நீட் தேர்வு : கலங்கும் சாமானியன்

நீட் தேர்வு  : கலங்கும் சாமானியன்


நீட்டைப்பற்றி நீட்டி அறிக்கை விடாத
அரசியல்வாதிகள் இல்லை.

நீட்டை எண்ணி கலங்காத 
மாணவர் இல்லை.

"இந்த வருடமாவது என் பிள்ளை
நீட்டில் தேறுவானா ?" கலங்காத
 பெற்றோர் இல்லை.

"நீட் தேர்வுக்காகப் படித்துக் கொள்ளலாம்" 
என்று பதினொன்றாம் பன்னிரண்டாம்
வகுப்புப் பாடங்களைப் படிக்க
மாணவர்களிடையே ஆர்வம் இல்லை

அப்படியானால் அந்த இரண்டாண்டு
கல்வி எதற்கு என்ற கேள்வி
நம்முன் எழுகிறது.

அது மருத்துவம் தவிர வேறு
படிப்புகளுக்குத் தேவையாக
உள்ளதே என்ற பதில் வரலாம்.

மற்ற எல்லா படிப்பிற்கும் பன்னிரண்டாம்
வகுப்பு மதிப்பெண் வேண்டுமாம்...
மருத்துவத்திற்கு மட்டும் தேவை
இல்லையாம்...வேடிக்கையாக இல்லை.

ஏன் இந்த முரண்பாடு..
கல்வி என்றால் அனைவருக்கும்
பொதுவானதாக இருக்க வேண்டும்.

மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு 
ஏற்பட வாய்ப்பளித்தல் கூடாது...
இதுதானே நமது கல்வி கொள்கை.

அப்படி இருக்கும்போது மருத்துவ 
மாணவர்களைப் பிரித்துப்
பார்க்கும் மனநிலை 
எங்கு தோன்றியது?

இப்படி ஒரு தேர்வு வைத்துதான்
மருத்துவ மாணவர் சேர்க்கை
நடைபெற வேண்டும் என்று
முன்மொழிந்தவர் யார் ?

முன்மொழியப்பட்டதன் நோக்கம் என்ன?
அப்படியே வழிமொழிந்து அரசியல்வாதிகள்
ஆட்டம் காட்டிக் கொண்டிருப்பதன்
பின்னணி என்ன... ,?

எதுவுமே தெரியாமல்" ....ஆட்டுவித்தால்
யாரொருவன் ஆடாதோரே கண்ணா..."
 என்று ஆடிக் கொண்டிருக்கிறோம்.

பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்
அடிப்படையில் மருத்துவ மாணவர்
சேர்க்கை நடைபெறுவதில் 
என்ன தவறு...

அந்த மதிப்பெண் அடிப்படையில்
எல்லா மேல் படிப்புகளுக்குமான
மாணவர் சேர்க்கை நடை பெற்றுக்
கொண்டிருக்கும்போது
மருத்துவம் மட்டும் தனியாக
பிரித்துப் பார்க்கப்படுவது ஏன் ?

பந்தயத்தில் ஓடுவதற்காக
குதிரைகள் நன்கு பராமரிக்கப்பட்டு
பயிற்றுவிக்கப்படுகின்றன.
பயிற்றுவிப்பும் பராமரிப்பும்
இல்லாத குதிரைகளால்
மற்ற குதிரைகளுக்கு 
ஈடு கொடுத்து ஓட முடியுமா?

பன்னிரண்டாம் வகுப்பு
 பாடத்திட்டத்தின் அடிப்படையில் 
 ஓட்டப்பந்தயம் வைக்கட்டும்.
 முந்தி வந்தவர்கள் மருத்துவப்
 படிப்பில் சேரட்டும்.
 இதுதானே அனைவருக்குமான நீதி !

சாமானியன் மருத்துவம் படிக்கக்கூடாதா?..

ஏன் கூடாது...நீட் எழுதி வெற்றி
பெறட்டும் என்பீர்கள்.

பன்னிரண்டாம் வகுப்புவரை இலவச
கட்டாயக்கல்வி.
இலவச பாடப்புத்தகம் வழங்கல்.

அதற்குமேல் பெரிய ஆசை எல்லாம்
உங்களுக்கு வரக்கூடாது.
நீட் தேர்வு சொல்லும் உண்மை
இது தானே !

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி
என்று பேசுகிற நாம் இரண்டு லட்சம்
மூன்றுலட்சம் பணம் கட்டிப் படிக்கும் 
குழந்தைகளுக்கு மட்டுமே
மருத்துவப் படிப்பில் வாய்ப்பு உண்டு
என்ற நிலையை உருக்கி வைத்திருப்பது
எந்த விதத்தில் ஏற்புடையதாக
இருக்கும்?

பாடத்திட்டம் வடிவமைக்கும்போது
ஒவ்வொரு வகுப்பிற்கும் உரிய 
மாணவர் வயதின் அடிப்படையில் அவர்கள்
மூளை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு
எவ்வளவு பாடங்கள் வைக்கவேண்டும்?
எப்படிப்பட்ட பாடங்கள் வைக்கப்பட வேண்டும்
என்று  பார்த்துப் பார்த்து நன்கு ஆராயந்து
செதுக்கி செதுக்கி வடிவமைத்துக்
கொடுக்கப்பட்டதுங்க...

சும்மா ஏனோதானோ என்று பாடத்திட்டம்
வகுக்கப்படுவதில்லை.

இது அனைத்து கல்வியலாளருக்கும்
தெரியும்.
கல்வித்துறையின் வழிகாட்டுதலின்
அடிப்படையில்தான் இவை எல்லாம்
நடைபெறும்.

உங்கள் கல்வியியலார் தயாரித்து 
பல்வேறு வல்லுநர் குழுவின் 
மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு
அதன் பின்னரே பாடத்திட்டம் 
ஒப்புதல் பெறப்பட்டிருக்கும்.

அந்தப் பாடத்திட்டத்தில் உள்ள
பாடங்களைப் படிப்பதில்
நம்பிக்கையில்லையா...
மருத்துவப்படிப்பிற்குள் நுழைவதற்கு
ஏற்ற தரம் அந்தப் பாடத்திட்டத்தில் இல்லையா...

அப்படியானால் பாடத்திட்டத்தை மறுசீராய்விற்கு
உட்படுத்துங்கள்...
புதிய பாடத்திட்டத்தை உருவாக்குங்கள்.

பாடத்திட்டம் உருவாக்கித்தரும்
கல்வியலார் மேல் நம்பிக்கை
இல்லையா? 
அல்லது
பாடத்திட்டம் தந்த பாடத்தில்தான் தேர்வு
வைக்கப்படுகிறது.
அந்தத் தேர்வின்மீது நம்பிக்கையில்லையா,?

எந்த திட்டமும் போடுவதற்குமுன்
சாமானியன் சந்திக்கப்போகும்
பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றி
சிந்திக்க வேண்டும்.

அடித்தட்டு மக்களைப் பற்றிய
புரிதலோடு வடிவமைக்கப்பட்டு
செயல்படுத்தப்படும் திட்டங்களால் மட்டுமே
எல்லா மக்களும் பயன்பெற முடியும்.

சாமானியனுக்குப் பயன்படாத எந்த ஒரு
திட்டமும் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு
அழைத்துச் செல்லாது என்பதைப்
புரிந்து கொள்ள வேண்டும்.

சாமானியனுக்கு நீட் தேர்வால் பயன்
கிட்டுமா..? 

உங்கள் இலவச கல்வித்திட்டத்தில்
படித்த பாடப்புத்தகங்களில் 
கிடைக்காத அறிவு ஒரு நீட் தேர்வால்
வந்துவிடப் போகிறதா?

சாமானியனைக் கலங்கடிக்கும்
நீட் தேர்வு  எதற்கு ?

அப்படி இல்லை என்றார் பன்னிரண்டாம்
வகுப்பில் அரசு தேர்வு எதற்கு ? 

பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் 
எல்லா மேல் படிப்புகளுக்கும் 
போதுமானது என்ற முறை வந்தால்
மட்டுமே மாணவர்களால் பன்னிரண்டாம் 
வகுப்பு பாடத்தில் முழு 
கவனத்தையும்  செலுத்த முடியும்.

பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான
மாணவர் சேர்க்கை அனைத்துப் படிப்புகளிலும்
பின்பற்றப்பட வேண்டும்.

அதுதான் மாணவர் நலன் சார்ந்த
முடிவாக இருக்க முடியும்.

அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்
காலம் வருமா ?Comments

  1. இந்தப் பதிவு மாணவர்கள் நலன் கருதி அரசுக்கு விடுத்த கோரிக்கையாகத் தென்படுகிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts