அறிவுடையவர்களாய் இருங்கள்

    அறிவுள்ளவர்களாய் இருங்கள்


கூடு கட்டுவதில் தூக்கணாங்குருவிக்கு
இணையான அறிவார்ந்த பறவை
வேறொன்றும் இல்லை.
பின்னல் போன்ற அதன் கூடு
கலையார்வம் கொண்டோரும்
வியக்கும் வண்ணம் மிகவும்
நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும்.
அது மட்டுமல்ல . தன் கூட்டிற்கு வெளிச்சம்
வேண்டும் என்பதற்காக கூட்டின் உள்பக்கம்
முழுவதும் சேற்றை அள்ளிப் பூசி
வைத்துவிடுமாம்.
சேறு காய்வதற்கு முன்பாக
மின்மினி பூச்சிகளைக் கொண்டுவந்து
சேற்றில் ஒட்டி வைத்துவிடுமாம்.
இதன் மூலம் கூட்டிற்கு நல்ல வெளிச்சம்
கிடைக்க வழி செய்து விடுமாம்.
இந்தச் சின்ன பறவைக்குள் இத்தனை
அறிவா!
வியப்பாக இருக்கிறதல்லவா!

தூக்கணாங்குருவியைப் போன்று
அனைவருக்கும் அறிவார்ந்த செயல்களில்
ஈடுபட வேண்டும் என்று ஆசைதான்.
ஆனால் நடக்கிற காரியமா என்ன?
அனைவருக்கும் அறிவின் மீது ஒரு
தாகம் உண்டு.
யாருமே தன்னை அறிவற்றவர் என்று
ஒத்துக் கொள்வதில்லை.
யாராவது தப்பித்தவறி முட்டாள்
என்று சொல்லிவிட்டால் போதும் ,
கோபம் தலைக்கு ஏறி தையதக்க...
என்று குதிக்க ஆரம்பித்து விடுவோம்.

ஆனால் விபரம் கெட்டத்தனமாக ஏதாவது
செய்துவிட்டு  தத்தக்கு பித்தக்கு 
என்று விழிப்போம்.
இது என் முட்டாள் தனத்தால்தான்
நடந்தது என்பதை மட்டும் ஒருபோதும்
ஒத்துக்கொள்ள மாட்டோம்.
நம் கம்ப்யூட்டர் மூளையின் கணிப்பு அப்படி.

ஆனால் நமது அறிவை வளர்த்துக் கொள்ள 
மறைமுகமாகப் படாத பாடுபடுவோம்.
கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்போம்.
ஓடி ...ஓடி  நாளிதழ் ,வார இதழ் 
என்று ஒன்று விடாமல் வாசிப்போம்.
பொது அறிவு புத்தகங்கள் அனைத்தையும்
தேடித் தேடிப் படிப்போம்.
நாட்டு நடப்பு , உலக நடப்பு எல்லாம்
தெரிந்தவர்கள் ஆகிவிட வேண்டும்
என்று ஒரு செய்திச்சானல்கூட விட்டு
வைக்க மாட்டோம்.
   
இதனால் மட்டும் நம்மால் அறிவுடையவர்கள்
ஆகிவிட முடியுமா!

"வேறு என்ன வேண்டும் ?"

" கேட்க வேண்டும் போல் தோன்றுமே.
அதையும் கேட்டுவிடுங்கள்.
  ஏன் விட்டு வைக்கிறீர்கள்?"
 
" கற்றிலனாயினும் கேட்க என்று
வள்ளுவரே கூறியிருக்கிறாரே ....
கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்பதால் 
பண்டிதன் ஆகலாம்" என்பீர்கள் .

நீங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்தான்.
  மறு பேச்சுக்கு இடமில்லை.
  தெரிந்து கொள்வது வேறு.
  அறிவுள்ளவர்களாக இருப்பது வேறு.
எல்லாம் தெரிந்தவர்கள் எல்லாம்
அறிவுடையவர்களாக இருப்பதில்லை.
  அறிவுடையவர்கள்... எல்லாம்
  தெரிந்திருக்க வேண்டும் என்று
  அவசியமும் இல்லை.
 
    என்ன...ஒரே குழப்பமாக இருக்கிறதா!
   
  அப்படியானால் கற்றல் ஒருவனை
  அறிவுடையவனாக மாற்றாதா?" என்று கேட்பீர்கள்.
 
கற்றல் எல்லாவற்றையும் தெரிந்து
கொள்ள உதவும் .ஆனால்
அதுவே அறிவு ஆகாது.

  அப்படியானால் அறிவாளியாய்
  இருப்பதற்கு என்னதான் வழி?
       
   இதுதான் ஒரே வழி.
  
  ஒரு சமயம் நண்பர் இருவர்
  தங்களுக்குள்  யார் அறிவாளி என்பதைக் குறித்து
  அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.
   சண்டை கைகலப்பாக மாறியது.
   இப்போது வழக்கு ஊர் பெரியவரிடம்
   கொண்டு செல்லப்பட்டது.
  
   பெரியவர் இரண்டு குடங்களில் தண்ணீர்
   நிரப்பி எடுத்துவரும்படி கூறினார்.
   நீர் நிரப்பிய குடங்கள் கொண்டுவந்து
   வைக்கப்பட்டன.
  
   "இருவரும் ஆளுக்கொரு தண்ணீர்
   குடத்தை எடுத்துக் கொண்டு 
   வீட்டுக்குச் செல்லுங்கள்.
  நாளை குடங்களோடு திரும்பி வாருங்கள்.
மற்றதை நாளைப் பார்த்துக்
  கொள்ளலாம் "என்றார் பெரியவர்.
  
  மறுநாள் தண்ணீர் குடத்தோடு
  இருவரும் திரும்பி வந்தனர்.
 
  ஊர் முழுவதும்  என்ன தீர்ப்பு
  கூறப்போகிறார் என்பதை அறிவதற்காக
  கூடி நின்று வேடிக்கை பார்த்துக்
  கொண்டிருந்தது.
 
  "  உங்கள் தண்ணீர் குடங்களை
  இங்கே கொண்டு வையுங்கள் "என்றார் பெரியவர்.
  இருவரும் குடங்களைப் பெரியவர்
  முன் கொண்டு வந்து வைத்தனர்.
 
முதலாமவன் குடத்தில் இருந்த
தண்ணீர் ஒரு சொட்டுகூட
குறையவில்லை.
    
" நீங்க தந்த மாதிரி அப்படியே
கொண்டுபோய் பத்திரமாக மூடி
வைத்திருந்தேன்.
ஒரு சொட்டு தண்ணீர்கூட குறையாமல்
அப்படியே கொண்டு வந்து வைத்துவிட்டேன் "
என்றான் பெருமையாக.

ஆனால் இரண்டாமவன் குடத்தில்
ஒரு சொட்டு தண்ணீர்கூட  இல்லை.
வெறும் குடமாக இருந்தது.

பெரியவர் என்ன என்பதுபோல மேலும்
கீழும் பார்த்தார்.

"ஐயா...என்னை மன்னிச்சுடுங்க...
நான் போகும் வழியில் ஒரு
கன்றுகுட்டி நீருக்காக அலைந்து
கொண்டிருந்தது.
கொஞ்சம் தண்ணீர்  குடித்துவிட்டுப்
போகட்டுமே என்று அதற்கு ஒரு பாத்திரத்தில்
சிறிது தண்ணீர் ஊற்றி வைத்தேன்.

சற்று தொலைவில் செடிகள் வாடி
கிடப்பதைப் பார்த்தேன்.
அதைப் பார்த்துவிட்டு என்னால் 
சும்மா போக முடியவில்லை.
அதற்கும் சிறிது நீர் ஊற்றிவிட்டேன்.

அப்போது சில காகங்கள்
ஊர்க் கிணற்றங்கரையில் கிடந்த
கொஞ்சம் நீரை உறிஞ்சி முடியாமல்
திணறிக் கொண்டிருப்பதைப்
பார்த்தேன்.
அதனால் மிச்சம் இருந்த நீரைப் பறவைகள்
குடிக்கட்டுமே என்று கிணற்றடியில்
ஊற்றிவிட்டுச் சென்றேன்.
இப்போது என்னிடம் வெற்றுக் குடம்தான்
உள்ளது" என்றான்.

"நீதான் அறிவாளி" என்றார் பெரியவர்.

எப்படி என்பது போல எல்லோரும்
பெரியவரைப் பார்த்தனர்.

"எவனொருவன் பிற உயிர்கள்
படும் துன்பத்தை தன் துன்பமாக
நினைத்து அதனைக் களைய
முற்படுகிறானோ அவன்தான் அறிவுடையவன்.
இந்த தம்பிக்கு தன்முன் எந்த உயிரும்
வருந்தி நிற்பதைப்பார்க்க முடியவில்லை.
அறிவுடையவனாக இருக்க விரும்புகிறவன்
வாடிய பயிர்களைக் கண்டபோது
எல்லாம் வாடிய வள்ளலாரைப் போல
செடி கொடிகள் வாடுவதைக் கண்டதும் 
  தண்ணீர் ஊற்றுபவனாக இருக்க வேண்டும்.
கீழே விழுந்து துடித்துக் கொண்டிருக்கும்
பறவையைக் காப்பாற்ற வேண்டும் என்ற
இரக்கம் குணம் உள்ள சிபி சக்கரவர்த்தி
போல இருக்க வேண்டும்.
விலங்கு , புழு, பூச்சி என்று அனைத்து
  உயிர்கள் மீதும் அன்பு செலுத்தத்
  தெரிந்தவனாக இருக்க வேண்டும்.
  அவன்தான் அறிவுடையவன்" என்றார்.

ஆமாங்க...  தம்மை சுற்றியுள்ள
உயிர்கள் மீது அன்பு  செலுத்தும்
ஒருவனால் மட்டுமே மகிழ்ச்சியான
சூழலை உருவாக்க முடியும்.
தான் மட்டுமல்ல... தம்மைச் சுற்றி
இருப்பவற்றையும் மகிழ்ச்சியாக
வைத்துக் கொள்ளுதல் தானே அறிவுடைமை.

கற்கிறோம் அறிவைப் பெறுவதற்காக.
பெற்ற  அறிவை அறிவார்ந்த வழியில்
பயன்படுத்துகிறவன்தான் அறிவாளி
என்ற இலக்கணத்திற்குள் வருகிறான்.

  கற்போம்.எல்லாவற்றையும்
  தெரிந்து கொள்வோம்.
  கற்றவற்றை அறிவார்ந்த
  வழிகளில் செலவிடுவோம்.
  உயிர்கள்மீது காதல் கொள்வோம்.
 
நீங்களும்   அறிவுடையவர்களாக
இருக்க வேண்டும் என்று மனக்கணக்கு
போட்டு விட்டீர்களல்லவா?
அப்படியானால் அறியாமையோடு
கொள்ளுங்கள் பிணக்கு.   
அறிவுடைமையோடு   தொடங்கட்டும்
உங்கள் வெற்றி கணக்கு.
    
   
         

Comments

  1. அறிவுடைமையின் கணக்கு மிகச் சிறப்பு.

    ReplyDelete
  2. தங்களின் அறிவாற்றலை நன்கு பயனபடுத்துகிறீர்கள். இது தங்களின வெற்றிப் படிதான்👌👌👌👌

    ReplyDelete
  3. அறிவுடைமையின் சிறப்பிற்கான தாங்களின் தன்னம்பிக்கை கட்டுரை மிக அருமை.👌👌👌🌺🌺🌺🌺🌺🌺

    ReplyDelete

  4. அறிவுடைமையின் கட்டுரை அருமை 👍
    சிறப்பாக இருக்கிறது💐💐💐💐🌺

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தொடர்ந்து
      வாசியுங்கள்.
      நிறைகுறைகளை
      எழுதுங்கள்.

      Delete

Post a Comment

Popular Posts