உலக மகளிர் தினம்
உலக மகளிர் தினம்
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா "
என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
அவர்கள்.
ஆம். பெண்ணாக பிறப்பதற்கே பெரும்பேறு
பெற்றிருத்தல் வேண்டும்.
ஆக்கும் சக்தி கொண்டவள் பெண்.
அவளன்றி ஒரு அணுவும் அசையாது.
உலகம் பெண்களைச் சுற்றி சுற்றியே
சுழன்று கொண்டிருக்கிறது.
பெண்ணை நீக்கிவிட்டு இந்த உலகத்தைப்
பார்ப்போமானால் அது ஒரு சூனியமாகத்தான்
தெரியும். மகிழ்ச்சி இல்லாத பூமியாக
இருக்கும். இன்பமும் மகிழ்ச்சியும் தந்து
உலகை இயக்கிக் கொண்டிருப்பவள் பெண்.
ஆனால் ஒரு காலத்தில் பெண் என்பவள்
வெறும் போகப் பொருளாகவே பார்க்கப்
பட்டாள். அடிமையாகவே நடத்தப்பட்டாள்.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?
என்று இருந்த காலம் மாறி இன்று பெண்கள்
அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்துவிட்டோம்.
இப்படி பெண்கள் தங்களை முன்னேற்றம்
அடைந்தவர்களாக மெய்ப்பிப்பதற்கு முன்னர்
பல போராட்டங்களையும் சவால்களையும் கடந்து
வர வேண்டியதாயிற்று.
பெண்களை பலவீனமானவர்களாகவே பார்த்து
வந்த சமூகம் மிக எளிதில் பலசாலிகள்
என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
மெல்ல மெல்ல தொழில் துறையில் தடம் பதித்த
பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம்
தர மறுத்தது. பல இடங்களில் பெண்களுக்கான
உரிமைகள் மறுக்கப்பட்டன.
அதற்காகப் போராடி பெண்களின் உரிமைகளை
மீட்ட நாள் மார்ச் எட்டாம் நாள்
உலக மகளிர் தினம்.
இது நம் அம்மாவுக்கான தினம். அக்காவுக்கான தினம்.
தங்கைக்கான தினம். மங்கைக்கான தினம்.
உலகின் அனைத்து மகளிருக்குமான தினம்.
இது இன்று ஒரு கொண்டாட்டத்தின் நாளாக
இருந்து வருகிறது.
இந்தக் கொண்டாட்டத்தின் நாள் உருவானதின்
பின்னணி நெடிய வரலாறு கொண்டது.
பெண்களுக்கான பல உரிமைகள் மறுக்கப்பட்டன.
தங்களுக்கான உரிமையைப் போராடிதான்
பெற வேண்டும் என்று நினைத்த சில
பெண்ணிய சிந்தனையாளர்கள் சேர்ந்து
உலக மகளிரை எல்லாம் ஒருங்கிணைக்கும்
முயற்சியில் ஈடுபட்டனர்.வேலை நேரத்தைக்
குறைக்கவும் ஆண்களுக்கு நிகரான
கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முன்
வைத்தும் நியூயார்க் நகர பெண்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர் . 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஒரு மாபெரும்
பேரணியை நடத்தினர்.அந்த நாளை தேசிய பெண்கள்
தினமாக அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி.
அதன் பின்னர் டென்மார்க் நாட்டின்
கோபன்ஹேகன் நகரில்
1910 ஆம் ஆண்டு உலக சோசலிஸ்ட் பெண்கள்
மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது ஜெர்மனி நாட்டைச்
சார்ந்த கிளாரா ஜெட்கின் என்ற புரட்சிப் பெண்ணும்
இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் அனைத்து நாட்டில் உள்ள
பெண்களும் சேர்ந்து
மகளிர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.
ஆனால் அது அனைவராலும் ஒருமித்தக்
கருத்தோடு ஏற்றுக்
கொள்ளப்படவில்லை.
அதன் பிறகு 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில்
பெண் தொழிலாளர்கள் ஒரு புரட்சியை முன்னின்று
நடத்தினர் .அதனால் ரஷ்யாவில் ஜார் மன்னரின்
ஆட்சியே கவிழும்படியாகியது.
இதனையடுத்து சோவியத் ரஷ்யாவிலுள்ள
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஒரு பெரிய
போராட்டம்
நடைபெற்றது. இதில் ரஷ்ய புரட்சியின்
நினைவாக பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும்
என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி மார்ச் எட்டாம் நாள் மகளிர் தினம்
கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதுமுதல் மார்ச் 8 ,உலக மகளிர் தினமாக
கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகர
பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக
போராடி மகளிருக்காக குரல் கொடுத்த நாள்.
இப்படி நாடெங்கிலும் உள்ள பெண்கள்
போராடியதன் விளைவாக 1919 ஆம்
ஆண்டு பெண்கள் தினம்
கொண்டாடப்பட்டது.
1975இல் இருந்து இந்தநாள் உலக மகளிர்
தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்கள் நாட்டின் கண்கள்.
மகளாய் மருமகளாய் தங்கையாய்
தமக்கையாய் தாயாய் தாரமாய்
எத்தனை எத்தனை அவதாரங்கள்!
பெண்களைப் போற்றும் பூமி இது.
அதனால்தான் நாட்டை தாய்நாடு என்கிறோம்.
நிலத்தைப் பூமாதேவி என்கிறோம்.நீரை
கங்கா தேவி என்கிறோம்.
இறைவனின் படைப்புகள் யாவுமே
பெண்ணாகவே பார்க்கப்படுகிறது.
செல்வத்தை லட்சுமி என்கிறோம்.
கல்வியை சரஸ்வதி என்று வணங்குகிறோம்.
வீரத்தை சக்திதேவி என்கிறோம்.
சாப்பாட்டை அன்னம் என்கிறோம்.
ஏன் வெளிச்சத்தைக்கூட ஜோதி என்று
பெண்கள் பெயரால் தானே அழைக்கிறோம்.
நிம்மதியை சாந்தி என்கிறோம்.
இல்லாள் அகத்திருக்க
இல்லாதது எதுவும் இல்லை என்பார்கள்.
பார்க்கும் பொருள் யாவற்றிலும் நீக்கமற
நிறைந்திருப்பவள் பெண்.
அந்த மகளிருக்கான நாள் இன்று.
இது படித்தப் பெண்களுக்கான நாள்
மட்டுமன்று. வேலை பார்க்கும் பெண்களுக்கு
உரிமை பெற்றுத் தந்த நாள் மட்டுமன்று.
அனைத்து தரப்பு பெண்களுக்குமான நாள்.
அனைவரையும் கொண்டாடும் நாள்.
பெண்களைப் போற்றுவோம்.
அனைவருக்கும் இனிய
உலக மகளிர் நாள்
நல்வாழ்த்து!
Comments
Post a Comment