காய் நெல் அறுத்து....

   காய் நெல் அறுத்துக் கவளம்....
பாண்டியன் அறிவுடை நம்பியைப்
பிசிராந்தையார் என்னும் புலவர் பாடியது.
மக்களவையில் பட்ஜெட் உரையின்போது 
 நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
கூறிய புறநானூற்றுப் பாடல்.

பட்ஜெட் உரைக்குப் பின்னர்
அனைவராலும் பலவாறு விமர்சிக்கப்பட்ட...
பாராட்டப்பட்ட பாடல்.

பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும்
 ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே 
நட்பு கொண்டிருந்தனர்.

சோழ மன்னன் வடக்கிருந்து உயிர் நீத்தப்போது 
பிசிராந்தையாரும் அவரோடு வடக்கிருந்து உயிர் 
நீத்தார் என்று வரலாற்றேடுகளில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.இவர்களது
நட்பை தமிழ்கூறு நல்லுலகு இன்றளவும்
 உயர் நட்பாகப் பேசி வருகிறது.

பிசிராந்தையார் வெறுமனே பாட்டு எழுதும்
புலவர் மட்டும் அல்லர்.
நல்ல அரசியல் புலமை மிக்கவர்.

பிசிராந்தையார் புறநானூற்றில் நான்கு
பாடலும் அகநானூற்றில் ஒரு பாடலும் 
நற்றிணையில் ஒரு பாடலும் பாடியுள்ளார்.

பாண்டியன் அறிவுடை நம்பி என்ற மன்னன்
தன் குடிமக்களை வருத்தி வரி வாங்கினான்.
இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாயினர் .
மன்னனிடம் சென்று எடுத்துரைக்கும் துணிவு
எவருக்குமே இல்லை.

மக்கள்  அனைவரும் பிசிராந்தையாரிடம் 
சென்று முறையிட்டனர்.
நீங்களாவது  மன்னனிடம் சென்று எங்கள்
நிலைமையை  எடுத்துரைக்க
வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

 பிசிராந்தையாரும் மக்களின் வேண்டுகோளை
 ஏற்று மன்னனிடம் போய் பேசுவதற்காகச்  சென்றார்.
அரசன் ஆயிற்றே நேரடியாக எதுவும்
சொல்லிவிட முடியாது.
சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டும்.
அதுவும் நயந்து சொல்ல வேண்டும்.
காரியமும் நடைபெற வேண்டும்.

 ஒரு அரசன் தன் குடிமக்களிடம்
எப்படி  வரி வசூலிக்க வேண்டும் என்பதை
 பாடல் மூலமாக மன்னனிடம் சொல்கிறார்.


பாடல் இதோ :

காய் நெல் அறுத்துக் கவளம்கொளினே ,
மா நிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதெனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்துகொளினே ,
கோடி யாத்து, நாடு பெரிதும் நந்தும்; 
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் 
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, 
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், 
யானை புக்க புலம் போலத் 
தானும் உண்ணான், உலகமும் கெடுமே .

திணை : பாடாண் திணை.      புறநானூறு: 184
துறை : செவியறிவறூஉ

செவியறிவுறூஉ எனப்படுவதாவது
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை
முறைதவறாமல்  செய்யுமாறு அவனிடம்
 நேரில் அறிவுறுத்தல்.
 
காய்நெல் _ விளைந்த நெல்
மா _ ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு
செறு _ வயல்
தமித்து  _ தனித்து
புக்கு  _ புகுந்து
யாத்து  _ சேர்த்து 
நந்தும்  _ தழைக்கும்
வரிசை  _  முறைமை 
பரிவு _ அன்பு 
தப _ கெட 
பிண்டம்  _  வரி
நச்சின் _ விரும்பினால்

ஒரு மா அளவுக்கு அதாவது ஒரு
 ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவு
கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை
அறுத்து சோறாக்கிக்  கவளம்
கவளமாகத் திரட்டி யானைக்குத் தீனியாகத்
தந்தால் அது  யானைக்குப் பல நாட்கள்
உண்ணப் போதுமானதாக இருக்கும்.
யானையும் பலநாள் உண்டு
பசி அடங்கி 
மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால்  நூறு வயல்களில் நெல் 
விளைந்து கிடக்கிறது.
யானை தன் போக்கில் வயலில் புகுந்து 
தின்னுமேயானால்
யானை வாயில் போகும் நெல்லைவிட
யானை காலடியில் மிதிபட்டு 
அழிந்து போகும்  நெல்லின்
அளவே மிகுதியாக இருக்கும். 

அதுபோன்றுதான் மன்னன்
அறநெறி அறிந்து மக்களிடம் வரி பெற்றுக் 
கொள்ளவேண்டும்.அவ்வாறு வரி
 பெற்றுக் கொண்டால் மட்டுமே
  மன்னன் இனிமையாக வாழலாம்.
மன்னனோடு சேர்ந்து  அவனதுநாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருப்பர்.

 மன்னன் அறிவற்றவனாக இருக்கிறான்.
அவனுக்கு அறிவுரை கூற வேண்டிய
இடத்தில் இருக்கும் அமைச்சர் பெருமக்களும்
அறங்கூறாது மன்னனை அவன் போக்கிலேயே 
விட்டுவிடுகின்றனர். 
மன்னன்  தன்விருப்பப்படி
குடிமக்களை வற்புறுத்தி
அறமற்ற வழியில் பெரும் தொகையை 
வரியாக வாங்குகிறான்.
அப்படி வரி வசூலித்து ஆட்சி நடத்துவது
மன்னனுக்கும் கேடாக அமையும். அவன் நாட்டு
மக்களுக்கும்  கேடாகவே முடியும் "
என்கிறார் பிசிராந்தையார்.

வரி வசூலிப்பு மக்களை வருத்துவதாக இருக்கக்
கூடாது என்பதற்கு யானை புகுந்த வயலை
 உவமையாக கூறி விளக்கியதின் மூலம் நல்ல வேளாண் அறிவும் நிதி மேலாண் திறனும் 
கொண்டவர் பிசிராந்தையார்  என்பது
 தெளிவாகத் தெரிகிறது. 


மன்னர்களுக்கு மட்டுமல்ல
தற்கால ஆட்சியாளர்களும் வரி வசூலிக்கும்போது தெரிந்து கொள்ள வேண்டிய ,எக்காலத்திற்கும்
உகந்த அறநெறியை உணர்த்தும் பாடல் இது
என்பது நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
உரையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

நிதி அமைச்சருக்கே நிதி மேலாண்மையைப்
பற்றிப் பாடம் சொல்லித் தந்த 
பிசிராந்தையாரின் நிதி மேலாண்மை அறிவை
என்னவென்பது!

Comments

Post a Comment

Popular Posts