உலகத்தோடு ஒட்ட ஒழுகல்...
உலகத்தோடு ஒட்ட ஒழுகல்.....
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் "
திருக்குறள் : 140
உலகத்தோடு _,உலக மக்களோடு,உயர்ந்தோரோடு
ஒட்ட _ பொருந்த , இணக்கமாக
ஒழுகல் _ நடந்து கொள்ளுதல்
பலகற்றும் _ பல நூல்களைக் கற்றிருந்தாலும்
கல்லார் _ அறியாதவர் ,கற்காதவர்
அறிவிலாதவர் _ அறிவில்லாதவரே ஆவார்
உயர் ஒழுக்கம் கொண்ட நல்லோரோடு
இணக்கமாக இருக்கும் நற்பண்பைக்
கற்றுக் கொள்ளாதவர் பல
நூல்களைக் கற்றவராக இருப்பினும்
அறிவில்லாதவராகவே கருதப்படுவார்.
விளக்கம் :
உயர்ந்த ஒழுக்க நெறிகளைக் கொண்டோரோடு
இணக்கமாக இருக்கும் பண்பை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.
அதுதான் நாம் கற்ற கல்வியின்
பயனாக இருக்கும்.
அப்படி இல்லாது எனக்கு எல்லாம்
தெரியும்.என்போக்கில் நான் போவேன்
என்று தான்தோன்றித் தனமாக
செயல்படுபவர் எத்தனை நூல்களைக்
கற்றவராக இருப்பினும்
கல்லாதவர் என்றே கருதப்படுவார்.
வாழ்தல் என்று சொன்னாலே
நல்லொழுக்கத்துடன் வாழ்தல் என்பதுதான்
பொருள்.
"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே "
என்கிறது சேந்தன் திவாகர நிகண்டு
என்னும் நூல்.
இப்பாடலில் உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
என்பது உயர்ந்தோரோடு இணக்கமாக
இருக்கும் பண்பை வளர்த்துக்கொள்
என்பதாகும்.
"நல்லவனாய் இரு ; நல்லவனோடிரு"
நமது சேர்க்கை நல்லொழுக்கம்
கொண்டோரோடு இருக்கும்போது
இயல்பாகவே நற்பண்புகள் நம்மை
வந்து ஒட்டிக் கொள்ளும்.
அதனால்தான் உலகத்தோடு ஒட்ட
ஒழுகு என்கிறார் வள்ளுவர்.
English couplet :
"Who know not with the world in harmony to dwell,
May many things have learned , but nothing well "
Translation. :
Those who know not how to act agreeably to the world
Though they have learnt many things, are still ignorant.
Transliteration. :
"Ulakaththotu otta ozhukal palakatrum
Kallaar Arivillaa Thar"
Comments
Post a Comment