காதோடு ஒரு கதை
காதோடு ஒரு கதை
ஒரு மன்னருக்கு காட்டிற்குச் சென்று காட்டு
விலங்குகளின் நலம் கண்டு வர ஆசை.
" நாட்டு நடப்பு தெரிந்து நல்லாட்சி செய்கிறேன்.
ஒருநாள் என் ஆட்சிக்கு உட்பட்ட
விலங்குகள் எல்லாம் எப்படி வாழ்கின்றன
என்பதை காட்டிற்குள் சென்று அறிந்து
வர வேண்டும் . புறப்படுங்கள் "என்று
அமைச்சருக்குக் கட்டளையிட்டார்.
மறுநாள் அதிகாலை...
வீரர்கள் புடைசூழ காட்டிற்குப் புறப்பட்டார் மன்னர்.
"அமைச்சரே! என்ன ஒரு விலங்குகளையும்
காணவில்லை."
"அதிகாலை அல்லவா...சற்று பொறுங்கள்..."
நெடுநேரமாகியும் எந்த விலங்கும் வரவில்லை.
"அமைச்சரே.. என்ன விசித்திரமாக இருக்கிறது.
எனது காட்டில் விலங்குகளேஇல்லையா...."
" அப்படி இல்லை மன்னா...வேட்டைக்காரர்கள்
வந்திருக்கிறார்கள் என அஞ்சி விலங்குகள்
வெளியில் வரவில்லை போல் தெரிகிறது"
"அதற்கு என்ன செய்யப் போகிறீர்."
" விலங்குகள் வேடத்திலேயே சென்றால்தான்
அவை பயமில்லாமல் நம் அருகில் வரும்.
நாமும் குறைகளைக் கேட்டறிந்து கொள்ளலாம்."
" சரியான யோசனை...முதலில்
மான் வேடத்தில் சென்று
மான்களிடம் குறைகளைக் கேட்கிறேன்."
மன்னன் நினைத்தபடியே மான்களும்
அருகில் வந்தன.
"மான்களே, இந்த காட்டில் தங்களுக்கு
ஏதேனும் மனக்குறை உள்ளதா?..." கேட்டார்
மன்னர்.
" எங்கள் மன்னன் ஆட்சியில் எங்களுக்கு
எந்த குறையும் இல்லை.
ஒரே ஒரு மனக்குறைதான் உள்ளது."
என்றன மான்கள்.
" சொல்லுங்கள் ... தீர்த்து வைக்கிறேன்"
என்றார் மன்னர்.
" இந்த காட்டில் புலிகள் இல்லாமல் இருந்தால்
நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் "
என்றன மான்கள்.
" இனி காட்டில் புலிகள் இருக்காது .
நீங்கள் நிம்மதியாக வாழலாம்"
உறுதியளித்தார் மன்னர்.
காட்டிலுள்ள புலிகள் எல்லாவற்றையும்
கொன்றுவிட ஆணையிட்டார்.
மறுநாள் ஆடு வேடமணிந்து சென்று ஆடுகளிடம்
குறை கேட்டார்.
" எங்களுக்கு நரிகளால்தான் நிம்மதியாக
வாழ முடியவில்லை "என்று புகார் பத்திரம்
வாசித்தன ஆடுகள்.
மறுநாள் நரிகளைக் கொல்லும்படி
ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அடுத்து காட்டு எலிகளோடு பேசினார் மன்னர்.
" யானைகளால்தான் எங்களால் சுதந்திரமாக
எங்கும் நடக்கமுடியவில்லை.
மிதித்தே கொன்று விடுகின்றன.
இந்த யானைகள் இல்லை என்றால்
நாங்கள் நிம்மதியாக வாழ்வோம்"
என்றன எலிகள்.
மறுநாள் யானைகளைக் கொல்லும்படி
ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இப்படியே ஆணை பிறப்பித்துக்
கொண்ட போனால் காட்டில் ஒரு
விலங்கு் கூட இருக்காது.
விலங்குகள் இல்லாத காடு .....
நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.
மன்னரிடம் எப்படி எடுத்துச் சொல்வதென்று
அமைச்சருக்குத் தெரியவில்லை.
கவலையாக தனியாக ஒரு மரத்தடியில்
போய் உட்கார்ந்திருந்தார்...
அப்போது அந்த வழியாக ஒரு பெரியவர் வந்தார்.
அவரிடம் விசயத்தைக் கூறினார் அமைச்சர்.
சரி ...பொறுங்கள்...எல்லாவற்றுக்கும்
தீர்வு கிடைக்கும் என்று கூறிவிட்டுப்
போய்விட்டார் பெரியவர்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு
தோளில் கலப்பை யோடு
விவசாயி ஒருவர் வந்தார்.
கூடவே இரண்டு ஏர் மாடுகளும்
வந்து கொண்டிருந்தன.
மாடுகளிடம் சென்று குறை
கேட்டார் மன்னர்.
மாடும் ஒன்றைப் பற்றியுமே யோசிக்காமல்
" விவசாயிகள்தான் எங்களுக்குப் பிரச்சினை.
விவசாயிகள் இல்லை என்றால்
நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் "என்றன.
மன்னனுக்கு உடனடியாக பதில்
சொல்ல முடியவில்லை.
" விவசாயிகளைக் கொன்றுவிட்டால்
நாட்டில் உணவுக்குப் பெரிய
சிக்கலாகிப் போகுமே....என்ன செய்வது..."
கலங்கிப் போனார் மன்னர்.
" நாளை வந்து உன் பிரச்சினையைத்
தீர்த்து வைக்கிறேன்" என்று கூறிவிட்டு
அரண்மனைக்குத் திரும்பினார்.
இரவு முழுவதும் மன்னனுக்கு
தூக்கமே வரவில்லை.
மாடுகளுக்கு நாளை என்ன பதில்
சொல்வது ?
யாரிடம் போய் கேட்பது?
மறுநாள் அரசவை கூடியது.
மன்னன் அரசவையில் வந்து அமர்ந்தார்.
" அரசே.. தங்களைக் காண ஒரு பெரியவர்
வந்திருக்கிறார்" என்றான் காவலன் .
" வரச்சொல் .."என்றார் மன்னர்.
"எவ்வுயிரையும் காக்கும் வேந்தே வாழ்க.."
மன்னனை வணங்கியபடியே வந்தார்.
"அரசே..நான் ஒரு சாதாரண விவசாயி.
எனக்கு ஒரு குறை உள்ளது...அதை நீங்கள்தான்
தீர்த்து வைக்க வேண்டும் "என்றார்
அந்தப் பெரியவர்.
" குறை என்ன என்பதைக் கூறுங்கள் ."....
என்றார் மன்னர் .
"என் மாடுகளால் எனக்குப் பிரச்சினை...அதற்கு
நீங்கள்தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும்."
என்றார் விவசாயி.
மன்னருக்கு அதிர்ச்சியாகிப் போனது.
" என்னடா இது...நேற்றுதான் மாடுகள் வந்து
எங்களுக்கு விவசாயியால் பிரச்சினை என்றன.
இன்று விவசாயி வந்து எனக்கு மாடுகளால்
பிரச்சினை என்கிறார்."
மன்னருக்குத் தலைசுற்றுவதுபோல் இருந்தது.
அமைச்சர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்
கொண்டு ,மன்னா! மாடுகளைக் கொன்றுவிட
ஆணை பிறப்பித்து விடலாமா" என்று கேட்டார்.
பதறிப்போன மன்னர் " அது முடியாது .."என்றார்.
" அப்படியானால் விவசாயிகளைக்
கொன்றுவிடலாமா" என்று கேட்டார் அமைச்சர்.
" அதுவும் என்னால் முடியாது...
விவசாயிகள் இல்லை என்றால்
உணவு ஏது ?
உயிர் ஏது ?
இதுமட்டும் முடியவே முடியாது."
பிடிவாதமாக பதிலளித்தார் மன்னர்.
" ஏன் முடியாது ...ஒருவர் மகிழ்ச்சியாக
வாழ வேண்டும் என்றால் அவர்
கைகாட்டுகிற வர்க்கத்தையே அடியோடு
அழித்துவிடுவதுதானே நமது நாட்டு தர்மம்."
சாமர்த்தியமாக தனது கருத்தை
சொல்ல, முன் வரைவு ஒன்றை பதிவு
செய்தார் அமைச்சர்.
"ஆனால் அது வேறு... இது வேறு....
அப்படியானால்...இதற்கு முடிவே இல்லையா...."
அமைச்சரிடம் முதன்முறையாக
ஆலோசனை கேட்டார் மன்னர்.
"இருக்கிறது மன்னா.... தாங்கள் அருள்கூர்ந்து
நான் சொல்வதைக் கேட்க வேண்டும்."
"சொல்லுங்கள்....கேட்கிறேன்."
"இதுவரை விலங்குகள் உங்களிடம் கூறியது
குறை அல்ல மன்னா....ஒருவர்மீது ஒருவர்
கொண்ட அச்சம்.. அச்சம் என்பதைவிட
பொறாமை என்றுகூட சொல்லலாம்"
"அச்சத்தைப் போக்குவதுதானே
மன்னனின் கடமை."
"அச்சத்தைப் போக்கிவிடலாம்...
பொறாமை. தான் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற
சுயநலம்.சுயநலக்காரர்கள் உள்ளம்
தன்னைப்பற்றி மட்டுமே சிந்தித்துக்
கொண்டிருக்கும்.பிறரை வாழ விடாது. நீங்கள் அப்படியல்ல. எல்லோரையும் வாழவைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதில் தனிப்பட்ட விருப்பு
வெறுப்பு இருக்கக் கூடாது.
உங்கள் முடிவு யாரையும் பாதிக்காத
வகையில் இருக்க வேண்டும்.
குடிகளின் குறை தீர்ப்பது
மன்னரின் கடமையல்லவா?
"அப்படியானால் இதற்கு என்னதான் வழி"
"ஒன்றுக்கு ஒன்று சார்புடையதுதான் உலகு.
என்ற உண்மையைப் புரிய வைத்தாலே போதும்.
நாட்டிலுள்ள அனைவருமே மகிழ்ச்சியாக
வாழலாம்."
" ஓகோ....இது தெரியாமல் விலங்குகளைக்
கொல்ல ஆணையிட்டுவிட்டேனே....
அமைச்சரே..உடனே அந்த ஆணையை
நிறுத்துங்கள்."
"நீங்கள் போட்ட ஆணையை வெளியிடவே
இல்லை மன்னா..."
"என்னது...வெளியிடவில்லையா..."
"நல்லகாலம்..என்னை பாவத்தில் இருந்து
காப்பாற்றினீர்கள்.
இன்றுமுதல் நான் குறை தீர்ப்பு என்ற
பெயரில் முட்டாள்தனமாக
எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை."
என்று உறுதி எடுத்தவராக
அவையிலிருந்து புறப்பட்டார்.
இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதை கதை மூலம் பதிவிட்டது மிகச்சிறப்பு.
ReplyDeleteMiga Arumai. 🌷🌷🌷🌷🌷
ReplyDeleteஇறைவன்படைத்த உலகத்தைப் பேணிக் காப்பதே மகிழ்ச்சியான வாழ்வு என்பதை விளக்கும் அருமையான கதை🎖🎖🎖
ReplyDeleteஇறைவன்படைத்த உலகத்தைப் பேணிக் காப்பதே மகிழ்ச்சியான வாழ்வு என்பதை விளக்கும் அருமையான கதை🎖🎖🎖
ReplyDelete