உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்....

 உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்.....


உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க வீடும் இருந்தால் போதும்.
இந்த மூன்றும் மனிதனின் அத்தியாவசிய
தேவைகளாகும்.
இந்த மூன்று தேவைகளையும் நிறைவு
செய்வதற்குதான் மனிதன் ஓடி ஓடி
உழைக்கிறான்.
ஆனால் அந்த உடை ஆடம்பரமாக
இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல.
எளிமையாக அதாவது நான்கு முழம்
இருந்தால் போதுமாம்.
ஔவை சொல்கிறார் கேளுங்கள்.

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன
கண்புதைந்த மாந்தர்குடி வாழ்க்கை
மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே
                                          நல்வழி.   :  28

மனிதன் உண்பது ஒரு நாழி அளவு
சோறு மட்டுமே. உடுப்பது நான்கு முழ
அளவு உள்ள துணி..
ஆனால் அவன் எண்ணம் மட்டும்
எண்பது கோடியாக இருக்கிறது.
அதனால் தன்னால் எதையும் தெளிவாக
சிந்தித்துப் பார்க்கும்  திறன் குறைந்து
போகிறது. அப்படிப்பட்ட மாந்தர் வாழ்க்கை
இனிமையாக இருப்பதில்லை.
அவர்கள் வாழ்க்கை எளிதில் உடைந்து
போகும் மண்கலம் போலச் சாகும்வரை
துன்பம் நிறைந்ததாகவே இருக்கும் என்கிறார்
ஔவை.

நமக்கு வேண்டியது ஆழாக்கு அரிசியில்
ஆக்கப்பட்ட சோறு.
உடுப்பதற்கு நான்கு முழ அளவில்
ஓர் ஆடை .இதைத்தவிர வேறு என்னங்க
வேண்டும்.
தேவையில்லாமல் கண்ட கண்ட சிந்தனைகளையும்
ஆசைகளையும் வளர்த்து கொள்வதால்தான்
வாழ்க்கை முழுக்க நாம் சஞ்சலப்பட வேண்டி
உள்ளது.
மண்கலம் போன்ற வாழ்க்கை நிலைக்கு நம்மை
நாமே தள்ளிவிடுகிறோம்.
அதனால் இப்போ உடையுமோ இன்னும்
கொஞ்ச நாளில் உடைந்து போகுமோ என்று
எண்ணி எண்ணி நிம்மதி இழந்து
தவிக்கிறோம்.

இதே கருத்தை வேறு விதமாக
பதிவு செய்கிறது புறநானூற்றுப் பாடல்.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் குமே
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே , தப்புந பலவே.

மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரனார் பாடிய
புறநானூற்றுப் பாடல் இது.

உலகம் முழுவதும் ஒரு குடையில் ஆளும்
அரசனாக இருந்தாலும் சரி
இரவும் பகலும் தூங்காமல் ஒருசாண்
வயிற்றுக்காக உழைக்கும் வறியவனுகா
யினும் சரி உண்பதற்கு நாழி
அரிசி சோறும் உடுப்பதற்கு
இரண்டு முழ வேட்டியும்
போதும்.எல்லா தேவைகளும்
இந்த இரண்டு தரப்பு மக்களுக்கும்
ஒரே மாதிரியானதாகவே உள்ளது.

ஆனால் இவர்கள் இருவருக்கும்
ஒரே ஒரு வேற்றுமைதான் உள்ளது.
அரசனால் பிறருக்கு கொடுக்க முடியும்.
சாதாரண எளிய மனிதனால்
அது முடியாது.
அதனால் மிகுதியான செல்வம் படைத்த
அரசன் பெற்ற செல்வத்தைப் பிறருக்கு
கொடுத்து மகிழ்வதே நன்று.
தானே அனுபவிக்க வேண்டும் என்று
சுயநலவாதியாக இருந்தால்
அழிந்துபோக நேரிடும் என்கிறார்
நக்கீரன்.

அரசனாக இருந்தாலும் ஆண்டியாக
இருந்தாலும்
உணவும் உடையும் எல்லோர்க்கும்
ஒன்றுதான்.அளவுக்கு அதிகமாக
என்னிடம் இருக்கிறது என்று நிறைய
சாப்பிட முடியாது.
நான் பணக்காரன் என்று பத்து மீட்டர் துணியை
வாங்கி உடலில்
சுற்றிக் கொண்டு திரிய முடியாது.
உங்களிடம் அதிக பணம் இருக்கிறதா
இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்கிறார்
நக்கீரனார்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.
மனிதர்களாக பிறந்தவர் சக மனிதன்பால்
அன்பு பாராட்ட வேண்டும் போன்ற உயர்ந்த
கருத்துகள் இப்பாடலில் அடங்கி உள்ளது.

Comments

Popular Posts