சும்மா...சும்மா..சும்மா

சும்மா..சும்மா...சும்மா...


"என்ன பாலாமணி அக்கா...
வேலை எல்லாம் முடிந்துட்டுதா...
சும்மா இருந்தாப்ல இருக்கு...

"உனக்கு என்ன மகராசி நீ சும்மா 
இருப்பதற்கு என்றே கொடுத்து வைத்தவள்"

" ஏன் உனக்கு என்னாயிற்று...
 நீயும் சும்மாதானே இருக்கிறாய் ."

"சும்மாவா...ஒருமணி நேரம் இந்த வீட்டுல 
சும்மா இருக்க விட்டுருவாகளா என்ன "

"சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேம்பா...
அதுக்குப்போய் ....ஆமா..
உங்க அத்தை சும்மா இருக்காங்களா? "

"அவுங்களுக்கென்ன ...சும்மா
தின்னுட்டு தின்னுட்டு...சும்மா இருக்க முடியாமல்
ஊர்வம்பு  இழுத்துக்கிட்டு இருப்பாங்க..."

"நீ சும்மா இருக்க சொல்ல மாட்டியா.."

"சும்மா சும்மா...எத்தனை தடவைதான்
சொல்றது...கேட்கணுமில்லையா..."

"உன் தங்கை ஒருத்தி சும்மா இருந்தாளே...
அவள் எப்படி இருக்கிறாள்.."

"அவள் வீட்டில் சும்மாதானே இருக்கிறேன்.
கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போகிறேன்
என்றாள்.
வீட்டில் சும்மாவே இருப்பதற்கு
ஏதாவது சும்மா படிச்சுட்டு வரட்டுமே
என்று அனுப்பி வைத்தேன்."

"சும்மா இருப்பதற்கு அது தேவலதான்..
அப்படியானால் உனக்கு சும்மா 
இருக்க நேரமே இருக்காது இல்லியா.."
.
"சும்மா கொஞ்ச நேரம்கூட
இருக்க முடியாது"

" எப்போவாது சும்மா  இருந்தால்
எங்க வீட்டுப்பக்கம் வர்றது...

 "  அதுக்கெல்லாம் எனக்கு நேரம் ஏது ?
பகலில் சும்மா கொஞ்சம் தூங்கிட்டா
 போதும். சும்மா பகலில் அது என்ன
  தூக்கம் ?என்று எங்க பாட்டி  வள்ளென்று
  விழுந்துடும்."
 
"இந்த வயசானவங்களுக்கு வாயை 
வைத்துட்டு சும்மா இருக்கவே முடியாது."

"அது சும்மா இருந்தால் வீட்டில்
பிரச்சினையே இல்லையே...
ஆமா..நீ எதுக்கு சும்மா என்னை 
கேள்விக் கேட்டுட்டே இருக்கிற..."

"சும்மா  ஒரு பேச்சுக்குக் கேட்டேம்பா....
கோவிச்சுக்காத...சும்மா இந்தப்பக்கம்
வந்தேன்...அதுதான் சும்மா உன்னையும்
பார்த்துப் பேசிட்டுப் போகலாமே 
என்று வந்தேன்."

"எனக்கென்னவோ நீ சும்மா 
 பொய் சொன்ன மாதிரி தெரியுதே "

"சும்மா வரல என்றால் சுமையைத்
தூக்கிட்டா வந்திருக்கிறேன்."

"சும்மா மழுப்பாத...சொல்லு..
எதுக்கு வந்தாய்.."

"சும்மா இருப்பதற்கு ஏதாவது
செடிகிடி மாடியில வளர்க்கலாமே 
என்று பார்த்தேன். ஏதாவது 
காய்கறி விதை  கிடைக்குமா என்று
பார்த்துட்டுப் போகலாம் என்று வந்தேன்."

"அதுதான....சோழியன் குடுமி சும்மா
ஆடாதே என்று பார்த்தேன்."

"அது என்ன ஆளாளுக்கு சோழியன்
குடுமி சும்மா ஆடாது என்கிறீங்க..
எனக்கு அது என்ன என்று 
இன்று தெரிந்தாகணும்."

"எனக்குத் தெரியாதுப்பா...
சும்மா எல்லோரும்
சொல்றாங்களே என்று நானும்
சொன்னேன்."

"எல்லோரும் சொல்லுகிறார்கள்
என்றால் நீயும் சும்மா சொல்லி வைப்பியா...
பொருள்தெரியாமல் பழமொழியைப்
பயன்படுத்தலாமா?"

"சும்மா சொல்லிட்டேம்பா தாயே
ஆளை விடு.ஏன் உனக்குத்
தெரிந்திருந்தால் சொல்லுறது..."

"அது சோழியன் குடுமி சும்மா ஆடாது"
என்பதல்ல...
"சோழியன் குடுமி சும்மாடு ஆகாது "என்பதுதான்
 திரிந்து சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று
ஆகிவிட்டதாம்."

"அது என்ன சும்மாடு ஆகாது..?"

"சோழமண்டலத்திலுள்ள வேளாளர்கள்
தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்களாம்.
பின்புற குடுமியைச் சும்மாடாகப்
பயன்படுத்தலாம்.  முன்புறக் குடுமியைச்
சும்மாடாகப் பயன்படுத்த முடியாது.
ஆகவேதான் சோழியன் குடுமி 
சும்மாடு ஆகாது என்ற சொல்வழக்கு
இருந்தது.அது
இன்று சும்மா ஆடாது என்று
திரிந்து வழக்குக்கு வந்து விட்டது."

"சும்மாடு சும்மா ஆகிப் போச்சு
இல்லையா? ...இப்போ சும்மாடு
என்றால் என்ன ? "

"ஏதாவது ஒரு சுமையைத் தலையில்
வைத்து தூக்கிவரும்போது பாரம்
தலையை அழுத்தாமல் இருப்பதற்காக
ஒருதுணியை வட்டமாக சுருட்டி
தலையில் வைத்து அதற்குமேல்
சுமையை வைத்து கொண்டுவருவர்.
வட்டமாக சுருட்டி வைக்கப்பட்டுள்ள
துணிக்குப் பெயர்தான் சும்மாடு..
புரிகிறதா? "

"புரிகிறது...புரிகிறது..
சோழியன் குடுமியும் புரிகிறது.
சும்மாடும் புரிகிறது...
இந்த சும்மா மட்டும் புரியவில்லை."

"சும்மா என்பது ஒன்றுமில்லாத 
ஒரு  செயலுக்காக மட்டுமே பயன்படுத்தப்
படும் சொல் என்று நினைத்துக்
கொண்டிருந்தோம்.
சும்மாவுக்கு அப்படி என்ன பெரிதாக பொருள் 
இருக்கப் போகிறது என்று நினைப்போம்.
 இதுவரை நாம் இருவரும
 பேசிக்கொண்டிருந்ததை மறுபடியும்
 ஒருமுறை நினைவுபடுத்திப் பார்.
 அதுஎன்னென்ன பொருளில் எல்லாம்
 பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது புரியும்."
 
" எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என
 படித்திருக்கிறேன்."

" இந்த சும்மா மட்டும் விதிவிலக்கா என்ன...
சும்மா என்ற சொல் வேலையில்லாமல்
இருக்கிறேன் என்பதைக் குறிப்பிட்டாலும்
ஒரு நாளைக்கு எத்தனைமுறை சும்மா...
சும்மா வந்து போகிற சொல்லாக
இருக்கிறது. மாறி மாறி வந்து
எத்தனை பொருளைக் கொடுக்கிறது."


சும்மா இரு என்பதும் சும்மா
வேலையில்லை என்றாலும் சும்மா
வீணாய்க் கிடப்பதற்கும் சும்மா
தற்செயலாய் என்பதும் சும்மா
உபயோகமற்று கிடப்பதற்கும் சும்மா
அடிக்கடி என்பதற்கும் சும்மா சும்மா
காலியாக இருப்பதற்கும் சும்மா
ஒன்றுமில்லை என்பதற்கும் சும்மா
பேசாதே என்பதற்கும் சும்மா
பேசிக்கிட்டே இருந்தாலும் சும்மா சும்மா
உண்மையில் என்பதற்கும் சும்மா..
பொய்யே சொன்னாலும் சும்மா..
இளைப்பாறும் போதும் சும்மா
விளையாட்டிற்குச் சொன்னாலும் சும்மா..
இலவசம் என்றாலும் சும்மா...சும்மா

இப்போ... புரிந்து போயிற்று.
எனக்கு தலை சுற்றுகிறது.
ஆளை விடுங்கடா சாமி..

 நானுந்தான்...சும்மா ரொம்ப நேரம்
 உன்னோடு பேசிக் கொண்டிருந்ததால்
நேரம் போனதே தெரியல....வருகிறேன்.
 
 மறுபடியும் சும்மாவா...வா...!

















.

Comments

  1. சும்மா சும்மாவுக்கே கதையா? நல்ல பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts