மயங்கொலிகள்_ ண , ன , ந

    மயங்கொலிகள் _ ண , ன , ந

                  
 நாம் எழுதும்போது இதுவா... அதுவா...
என்று மயங்க வைக்கும்  எழுத்துகளை 
மயங்கொலிகள் என்கிறோம்.

அந்த விதத்தில்  எப்போதுமே
மயங்க வைக்கும் எழுத்துகளான 
ணகரம் னகரம் நகரம் பற்றி 
இக்கட்டுரையில் காண்போம்.

மூன்று சுழி ணகரம் போட்டு
எழுத வேண்டுமா அல்லது
இரண்டு சுழி னகரம் போடவேண்டுமா
அல்லது தந்நகரம் எனப்படும் நகரம்
போட்டு எழுத வேண்டுமா என்ற   ஐயம் 
ஏற்படுவதற்குக் காரணம் சரியான
பொருள் அறியப்படாமை  என்பதை 
 நாம் ஒத்துக் கொண்டுதான் 
 ஆக வேண்டும்.
 
அடுத்து உச்சரிக்கும்போது எழுத்துகளை
தவறாக உச்சரிக்கக் காரணம்
எழுத்துகள் பிறக்கும் இடத்தைப் பற்றி  
நாம் அதிகபடியான அக்கறை எடுத்துக்
கொள்ளாததே ஆகும்.

எழுத்து பிறக்கும் இடத்தையும் அதன் 
பொருளையும் சரியாக தெரிந்து 
கொள்வோமானால் பேசும்போதும்
எழுதும்போதும் தவறுகள் ஏற்பட 
வாய்ப்பிருக்காது.

'ண 'என்பதை டண்ணகரம் என்று
 சொல்ல வேண்டும்.
காரணம் எங்கெல்லாம் மூன்று சுழி ணகரம் 
வருகிறதோ அதை அடுத்து 
எப்போதும் டகர வருக்க எழுத்துகள்தான்  
கண்டிப்பாக வரும் .

     பண்டம்
     திண்டாட்டம்
     மண்டபம்
     கொண்டாட்டம்
     கண்ணோட்டம்
     மண்டு
     வண்டினம்
     
 இதனை  இனிமேல்
 டண்ணகரம்  என்று சொல்லிப் பாருங்கள்.
 பொருளும் புரிந்து போகும்.
 தவறில்லாமலும் எழுதிவிடலாம்.
 
 இரண்டாவது ன என்ற  றன்னகரம்.
 இதென்ன னகரத்திற்கு றன்னகரம்
 என்ற பெயரா ?
 ஆமாங்க...எப்படி ணகரம் டண்ணகரம்
 என்ற பெயர் பெற்றதோ அதே போன்றுதான்
 னகரமும் றன்னகரம் என்ற பெயரைப் 
 பெற்றிருக்கிறது.
 
எங்கெல்லாம்  னகர ஒற்றெழுத்து வருகிறதோ 
அதை அடுத்து வருகிற எழுத்து
றகர வருக்கம் சார்ந்ததாகவே இருக்கும்.
      
          தென்றல்
           மன்றம்
           சென்றான்
           கொன்றான்
      
னகர எழுத்தின் பின்னால் றகர வருக்க
எழுத்து வருகிறதா?
     
இதனால்தான் இதற்கு றன்னகரம் 
என்ற பெயராம்.
           
இப்போது நாம் எழுதும் போதோ 
சொல்லும் போதோ ணகரத்திற்கு
அடுத்து டகர வருக்க எழுத்து
 இருந்தால் மூன்று 
சுழி ணகரம் போட வேண்டும்.

பின்னால்  றகர வருக்கம் இருந்தால் 
றன்னகரம் எனப்படும் இரண்டு சுழி னகரம் 
போட வேண்டும் என்பதை
நன்றாக புரிந்து கொண்டோமல்லவா!
     
 மூன்றாவதாக தந்நகரம் எனப்படும் 
 ந என்ற எழுத்து.

 ந் என்ற மெய் எழுத்தை அடுத்து 
 எப்போதும் தகர வருக்க எழுத்து 
 மட்டுமே வரும்.
 
      பந்தம்
      வெந்தயம்
       மந்தை
       பந்து
       கந்தல்

இதனால்தான் இதற்கு தந்நகரம் என்ற 
பெயராம்.

இப்போது ,

ணகரம் டண்ணகரம்
னகரம்  றன்னகரம்
நகரம்  தந்நகரம் 

 என்ற பெயர் எதனால் வந்தது 
என்ற கதை நன்றாக புரிந்திருக்கும்
என நம்புகிறேன்.

பெரும்பாலும் எந்த எழுத்தின் பின்னால் 
எந்த எழுத்து வரும், அதன் இன எழுத்து 
எது என்பதை மெய் எழுத்து நெடுங்கணக்கு 
வைக்கப்பட்டுள்ள முறையில் இருந்தே
நாம் அறிந்து கொள்ளலாம்.

                  
க  ங ச  ஞ  ட  ண   த   ந   ப   ம   
 ய   ர   ல     வ    ழ     ள   ற    ன  என்னும் 
 பதினெட்டு எழுத்துகளும்  
 வைக்கப்பட்டுள்ள வரிசை கூட 
 எழுதும் முறைக்கு ஏற்ப 
 வைக்கப்பட்டுள்ளது 
 என்பதை அறியலாம்.
 
 வல்லின எழுத்துகளை  அடுத்து
மெல்லினம் வரக் காரணம்
சொல்லுவதற்கு எளிமையாக இருக்கும்
என்பதற்காககூட இருக்கலாம்.

 இப்போது ண், ன் , ந்  என்ற 
மெய் எழுத்துகள் பிறக்கும் இடங்களைப் 
பற்றி அறிந்து கொள்வோம்.

ண் என்ற எழுத்து நாவினது நுனி
அண்ணத்தினது நுனியைத் தொடும் 
போது பிறக்கிறது.

பண்
மண்
  
 ந் என்ற மெய்  மேல்வாய்ப் பல்லினது 
 அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் 
 பிறக்கிறது.
 
பந்து
அந்தி
 
ன் என்ற மெய் மேல் வாயை நாக்கின் 
நுனி நன்றாகப் பொருந்துவதால் 
பிறக்கிறது.

அன்பு
கன்னி

இவற்றை நன்றாக இரண்டு மூன்றுமுறை
உச்சரித்துப் பழகிப் பாருங்கள்.

சொல்லும்போது  தவறு ஏற்பட
 வாய்ப்பே ஏற்படாது.
 
பொருளும் தெரிந்து வைத்துக் 
கொண்டால் 
இதுவா அதுவா என்ற ஐயம் 
எழாது.
               
அணல்  _ தாடி
அனல்  _ நெருப்பு

அண்ணம்  _  மேல்வாய்
அன்னம்  _   சோறு

அண்ணன்  _ தமையன்
அன்னன்   _   அத்தகையவன்

ஆணேறு   _ ஆண்மகன்
ஆனேறு   _ காளை

இவண்   _  இவ்வாறு
இவன்    _   ஆடவன்


உண்ணல்   _ உண்ணுதல்
உன்னல்     _  நினைத்தல்

ஊண்  _  உணவு
ஊன்  _   இறைச்சி

எண்ணல்   _  எண்ணுதல்
என்னல்     _  என்று சொல்லுதல்

ஏணை    _   தொட்டில்
ஏனை     _   மற்றது

கணம்  _  கூட்டம்
கனம்  _  பாரம்

கண்ணன்  _   கிருஷ்ணன்
கன்னன்      _   கர்னன்

கண்ணி   _மாலை
கன்னி   _  குமரிப்பெண்

பேண்  _  காப்பாற்று 
பேன்  _ தலையில் வாழும் பேன் 

மணம்  _ நறுமணம்
மனம்  _  உள்ளம் 

மணை   _  உட்காரும் பலகை 
மனை  _  வீடு

கண்ணல் _   கருதுதல்
கன்னல்  _   கரும்பு

காண்.   _  பார்
கான்.      _   காடு

கிண்ணம்  _ வட்டில்
கின்னம்     _ கிளை   

குணி   _  ஊமை
குனி.    _ வளைதல்

கேணி  _   கிணறு
கேனி     _  பித்து பிடித்தவர்

கோண்   _   மாறுபாடு
கோன்    _     அரசன்

சாணம் _  சாணி
சானம்.   _  அம்மி  ,பெருங்காயம்

சுணை     _  கூர்மை
சுனை      _    நீரூற்று

சுண்ணம்  _  வாடனைப்பொடி
சுன்னம்    _ சுண்ணாம்பு

சேணம்  _   மெத்தை
சேனம்    _   பருந்து

சேணை  _  அறிவு
சேனை.  _   படை

திணை   _  ஒழுக்கம்
தினை.  _  தானியம்

திண்மை  _  உறுதி
தின்மை     _  தீமை.

வண்மை  _ கொடை
வன்மை  _  வலிமை

வாணம்  _ அம்பு , மத்தாப்பு
வானம்  _  ஆகாயம் ,  மழை

முந்நூறு _ மூன்று நூறு 
முன்னூறு  _  முன்னர்  கொடு 

 தேநீர்  _  தேயிலை  நீர் 
தேனீர்  _  தேன் போலும் இனிய நீர்

 ஐவணம்  _ ஐந்து  வண்ணம்
 ஐவனம்  _   மலை  நெல்
 
 ஓணம்  _   ஒரு  பண்டிகை 
 ஓனம்  _    எழுத்துச்  சாரியை

 சுண்ணம் _  வாசனைப் பொடி
 சுன்னம்   _    சுண்ணாம்பு , பூஜ்யம்

  நண்பகல்   _  நடுப்பகல்
  நன்பகல்   _       நல்ல  பகல்

  நணி  _  அணி 
   நனி  _  மிகுதி

  பணை.  _   முரசு ,  உயரம் 
 பனை. _  ஒரு  மரம்

 பட்டணம்   _  நகரம்
  பட்டினம்   _      கடற்கரை நகர்

 புணை  _  தெப்பம்
 புனை  _  இட்டுக் கட்டுதல் , கற்பனை

  கணப்பு  _  குளிர்காயும்  தீ
  கனப்பு  _  பாரம்

 ண  _   டண்ணகரம்   
 ன   _    றன்னகரம் 
 ந  _        தந்நகரம்

இவற்றை மனதில் வைத்துக் கொண்டாலே
போதும்.
பெரும்பாலும் தவறு வராது.
பொருளும் தெரிந்து வைத்திருந்தால்
தவறு ஏற்பட வாய்ப்பே இருக்காது.
நம்பிக்கையோடு கட்டுரையை
இரண்டு மூன்றுமுறை வாசியுங்கள்.
நல்ல பயிற்சியாக அமையும்.

நல்ல தமிழ் எழுத வேண்டும் என்ற
தங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்து!
 
       

Comments

  1. மயங்கொலிகளை ஆழமாக மனதில் பதிவிட்டது மிக நன்று.

    ReplyDelete
  2. மயங்கொலிகளை கதைவடிவில் விளக்கமாக புரிய வைத்த விதம் மிக அருமை

    ReplyDelete

Post a Comment