மனசு பூப்போன்றது

                மனசு பூப்போன்றது

மனசு பூப்போன்றது...
 காதலிப்பவர்கள் பேசும் பேச்சு.
  
 வெள்ளை மனது. ....
 வெள்ளந்தியானவர்களைப்
 பார்த்து நாம் கூறுவது.
 
 கல் மனது ....கொடுமைக்காரர்களைப்
  பற்றிய   நமது விமர்சனம்.
  
  கடலாழம் கண்டாலும் கன்னி 
  மனஆழம் காணமுடியாது ....
  புரியா புதிரான பெண்களுக்காக 
  நாம் உருவாக்கி 
  வைத்திருக்கும் புதுமொழி.
  
  எது எப்படியோ மனசு எப்படி
  என்று யாராலும் 
  எளிதில் கணிக்க முடியாது.
  
  பூவுக்குள்ளும் பூ நாகம் இருக்கலாம் .
  கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கலாம்.
  
  கணினியாலும் கணிக்க 
  முடியாத ஒன்று மனது.
  அதனை நம்மால் மட்டும் 
  கணித்துவிட முடியுமா என்ன?
  
  எல்லோருடைய மனதையும் 
  புரிந்து கொண்டுவிட்டால் 
  நாட்டில் பிரச்சினையே எழாதே...
  
  புரிந்து கொள்ள முடியாததால்தானே
  பல பிரச்சினைகள் எழுகின்றன.
  புரிந்து கொள்ள  முடியாததைப் பற்றி
  பேசி என்ன பயன்... என்று தோன்றும்.
  
   அதற்காக அப்படியே விட்டுவிட 
   முடியுமா என்ன?
   பிரச்சினை என்று வந்துவிட்டால்
   தீர்வு கண்டுதானே ஆக வேண்டும்.
   
   தீர்வே இல்லாவிட்டால் விளைவுகள்
    விபரீதமாகிவிடும்.
   மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள்தான் 
  பின்னர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
  
 எந்த ஒரு குற்றச் செயலில் 
 ஈடுபட்டவர்களின் பின்னணியை நாம் 
 ஆராய்வோமானால் அவர்கள் ஏதோ 
 ஒருவிதத்தில்   பலமாக 
காயப்பட்டவர்களாகத்தான்  இருப்பர்.

 தற்கொலை போன்ற விபரீத முடிவு 
 எடுப்பதற்குக் காரணமும் ஏதோ ஒருவிதத்தில்
அவர்கள் பட்ட காயமாகத்தான் இருக்கும்.
 இது உளவியல்ரீதியாக கூறப்படும் உண்மை.
 
 எவரிடமும் சொல்லி ஆறுதல் தேட 
முடியாமல் உணர்ச்சி மேலிட  எடுக்கும் 
முடிவுதான் தற்கொலை.

 "தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
  நாவினால் சுட்ட வடு."
  என்றார் வள்ளுவர்.
வடுவாகிப் போன ஒன்றை 
மறைக்கவும் முடியாது.
மறக்கவும் முடியாது.
நாளும் நாளும் அதை எண்ணி
வெம்பி ,வெதும்பி வேதனை அடைவர்.

இப்படி ஒருவர் காயப்பட்டுப் போவதற்கு 
காரணம்  நம் பேச்சு அல்லது
செயலாகத்தான் இருக்கும்.

நம் பேச்சு ,செயல் யாவும் ஏதாவது ஒரு 
தாக்கத்தை இந்த சமுதாயத்தில்
ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.

 அது நன்மையானதாகவும் இருக்கலாம்.
  தீமை தருவதாகவும் இருக்கலாம்.
  கூடுமான மட்டும் நன்மை தரும்படியான
  பேச்சும் செயலும் நம்மிலிருந்து
  புறப்படட்டும்.
  
  நமது பேச்சு யாரையும் நோகடிக்கக் கூடாது.
  ஆதலால் பேசும்முன் ஒன்றுக்கு
  நான்குமுறை யோசிக்க வேண்டும்.
  
  பிறர் மனதைக் காயப்படுத்தும் சொற்கள்
  நம்மிடம் இருந்து புறப்படும்முன்
  அதே சொற்கள் திரும்பி வந்து
  நம்மை தாக்கினால் நம் மனம்
  என்ன பாடுபடும் என்று ஒரு நிமிடம்
  நினைத்துப் பார்த்தாலே பிறரைக்
  காயப்படுத்தும் எந்த சொற்களும்
  நம் வாயிலிருந்து வெளிவராது.
  
 பேசும் முன் சற்று யோசியுங்கள்.
 இந்தச் சொற்கள் ஒருவரை 
 அவமானப்படுத்திவிட்டால்.....

 அதே அவமானம் நாளை நமக்கு 
ஏதோ ஒரு இடத்தில் நிகழ்ந்துவிட்டால்....

மனம் வலிக்கிறதல்லவா!
 
 மற்றவர்கள் மீது நமது செயல்களின் தாக்கம் 
 அதிகமாகும்போதுதான் அவர்கள்
 நொந்து போகிறார்கள்.
 நொடிந்து போகிறார்கள்.
 நாளும் நாளும் நினைத்து நினைத்து
 நைந்து போகிறார்கள் .
முடிவில் மரித்தே போக வேண்டும் 
என்ற விபரீத முடிவுக்குத் 
தள்ளப்படுகிறார்கள்.

 வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.
 யாரையும் எதற்காகவும் காயப்படுத்தாதீர்கள்.
 
  மனது பூப்போன்றது என்ற ஒற்றை வரியை
 மட்டும் மனதில் வைத்துக்
 கொண்டாடிப் பாருங்கள்.

  பூவைக் கொய்து வீச மனம் வராது
அல்லவா!
  
 கொடிது ...கொடிது ...மனக்கொடுமை!
 மனசு எல்லாவற்றையும்விட பெரியதுங்க...

 மனசு என்ன ஒரு பந்தா?
 நாம்  உதைத்து விளையாடுவதற்கு...
 
  சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு
 மனசுக்குக் கிடையாதுங்க.
  பணக்கார மனசும் ஒன்றுதான்.
  பாவப்பட்ட மனசும் ஒன்றுதான் .
  
  பாகுபாடற்ற மனசை பாகுபாடின்றி 
  மதிக்கக்  கற்றுக் கொண்டாலே நாட்டில்
  பாதி தற்கொலைகள் குறைந்துவிடும்.

மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.
உங்களோடு இருக்கும் உறவுகள்
மனங்களைக் கொண்டாடுங்கள்.
  
  மனங்களை மதியுங்கள்....
  மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கட்டும்....
   மனசு பூப்போன்றது!
  

    
    
    
    
      
 

Comments

  1. மனசு மென்மையானது. காயப்பட்டால் உயிரையும் மாய்க்க முயற்சிக்கும் என்பதை பதிவு செய்தது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts