இல்லானை இல்லாளும் வேண்டாள்....
இல்லானை இல்லாளும் வேண்டாள்...
"பணம் பத்தும் செய்யும்"
" பணம் இல்லாதவன் பிணம்"
"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே "
இப்படி பணமொழிகள் ஏராளம்.
இவை எல்லாம் வெறும் மொழிகள் அல்ல.
பணமில்லாமல் பட்டு ..பட்டு.. நொந்து நூலாகிப்
போனவர்கள் கூறிய அனுபவ மொழிகள்.
பணம் இல்லாமல் என்ன செய்ய
முடியும் சொல்லுங்க...
பள்ளிக்குப் போகணுமா பணம்...
மருத்துவமனைக்குப் போகணுமா பணம்...
தவித்த வாய்க்குத் தண்ணீர் வாங்கணுமா பணம்....
ஒருவாய் சோறு தின்னணுமா பணம்...
திருமணத்தை நிச்சயிப்பது பணம்....
நிச்சயித்த திருமணத்தை நிறுத்தி
வைப்பதும் பணம்...
செத்தா பணம்....
செத்த பிணத்தைப் புதைக்கப்பணம்....
இடையில் எங்காவது பணமில்லாமல்
எதுவும் நடைபெறுகிறதா என்று
நினைவுபடுத்திப் பார்த்தால்....
ம்ஹும்....பணமில்லாமல் ஒன்றையும்
அசைக்க முடியாது.
இதுதாங்க எதார்த்த நிலைமை.
பட்டிமன்றத்தில் பேசுவதற்கு
வேண்டுமென்றால்
"பணம் என்னடா பணம்
குணம் தானடா நிரந்தரம்" என்று
சொல்லிக் கொள்ளலாம்.
நிஜ வாழ்க்கையில் இது எல்லாம்
சாத்தியப்படாது.
"பணம் இருப்பவன் பின்னாலும் பத்து பேர்;
பதவி இருப்பவன் பின்னாலும் பத்து பேர்."
பணமில்லாதவன் பந்தியில் போய்
இருந்தாலும் ஏய்...இந்தாப்பா..
கடைசி பந்திவரை பொறு என்று
எல்லோரும் சாப்பிட்டு பசி அடங்கும்வரை
காக்க வைத்துவிடுவார்கள்.
பணம் இல்லாதவன் பரியாசத்துக்கு
உரியவனாகி விடுகிறான்.
பணம் உள்ளவனுக்கு
எங்கு சென்றாலும் சிகப்பு கம்பள வரவேற்பு
கொடுக்கப்படுகிறது.
இதையே வள்ளுவர்,
"இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரைச்
எல்லாரும் செய்வர் சிறப்பு "
என்கிறார்.
இதைவிட ஒருபடி மேலே போய் எப்படி
அருளில்லாருக்கு அவ்வுலகம் இல்லையோ
அதுபோல பொருளில்லார்க்கு இவ்வுலகம்
இல்லை என்றும் சொன்னவர் வள்ளுவர்.
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு "
இப்படி பணம் படுத்தும்பாட்டை
அறிந்ததால்தான்
ஔவையும்,
திரைகடல் ஓடியாவது திரவியம்
தேடுடா பேராண்டி என்றார்.
" கற்கை நன்றே ;கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்று சொல்லி வைத்த பெருமக்கள்
கற்றால் மட்டும் போதாதுப்பா...
பொருள் வேண்டுமப்பா என்று
உரக்க உரைத்துச் சென்றிருக்கின்றனர்.
கல்வி என்னப்பா கல்வி .உனக்கு மதிப்பும்
மரியாதையும் வேண்டுமா...உன்னிடம்
பணம் இருந்தால் போதும்.
எல்லா மதிப்பும் மரியாதையும் வந்து
சேரும்.
உற்றார் உறவினர் எல்லோரும்
வாயார வரவேற்று
உபசரிப்பர்.
பணம் இல்லையா..... உன் மனைவிகூட
உன்னை மதிக்க மாட்டாள்.
அதுபோகட்டும் அவளாவது அடுத்த
வீட்டிலிருந்து வந்தவள்.
உன்னை ஈன்றெடுத்த தாய்கூட
விரும்ப மாட்டாள். என்ன கொடுமை பாருங்கள்!
பெற்றதாய் பிள்ளையை விரும்ப மாட்டாளா?
பணக்கார மகனோடு சேர்ந்து கொள்வாள்.
இதுதான் கள எதார்த்தம்...
நீ வாய் இருந்தும் பேச முடியாதவனாகத்தான்
இருக்க வேண்டும்.
உன் பேச்சுக்கு மதிப்பும் கிடையாது.
மரியாதையையும் எதிர்பார்க்க முடியாது.
நீ உண்மை பேசினாலும் உலகம்
உண்மை என்று ஒத்துக் கொள்ளாது.
எந்த இடத்திலும் மரியாதை இருக்காது.
சபையில் அஞ்சி அஞ்சி ஒதுங்கி
நிற்க வேண்டியதுதான்.
உன் பேச்சு எந்த இடத்திலும்
எடுபடாது . மொத்தத்தில் நீ ஒரு செல்லாக்காசாக
முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி
வைக்கப்படுவாய்.
இதைத்தான் ஔவையாரும்,
" கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர் கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல் "
என்று சொல்லியிருக்கிறார்.
பணம் தாயையும் நம்மிடமிருந்து பிரித்து
கொண்டு செல்லும் சக்தி கொண்டதா ?
ஏற்றுக்கொள்ள முடியவில்லை... இல்லையா?
ஔவை சொன்னால் அதில் அர்த்தம்
இல்லாமல் இருக்காது.
சிந்திக்க வேண்டிய விசயம்தான்.
உலக அனுபவத்தின் காரணமாக
பிறந்த பாடல்.
உச்சந்தலையில் ஓங்கி அடித்து
சிந்திக்க வைக்கும் கருத்து.
பணம் பத்தும் செய்யும் என்பதனால் என்னவோ உலகில் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.இதற்கு என்ன தான் முடிவோ ???
ReplyDeleteExcellent explanation about money,kodumai naan pathivu seivathu englishil,aanaal karuthu ondruthan.
ReplyDelete