கைவிட்டு விடவில்லை. இறுதியில்
தன் முயற்சியில் வெற்றியும் பெற்றது.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக்
கண்டுபிடித்தார் என்று பெருமையாகச்
சொல்லிக் கொள்கிறோம்.
அவர் அந்த வெற்றியை அடையும்முன்
ஆயிரம்முறை தோற்றிருக்கிறார்.
அதற்காக அவர் அவருடைய முயற்சியைக்
கைவிட்டுவிடவில்லை.
தொடர் ஆராய்ச்சி செய்ததன் விளைவாகவே
ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச்
சொந்தக்காரர் என்னும் உயர்நிலையை
தாமஸ் ஆல்வா எடிசன் அடைய முடிந்தது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம்
லிங்கன் "நான் தோல்வியைத் தவிர வேறு எதுவும்
கண்டதில்லை " என்று விரக்தியாக
ஒருமுறை கூறியிருந்தார்.தொடர் தோல்வி
யாரையுமே துவள வைத்துவிடும்.
ஐந்துமுறை தேர்தலில் தோற்றுப் போனார்.
அதற்காக அவர் தனது முயற்சியை
விட்டுவிட்டு தேர்தலே வேண்டாம் என்று
ஒதுங்கி ஓடிவிடவில்லை.
இறுதியாக வெற்றி பெற்று உலகமே
பாராட்டும் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தார்.
" நான் மெதுவாக நடப்பவன்தான்;
ஆனால் ஒருபோதும் பின்வாங்குவதில்லை "
என்பார் ஆபிரகாம் லிங்கன்.
ஒருமுறை செயலில் இறங்கிவிட்டால்
தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருக்க வேண்டும்.ஒருபோதும்
முயற்சி செய்வதிலிருந்து பின்வாங்கவே
கூடாது என்பது ஆபிரகாம்
லிங்கன் நமக்குச் சொல்லித் தந்த பாடம்.
"அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் "
வெற்றி பெற வேண்டுமா ?
விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும்
அழைத்துக் கொண்டு
உழைப்போடு கை கோத்து நடந்து பாருங்கள்.
குறிக்கோள் நிச்சயம் நிறைவேறும்.
நீங்கள் தேர்ந்தெடுத்தத் துறையில்
வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
நாள்தோறும் குறைந்தபட்சம் ஐந்து
பக்கங்களாவது எழுதிவிட வேண்டும்
என்று விடாமுயற்சியோடு எழுதியதுதான்
பெர்னாட்ஷாவைத் தலைசிறந்த எழுத்தாளர்
என்ற வரிசையில் கொண்டு நிறுத்தியது.
எவ்வளவுதான் திறமையும் துறைசார்
அறிவும் இருந்தாலும் தொடர்ந்து பயிற்சிசெய்து
கொண்டு வரும்போதுதான் அதில்
நல்ல புலமை பெற முடியும்.
அல்லது அந்த அறிவு புழுதி படிந்த
பொருளாக வீட்டின் ஓர் ஓரமாக
தூங்கிக் கொண்டிருக்கும்.
அறிவாளிகள் எல்லோரும் வெற்றி
பெறுவதில்லை.திறமை இருந்தும்
சரியான முயற்சியில் ஈடுபடாததால்
பலர் தோற்றிருப்பார்கள்.
அவர்களின் தோல்வி நம் கண்முன்னே
வந்து நின்று நம்மை அச்சுறுத்தும்.
அவர்கள் முன் நானெல்லாம் எம்மாத்திரம்
என்ற தாழ்வு மனப்பான்மையைக்
கொண்டு வந்து நம்மை கீழ் நோக்கி இழுக்கும்.
யாருமே முதல் முயற்சியில் வெற்றி
பெற்றுவிடுவதில்லை. எவரெஸ்ட் சிகரத்தை
அடைந்த எட்மண்ட் ஹிலாரி
மற்றும் டென்சிங் போன்ற பலரும் முதல்
முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிடவில்லை.
தொடர் முயற்சியும் பயிற்சியும் செய்து
இந்த சாதனையைத் தங்களுக்குரியதாக்கிக்
கொண்டனர்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின் "
என்பார் வள்ளுவர்.
ஆமாங்க ....நினைத்தது நடக்க வேண்டுமானால்
அதில் உறுதியாக நிற்க வேண்டும்
அப்துல்கலாம் மிக எளிதாக
வெற்றி பெற்றுவிடவில்லை.
ஆரியபட்டாவின் தோல்வி தந்த பாடம்
அடுத்த முயற்சியான அக்னி வெற்றி பெற
வேண்டும் என்று, உறுதியோடு உழைக்கத்
தூண்டியது. வெற்றி பெற்று உலக
அரங்கையே இந்தியா பக்கம்
திரும்பிப் பார்க்க வைத்தது.
விழாமல் எழும்ப முடியுமா ?
தோற்றுப் போகாமல் வெற்றி கிட்டுமா?
தோற்கட்டுமே. ...அதனால் என்ன
அடுத்தது என்ன...என்ற கேள்வியோடு
அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து
கொண்டே இருக்க வேண்டும்.
தொடர்ந்து முயற்சி செய்தால்
இறுதியில் நிற்பது வெற்றிமட்டுமே
என்ற ஒன்றை மட்டுமே மனதில்
நிறுத்தி, காய்களை நகர்த்த வேண்டும்.
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் "
என்ற வள்ளுவரின் வரிகள் முயற்சியுடையார்
இகழ்ச்சியடையார் என்ற ஒரு
நம்பிக்கையைக் கொடுக்கும்.
முயற்சி செய்ய செய்ய நமக்குள்ளேயே
ஒரு ஆர்வம் வந்துவிடும்.
அந்த ஆர்வம் நம்மை மேலும்
செயலில் உறுதியாக ஈடுபட வைக்கும்.
செய் ..செய்... விடாதே ...பிடி
என ஓட வைக்கும்.
கனவிலும் வந்து தூங்க விடாமல்
துரத்தும்.
சிங்கம் தன் இரையைத் தேடும்
போது ஒரு இலக்கு வைத்துக்
கொள்ளும்.இடையில் எந்த
விலங்கு வந்தாலும் எட்டிப்பார்ப்பதே
இல்லை.அதன் கவனம் முழுவதும்
தான் முதலாவது குறி வைத்த
அந்த விலங்கின்மீதே இருக்கும்.
அது கிடைக்கும்வரை தன் முயற்சியைக்
கைவிடாது .அதன் பின்னாலேயே
ஓடும்.இரை கிடைக்கும்வரை
ஓட்டம் நில்லாது.
வெற்றி கிட்டும்வரை நம் ஓட்டமும்
அதுபோல்தான் இருக்க வேண்டும்.
"உலகிலேயே மிகப் பெரிய வெற்றி
உன்னை நீயே ஜெயிப்பதுதான் "
என்றார் மாவீரன் நெப்போலியன்.
நம் மனதை எங்கும் அலையவிடாமல்
கட்டி வைத்துக் கொண்டால் மட்டுமே
வெற்றி சாத்தியமாகும்.
வெற்றி கிடைக்கும்வரை என் முயற்சியை
கைவிடப் போவதில்லை என்று
கங்கணம் கட்டிக் கொண்டு உழைத்தால்
வெற்றிபெறுவது உறுதி.
வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் நம் கையிலே என்பதை கூறிய விதம் மிக அருமை.
ReplyDeleteArumaiyana pathivu.🌷🌷🌷🌷🌷
ReplyDeleteNice
ReplyDeleteநன்றி.
Deleteதொடர்ந்து படிக்கவும்.