பொறாமை வேண்டாமே!

          பொறாமை வேண்டாமே...


"பொறாமையா.....எனக்கா...அது
எங்கங்க கிடைக்கும்... "இப்படி சொல்கிற
பருவம் குழந்தைப்பருவம்.

அதன்பிறகு பள்ளிக்குள் நுழைந்ததுமே
உடன் பயிலும் மாணவர்மீது அப்பப்போ
பொறாமைப்படும் சூழல் வந்துவிடும்.
நம்மிடம் இல்லாத ஒன்று இன்னொருவன்
கையில் இருந்தால் மெதுவாக பொறாமை
வந்து எட்டிப் பார்க்கும்.

அதே போன்ற ஒன்று தனக்கும் வேண்டும்
என்று பெற்றோரிடம் அடம்பிடிக்க
வைக்கும்.
வளர வளர பொறாமையும்
கூடவே வளர்ந்து கொண்டு இருக்கும்.

பொறாமை உள்ளவர்கள் அடுத்தவர்
படும் துன்பத்தைப் பார்த்து அதில்
மகிழ்ச்சி கிடைக்கிறதா என்று
பார்ப்பார்கள்.

நம்மிடம் இல்லாத  ஒன்று...
நமக்கு கிடைக்காத ஒன்று...

நாம் அடைய விரும்பும் ஒன்று...
இன்னொருவரிடம் இருந்தால்
ஒருமாதிரியான எரிச்சல் உணர்வு
வந்து எட்டிப்பார்க்கும்.
அவரைப் பற்றித் தரக்குறைவாக
பேச வைக்கும்.
அவரெல்லாம் அப்படி ஒன்றும் பெரிய
ஆளல்ல என்று மட்டம்தட்டிப் பேசி
இன்பம் காணும்.
பார்த்தும் பார்க்காததுபோல போக
வைக்கும்.
முதுகுக்குப் பின்னால் இருந்து குத்த
சந்தர்ப்பம் தேடிக் கொண்டே இருக்கும்.

இவை எல்லாம் பொறாமையின் வெளிப்பாடு.

நாம் ஒரு நபர்மேல் பொறாமை கொள்கிறோம்
என்றால் அந்த நபர் நம்மைவிட
ஒருபடி உயர்ந்து கொண்டிருக்கிறார்
என்பதுதான் எதார்த்தமான உண்மை.

பொறாமை தாழ்வுமனப்பான்மையின்
வெளிப்பாடாகக்கூட இருக்கலாம் .

தன்னையும் அந்த நபரையும்
ஒப்பிட்டுப்பார்த்து தனக்கு விருப்பமான
ஏதோ ஒன்று அந்த நபரிடம் இருக்கும்போது
பொறாமை இயல்பாகவே வந்து
எட்டிப் பார்க்கும்.

இயலாமையின் வெளிப்பாடுதாங்க ...
பொறாமை.

பொறாமை வந்துவிட்டால் மகிழ்ச்சி
தொலைந்து போகுங்க....

" அழுக்காறு எனஒரு பாவிதிருச் செற்றுத்
தீயுழி உய்த்து விடும் "
என்றார் வள்ளுவர்.

பொறாமை ஒருவனுடைய செல்வத்தை
அழித்து அவனை கொடிய நரகத்தில்
கொண்டு சேர்த்துவிடுமாம்.

ஆமாங்க....பொறாமைப்பட்டால்
உள்ளதும் பொச்சுடா நொள்ளக்கண்ணா
என்று எல்லாவற்றையும் இழந்து
கையில் தலையை வைத்து உட்கார
வேண்டிய நிலைமை வந்துவிடுமாம்.

பொறாமையினால் ஒரு விவசாயிக்கு
என்ன நிகழ்ந்தது என்பதைப் பாருங்கள்.

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார்.
அவருக்கு எப்போது பார்த்தாலும்
அடுத்தவன் வயலைப் பார்த்து
பொறாமைப்படுவதே வழக்கம்.

நம்மைவிட நல்ல மகசூல்
எடுத்துவிடுவானோ
என்று நித்தம் நித்தம் பொறாமை தீயில்
வெந்து கொண்டிருப்பார்.

அதனால்  பக்கத்து வயலில் கத்தரிச்செடி
நட்டால்  இவரும் கத்தரிச்செடி நடுவார்.
 
அவர் வெண்டை வித்து ஊன்றினால் இவரும்
வெண்டை வித்து ஊன்றி வைப்பார்.

  அவர் செடிகளுக்குப் பூச்சி மருந்து அடித்தால்
  இவரும் மருந்தடிப்பார்.
 
  இப்போது பக்கத்து வயலில் மிளகுச்செடி
  நடப்பட்டது.
  இவரும் மிளகுச்செடி நட்டார்.

இரண்டு வயல்களுமே நன்றாக
வளர்ந்து வந்தன .

ஆனாலும் இந்த மனிதருக்குத் திருப்தியே
இல்லை.அவன் செடியைவிட நமது
செடி கொஞ்சமாவது உயரமாக
இருக்கணும்.
 
  அவனைவிடவும் ஒரு பிடியாவது அதிகமாக
  மகசூல் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரு
  பொறாமை குணம் மனதில் வந்து
  உட்கார்ந்து கொண்டது.
 
"  இனி அவன் செய்வதுபோல்
செய்யக் கூடாது.
அவன்போடும் உரத்தைவிட சற்று
அதிகமாகவே போட வேண்டும்.
  நீர்ப் பாய்ச்சும்போதும் அவனைவிட
  அதிக அளவு   நீர்ப் பாய்ச்ச வேண்டும் "
  என்று தீர்மானித்தார்.
 
  இப்போது தோட்டத்தில்  மிளகாய்ச்செடி
  வளர்ந்து காய்க்கும் பருவத்தில் நின்றது.
  நாள்தோறும் வந்து பார்த்துப் பார்த்து
  தண்ணீர் பாய்ச்சுவார்.
 
  பக்கத்து வயலைவிட
  இரண்டு அங்குலத்திற்காவது தண்ணீர்
  அதிகமாக நிற்கும்படி பார்த்துக்
  கொண்டால்தான்
  இரவில் தூக்கமே வரும்.

ஒரு வாரத்திற்குப் பிறகு
மிளகுச்செடியில்  ஏதோ ஒரு மாற்றம்
தெரிய ஆரம்பித்தது.
 
"  என்ன செடியெல்லாம் ஒருமாதிரி
  பழுப்படிச்சதுபோல இருக்கு "என்று
  கலக்கமடைந்தார்.
 
  ஆனால் பக்கத்து வயலில்
  வழக்கம்போல் நல்ல வளர்ச்சி தெரிந்தது.

  நான் அவனைவிட அதிகம்
  நீர் பாய்ச்சினேன்.
  என்   செடிக்கு மட்டும் பழுப்பு நோய்
  வந்திருக்கிறதே என்று எண்ணி எண்ணி
தூக்கம் வராமல் தவித்தார்.
 
  மறுநாள் செடிக்கு மருந்து அடித்துப் பார்த்தார்.
  ஒன்றும் பிரயோஜனமில்லை.
 
  இரண்டு மூன்று நாட்களில் மொத்த இலையும்
  பழுத்து கீழே விழுந்து ,செடி முழுவதும்
  மொட்டையாக  நின்றது .
 
  அவருக்கோ ஆற்றொண்ணாத் துயரம் !
  பக்கத்து வயலில் மட்டும் பழுப்படிக்கவில்லையே...
 
நேரடியாக  பக்கத்து வயல்காரனிடமே
போய்  விசாரித்தார்.
 
"  உன்னைப் போல்தான் நானும் பருவம்
செய்தேன். சொல்லப் போனால்
உன்னை விடவும்
அதிகமாகவே உரம் போட்டேன் .
உன்னைவிடவும் அதிகமாகவே
நீர்ப் பாய்ச்சினேன்.
பிறகு எப்படி என் பயிர் மட்டும் இப்படி
பழுப்படித்து உதிர்ந்து போய்
நிற்கிறது "
  என்று வருத்தத்தோடு கேட்டார்.
 
"  என்னை மாதிரி உரம்  போட்டாய் ...சரி.
  என்னைவிடவும் அதிகமாக நீர்ப்பாய்ச்சினாய்
  ஏன் ? "என்று கேட்டார் பக்கத்து வயல்காரர்.
 
  "அதிக நீர்ப் பாய்ச்சினால் அதிக
  மகசூல் கிடைக்கும்
  என்பதற்காகத்தான்"
  என்றார் விவசாயி.
 
"  மிளகு செடிக்குக் குறைவாகத்தானே நீர்ப்
  பாய்ச்ச வேண்டும்.மிளகுச் செடி பாத்தியில்
  எப்போதும் நீர்  நிற்கக்கூடாது ..
   அப்படி நீர் நின்றால் வேர் அழுகிப் போய்
  செடி பட்டுவிடும்.
  அதைத்தான் நீ செய்திருக்கிறாய்.
  அதனால்தான் உன் மிளகுச்செடி பட்டுப்
  போய்விட்டது "என்று கூறினார் பக்கத்து
  வயல்காரர்.
 
"ஐயோ......ஆறுமாத கால உழைப்பு
போச்சே "என்று தலையில் கையை வைத்தபடி
வரப்பில் உட்கார்ந்தார் விவசாயி.
 
அடுத்தவனைப் பார்த்து சூடு போட்டுக்
கொள்ளக்கூடாது  என்பது இதுதானோ!

மனிதனை அழிக்கும் மகாசக்தி
பொறாமைக்கு உண்டுங்க...

பொறாமை நம்மிடம் குடிகொண்டு விட்டால்...
வேறு எந்த நற்குணங்களையும்
நம்மிடம்
அண்டவிடாதுங்க....

நட்பை வேரோடு பிடுங்கி
எறிந்துவிடுங்க...

பிறருடைய வளர்ச்சி கண்டு
பொறுத்துக் கொள்ள முடியாதபோது
அது பொறாமையாக உருவெடுக்கிறது.

"ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த
வீடும் உருப்படாது "என்பார்கள்.

அதாவது பொறாமையை உள்ளத்தில்
குடியேறவிட்டால்....நாம்
உருப்படவே முடியாதாம்.

பொறாமை வந்துவிட்டதா....
இருக்கிற கொஞ்சம்
மகிழ்ச்சியும் காணாமல் போய்விடும்.

புத்திசாலிகள் பொறாமை என்னும்
களையை எடுத்தால் மட்டுமே நம்மால்
வளர முடியும் என்பதைப்
புரிந்துகொண்டு அதனைத் 
தூக்கி எறிந்துவிட்டு
முன்னே நடந்து கொண்டே இருப்பார்கள்

அவரவர் கையின் பலன் அவரவர்க்கு
கிடைக்கும்.இடையில் இந்த
பொறாமைக்கு என்ன வேலை?

பொறாமை ஒருபோதும் கூடாதுங்க..

நண்பன் நல்ல மதிப்பெண்
எடுத்திருக்கிறானா....
பரவாயில்லை. விட்டுவிடுங்கள்.
அவன் உழைப்புக்கான
பலனை அவன் பெற்றிருக்கிறான்.

நாமும் முயற்சி செய்து படித்தால் நல்ல
மதிப்பெண் பெறலாம்  என்ற முடிவோடு
படியுங்கள்.
அதற்காக அடுத்தவனைப் பார்த்து
பொறாமைப்படுவதில் ஒரு மதிப்பெண்கூட
அதிகமாக கிடைக்கப் போவதில்லை.

அடுத்தவர் வளர்கிறாரா.....வளரட்டுமே
நாமும் முயன்று பார்ப்போம்.
என்ற மனநிலையை வளர்த்துக்
கொள்ளுங்கள்.

நாம் பொறாமைப்பட்டு  எதையும் சாதிக்கப்
போவதில்லை.

இருக்கிற நிம்மதியும் இழந்து போக
வேண்டுமா?
பொறாமைப்படுங்கள்.

உங்கள் நற்பெயரை நீங்களே கெடுத்துக்
கொள்ள வேண்டுமா?
பொறாமைப்படுங்கள்.

மகிழ்ச்சியைத் தொலைக்க வேண்டுமா?
பொறாமைப்படுங்கள்.

"ஐயையோ....வேண்டாம் வேண்டவே
வேண்டாம் கத்த வேண்டும் போல்
இருக்கிறதல்லவா!"

இது...இது...இதுதாங்க வேண்டும்.

பொறாமை வேண்டாமே ப்ளீஸ்!






 
 
 
 
  
 
 
 
 
  


 
 
 
 
 
 
 
 
 
  

Comments

  1. நல்ல கருத்தை விளக்கும் பதிவு.மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts