நிற்க அதற்குத் தக

                   நிற்க அதற்குத் தக


குளக்கரையில் கொக்கு ஒன்று வெகு நேரமாக
ஒற்றைக் காலில் தவமிருந்து கொண்டிருந்தது.
சாயங்காலம் வரை தவம் இருந்ததுதான் மிச்சம்.
ஒரு மீன்கூட அகப்படவில்லை.
" எத்தனை நாளைக்குதான் இப்படி
காத்திருந்து காத்திருந்து...
 பட்டினியால் சாவது."
வருந்தியது கொக்கு.

"என்ன செய்யலாம்? .".யோசித்தது.

" நீச்சல் கற்றுக் கொண்டால் மட்டும்தான்
இனி உயிர் வாழ முடியும்."
நீந்த கற்றுக்கொள்ள வேண்டுமானால் ....
 யாரிடம் போவது?
 எப்படி கற்றுக்கொள்வது?
 என்னால் நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா ? "
 இப்படி ஏதேதோ எண்ணங்கள் வந்து
குழம்பி நின்றது கொக்கு.

 திடீரென்று மண்டைக்குள் 
ஒளிக்கீற்றாய் ஓர்  எண்ணம்
உதயமாக,
"இப்படி செய்தால் என்ன ?
 அதுதான் இப்போது சரியான வழி...."
என்று நினைத்துக் கொண்டு நேரே தன் நண்பன் எருமையைத் தேடி போனது.

எருமை தோட்டத்தில் உள்ள ஒரு
மரத்தின் நிழலில் படுத்து நன்றாக அசை
போட்டுக் கொண்டிருந்தது.

" நண்பா...."மெதுவாக குரல் கொடுத்தது 
கொக்கு.

 "அடடே....கொக்கு தம்பியா....
  வாங்க...வாங்க...என்ன இந்த பக்கம்?..
பார்த்து நெடுநாள் ஆகிவிட்டதே ?"
 விசாரித்தது எருமை.

 " உங்களைத்தான் அண்ணே 
 ஒரு விசயமா
 பார்க்க வந்திருக்கிறேன்..."

" என்னையா....ஏன்...?
ஏதாவது உதவி வேணுமா?"

 "உங்க கிட்ட ஒரு விசயமா பேசணும்.
ஏன் உதவி கேட்டுதான் வந்துள்ளேன்
என்றே வைத்துக் கொள்ளுங்களேன் "

 "என்ன...குரல் கம்மியிருக்கிறது.
ரொம்ப சோர்வா இருந்தாப்பில இருக்கு..
 ஏதும் பிரச்சினையா? "
கரிசனையோடு கேட்டது எருமை.

"வேறு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது?
  எல்லாம் சாப்பாட்டு பிரச்சினை தான்."

 "ஏன் குளத்தில் மீன் இல்லையா?"

 "மீன் எல்லாம் இருக்கு.
 மீன் எல்லாம் தந்திரமாக
 நடுகுளத்தில் கிடக்கிறது.
 எப்படி போய் பிடிப்பது என்றுதான்
தெரியவில்லை."

" நீ சொல்வதும்  சரிதான்.
இப்போ எல்லாம் எல்லோரும்
ரொம்ப புத்திசாலி ஆகிட்டாங்க...
நாமும் புதுசா ஏதாவது ஐடியா
 பண்ணினால்தான்
 இனி பிழைப்பு நடத்த முடியும்."

" அதனால்தான் நீச்சல் பழகலாமா
 என்று உங்களிடம்
  கேட்க வந்தேன்."

 " சரியான ஐடியா.... ஆனால்
எனக்கு நீச்சல் தெரியாதே"

"உங்களுக்குத் தெரிந்தவர்கள்
வேறு யாரும் இல்லையா?"

" ஏன் இல்லை.....என் நண்பன் தவளை 
ஒரு நீச்சல் பள்ளி
 வைத்து நீச்சல் கற்றுக்கொடுத்து
வருகிறான். நீ அந்தப் பள்ளியில்
போய் நீச்சல் படிக்கிறாயா?
வா ...தவளையிடம் போய் கேட்டுப் பார்ப்போம்."

கொக்கு எருமை முதுகில் ஏறி
 உட்கார்ந்து கொள்ள
 இருவரும் தவளையின் நீச்சல் பள்ளியில்
 அட்மிஷன் வாங்க புறப்பட்டனர்.

 எருமையைப் பார்த்ததும்,
 "ஏது இந்தப்பக்கம்....அது
யாரு முதுகுல..?."
துள்ளித்துள்ளி எட்டிப் பார்த்துக் கேட்டது
தவளை. 

 எருமையின் முதுகில் இருந்து 
இறங்கி ,தவளைக்கு
வணக்கம் சொன்னது கொக்கு.

 "நீச்சல் படிக்க என் நண்பனுக்கு 
உங்கள் பள்ளியில் ஒரு
 அட்மிஷன் வேணும்.   "
 
"   அட்மிஷன் எல்லாம் 
முடிந்து விட்டதே...இப்போது மழைக்காலம்.
மழைக்காலத்தில் யாருக்கும் அட்மிஷன்
கொடுப்பதில்லை."
கண்களை உருட்டியபடி  கூறியது தவளை.

"எப்படியாவது பார்த்து செய்யுங்க ...
அவனுக்கு உங்க பள்ளியில்
படிக்கணும் என்று ரொம்ப நாளாக
ஆசை"ஒரு பொய்யைச் சொல்லி
அட்மிஷன் கேட்டது எருமை.

" ம்...என்ன பண்ணலாம்..."
சற்று நேரம் யோசித்த பின்னர்,
"நீங்க  ரொம்ப வேண்டி  கேட்கிறதால....  
  என்னால் மறுக்க முடியல...சரி வந்து
சேர சொல்லுங்க"பாவலா காட்டியது தவளை.

"நன்றிங்க...".என்று மறுபடியும் 
வணங்கியது கொக்கு.

 "ஆனால் ஒரு கண்டிஷன்.
என்னால் குளத்தில் வைத்து மட்டுமே
நீச்சல் கற்றுத் தர முடியும்.
ஓடுற தண்ணீரில் நீச்சல் கற்றுத் 
தர முடியாது.
ஒத்துக்கொண்டால் வாருங்கள்"
என்று தன் இயலாமையை
ஒத்துக் கொண்டது தவளை.

 தவளையின் எல்லா கண்டிஷன்களுக்கும்
கொக்கு ஒத்துக் கொண்டது.

மறுநாளில் இருந்தே நீச்சல் 
பயிற்சி தொடங்கியது.

ஒருமாத கால பயிற்சியை 
இனிதே முடித்தது கொக்கு.

 "அப்பாடா....     இனி பிரச்சனை இல்லை.
 எப்படியும் குளத்தில் நீந்தி மீன்களைப்
பிடித்து தின்று வயிற்றுப்பாட்டை
 கழித்து விடலாம்.."  நம்பிக்கையோடு 
விடைபெற்றுச் சென்றது கொக்கு   .

மறுநாளில் இருந்தே குளத்தில் 
நீச்சல் அடித்து விளையாடியது.
மீன்களைக் கொத்தித் தூக்கி வந்து
தின்ன ஆரம்பித்தது கொக்கு.

நீச்சல் பயிற்சி நன்றாகவே 
கை கொடுத்தது.
வயிறு நிறைய சாப்பாடு.
மகிழ்ச்சியாக நாட்கள் கடந்தன.

கோடைகாலம் வந்தது.
குளத்தில் தண்ணீர் வற்றத் தொடங்கியது...
தண்ணீர் இல்லாததால் 
இருந்த மீன்களும்
செத்துப் போயின.

 இப்போது மீனுக்கு எங்கே போவது? 
சோதனை மேல் சோதனையா?

"மறுபடியும் எருமை அண்ணனிடம்
போய் ஏதாவது உதவி கேட்கலாமா?
வேண்டாம்...
கடலில் போய் மீன் பிடிக்கலாமே
இப்போது இருக்கிற ஒரே வழி .
கடலுக்குச் செல்வதுதான்"
ஒரு தீர்மானத்தோடு கடலை நோக்கிப்
பறந்து சென்றது   கொக்கு.

ஓடுகிற நீரில் நீந்த கூடாது என்ற
தவளையின் கண்டிஷன் 
நினைவுக்கு வர
கொஞ்சம் தயங்கியது கொக்கு.

"இருப்பினும் கடல் நீர்
 ஓடவா செய்கிறது?
 ஒரே இடத்தில்தானே கிடக்கிறது."
 என்று தனக்குத்தானே சமாதானம் 
செய்து கொண்டு
கடலில் இறங்கியது கொக்கு.

ஓரிரு நாட்கள் அலையில் அடித்து வந்து
கரையில் விழும்  
மீன்களைப் பிடித்து தின்று கடலோரமாகவே
நின்று கொண்டது கொக்கு.

"  எல்லாம் சிறிய மீன்களாகவே 
இருக்கின்றன.
நீந்தி கடலுக்குள் சென்றால் நமக்கு
விருப்பமான பெரிய மீன்களைப் 
பிடித்து உண்ணலாம்.
கொஞ்சம் முயற்சி பண்ணிதான்
பார்ப்போமே"
மனதிற்குள் எழுந்த பேராசையால்
தப்புக்கணக்கு போட்டது கொக்கு.

மறுநாள் கடற்கரையில் 
மீனுக்காக காத்திருந்த கொக்கின்
கண்கள்
அலையோடு வரும் சின்ன சின்ன மீன்கள் 
பக்கம் திரும்பவே இல்லை.

கொக்கின் கண்கள் முழுவதும் கடலுக்குள்
நீந்தும் பெரிய மீன்கள் மீதே  இருந்தது.

"ஆ....எனக்குப் பிடித்தமான
எவ்வளவு மீன்கள் கடலுக்குள்
துள்ளி விளையாடுகின்றன.
இது தெரியாமல் குளக்கரையிலேயே
பொழுதத்தனையும் கழித்து விட்டேனே!"
வருந்தியது கொக்கு.

முன்பின் யோசிக்காமல் சட்டென்று
கடலுக்குள் இறங்கி நீந்த தொடங்கியது.
அதற்குள் பேரலை ஒன்று வந்து
அப்படியே கொக்கினை சுருட்டிக் கொண்டது.

கொக்கால் இப்போது எதிர்நீச்சல் 
போட முடியவில்லை.
 அலாக்காக அள்ளிக்கொண்டு 
உள்ளே சென்ற அலை...
மறுபடியும் ....மறுபடியும் சுருட்டி
வெளியில் கொண்டு வந்து  வீசியது.
அலையின் சுருட்டலில் கசங்கிப்போன 
கொக்கு,
" அம்மா ..."என்று கரையில் வந்து விழுந்தது.
இரண்டு  சிறகுகளும் ஒடிந்து போயின.
 
கொக்கால் இப்போது பறக்க முடியவில்லை.
கொக்கின் நிலை பார்ப்பதற்கே 
பரிதாபமாக இருந்தது.

"  கற்ற கல்வி குளத்துக்கு மட்டும்தான் ...."
என்ற தவளையின்
பேச்சைக் கேட்காமல் போனதால்...
 சிறகுகளை இழந்து பரிதாபமாக
மல்லாக்காக கிடக்கிறேனே... "
என்று அழுதது கொக்கு.

இவற்றை எல்லாம் கடற்கரையில் உள்ள
 புன்னை மரத்தில் இருந்து பார்த்துக்
கொண்டிருந்த குயில்,
" நீதான்   கடலில் நீந்த படிக்கலியே....
   இதெல்லாம் உனக்கு தேவைதானா..."
   தலையில் அடித்துக் கொண்டது.
 
 "படித்தால் இப்படி அரைகுறையாக 
படிக்கக் கூடாது.
படித்தாகிவிட்டதா...
படித்ததற்கு ஏற்றபடிதான்
நடக்கணும்  ..இது எத்தனை பேருக்குத்
தெரியுது?

 இதைத்தான் வள்ளுவர் ,

படித்தால் தப்பு தவறின்றி நன்றாக
படியுங்க. அப்படி படிச்சீட்டீங்களா? 
படித்ததற்கு ஏற்றபடி நடங்க என்று
முன்னமே சொல்லித் தந்திருக்கிறாரே!
இன்னுமா நீங்க திருந்தல...
படியுங்க...படித்தபடி நடக்க
கற்றுக் கொள்ளுங்கப்பா..."
என்று சொல்லிய குயில்

"கற்க கசடற கற்பவை கற்றபின்
  நிற்க அதற்குத்  தக "

என்ற குறளை உரக்கப் பாடியபடியே
அங்கிருந்து பறந்து சென்றது குயில்.
 
         ,
         

Comments

Post a Comment

Popular Posts