பிழையின்றி எழுதுவோம்

                  பிழையின்றி எழுதுவோம்


"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "
 
  ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் 
  அவ்வாறு செய்யலாம்
  என்று சொல்வது எல்லோர்க்கும் எளிது.
 ஆனால் சொல்லிய வண்ணம்
 செய்து முடித்தல் அரிது
  என்கிறார் திருவள்ளுவர்.

 இப்படி எழுதலாம் ...அப்படி எழுதலாம் ...
 என்று ஆயிரம் அறிவுரை கூறலாம். 

ஆனால்  எழுதும்போது நாம் படும்பாடு.
 அங்கும் இங்கும் இடிக்கும்.

வல்லின 'ற 'போட வேண்டுமா? 
இடையின 'ர 'போட வேண்டுமா? 
என்று தெரியாமல் எதையாவது
ஒன்றைப் போட்டு பொருள்
தலைகீழாக பொருள் மாறும்படியாக
எழுதி அனுப்பி அவமானப்பட்டிருப்போம்.

இரண்டு சுழி 'ன'கரமும் 
மூன்று சுழி 'ண'கரமும்
படுத்தும்பாடு அப்பப்பா.....
இன்று வரை துரத்திக்கொண்டுதான்
இருக்கிறது என்பது குறுஞ்செய்திகளை
வாசிக்கும்போது புரிகிறது.

இப்படி பல சொற்கள் பல 
நேரங்களில் நம்மை
பாடாய்ப் படுத்தியதுண்டு.

அடித்துத் திருத்தி திருத்தி முடிவாக...
எதுவாகவும் இருந்துட்டு போகட்டும் 
 என்று சலிப்பாக எழுதி முடிப்போம்.


இந்த அனுபவம் எனக்கும் இருந்திருக்கிறது.
உங்களிலும் பலருக்கு இப்படிப்பட்ட
அனுபவம்  இருந்திருக்கும்.
ஏன்.... இன்றும் அதனைச் சரிசெய்யத்
தெரியாமல் விழித்துக் கொண்டுதான்
தவறுதலாக  எழுதிக் கொண்டிருக்கிறோம்.

புத்தகங்கள் வாசிக்கும் போதே 
எழுத்துக்கள் கையாளப்பட்டிருக்கும்
முறையையும் பொருள்
வேறுபாட்டையும் கவனித்து வாசித்து
வருவோமானால் பெரும்பாலும்
எழுத்துப்பிழை இல்லாது
எழுதிவிடலாம்.

அதற்கு நேரம் எடுத்துக்கொள்வதில்லை.
சரி. போனது போகட்டும்.

 அதுவா இருக்குமோ... இதுவா இருக்குமோ
 என்று நமக்கு இதுவரை  குழப்பத்தை
 ஏற்படுத்தி வந்த சொற்களுள்   
ஒரு சில சொற்களைப் 
பற்றி இன்று அறிந்துகொள்வோம். 
 
 பொருத்து , பொறுத்து  
 
 இந்த இரண்டு சொற்களும் 
எழுதும்போது குழப்பமடையாதோர்
இருக்க முடியாது. அந்த அளவுக்கு
நம்மை பாடாய்ப்படுத்திய
சொற்கள் இவை இரண்டும்.
 
பொருத்து' என்றால் ஒன்று சேர் 
என்று பொருள்.

இந்தச் சக்கரத்தை வண்டியில்
'பொருத்து என்று சொல்வதுண்டு.
 
'  பொறுத்து 'என்றால் தாங்கிக் கொள்ளுதல் , 
  ஏற்றுக் கொள்ளுதல் போன்ற
  பொருள்களில் பயன்படுத்தப்படும்
  சொல்லாகும்.

பொறுத்தல்- தாங்கிக் கொள்ளுதல், பொறுமையாக
                             இருத்தல்,ஏற்றுக்கொள்ளுதல்
  
 என்னைப் பொறுத்தமட்டில் 
 என்று   எழுதும்போது வல்லின 'ற'கரம்
 பயன்படுத்த வேண்டும்.
அதாவது நான் ஏற்றுக்கொண்ட
கருத்து இது என்ற பொருளில் 
பேசும்போதுதான்
என்னைப் பொறுத்தமட்டில்
என்று சொல்கிறோம்.

என்னைப் பொருத்தமட்டில் "என்று
 எழுதுவது தவறு.
 
"  இந்த இரண்டு சட்டங்களையும்
  பொருத்த வேண்டும்  "என்று எழுதும்
  போது இடையின ரகரம் பயன்படுத்த 
 வேண்டும்.
 
"பொறுத்தது போதும் பொங்கி எழு"
இந்தத் தொடரில் பொறுத்தது என்பதன்
பொருள் பொறுமையாக இருந்தது
என்பதாகும்.
இப்படி ஒரு சொல்லின் பொருள் மற்றும்
வேர்ச்சொல் ஆகியவற்றில்
சற்று கவனம் செலுத்தி எழுதினால்
தவறு வராது. 
 
  உளமார, உளமாற

  உளமார என்று எழுத வேண்டுமா  ?
  உளமாற என்று   எழுத வேண்டுமா ?

  இவையும் நம்மை இன்றுவரை
 குழப்பமடைய வைத்துக்கொண்டிருக்கும்
  சொற்கள்தான்.

  உளமாற என்றால் 
  உள்ளம் + மாற என்று ஆகிறது. 
  
  மாற என்றால் மாறுபாடு, மாற்றம் என்று
  பொருள்படும்.
  
 அப்படியானால் உளமாற என்று
 எழுதுவது சரியாகுமா?
இல்லை அல்லவா!

  உளமார  என்றுதான் 
  எழுத வேண்டும்.

உளமார என்றால் உளம் நிறைய
என்று பொருள்.
உளமார - உள்ளம் நிறைய
  
 மனமார வாழ்த்துகிறேன் அல்லது
உளமார வாழ்த்துகிறேன் என்றுதான் 
எழுத வேண்டும்.
  

மனமாற என்று எழுதிவிட்டால் மனம்
மாறுபட்டு வாழ்த்துகிறேன் 
என்று தவறுதலாகப் பொருள் 
கொள்ளப்படும் அல்லவா?

அளப்பரிய, அளப்பறிய

 அளப்பரிய சரியா?
 அளப்பறிய என்று எழுதுவது  சரியா?
 
 குழப்பமடைய வேண்டாம்.
 
அடிச்சொல்லையும் விகுதியையும் 
பிரித்துச் சொல்லிப் பாருங்கள்.

பெரியதாக என்று சொல்லவேண்டும்.
அப்படியானால் அளப்பரிய என்றுதானே 
எழுத வேண்டும்.

அளப்பரிய என்றால் அளவிட முடியாத,
மிகப்பெரும் போன்ற பொருள்களில்
பயன்படுத்தப்படும்.

அளப்பரிய - மிகப் பெரிய

அளப்பறிதல் என்றால் ஒருவனுடைய
எண்ணத்தை ஆராய்தல் என்று
பொருள்.
ஆதலால் அளப்பறிய என்று எழுதுவது
  தவறு.
அளப்பரிய ஆவல் என்று எழுதுதல்
சரியானது ஆகும்.

அளப்பறிய ஆவல் என்று எழுதிவிட்டால்
உங்கள் எண்ணத்தை ஆராய ஆவல்
என்று பொருளாகிவிடுமல்லவா?

கோவை , கோர்வை



கோவை சரியா?
கோர்வை என்று எழுதுவது சரியா ?

என்ற குழப்பமும் ஏற்படுதல் உண்டு.

கோவை என்பது சரி.


கோவை என்பது தொடர்ச்சியாக எனப்
பொருள்படும்.

தொடர்ச்சியாக எழுத முடியவில்லை என்று 
சொல்லும்போது கோவையாக எழுதமுடியவில்லை
என்றுதான் எழுதவேண்டும்.

கோர்வை என்றால்  கோர்த்துக் 
கொள்ளுதல்
என்று பொருள்.

கை கோர்த்துக் கொண்டு நில்லுங்கள்
என்று சொல்லலாம்.

ஆனால் தொடர்ச்சியாக என்ற
பொருள் வேண்டும் என்றால்
 கோவையாக என்று எழுதுவதுதான் சரியாக
இருக்கும்.



முன்னூறு , முந்நூறு

முன்னூறு, முந்நூறு எது சரி?

முன் + நூறு =முன்னூறு 
அதாவது முன்னால்  கொடுத்த
நூறு எனப் பொருள்படும்.

முந்நூறு என்றால்
மூன்று + நூறு = முந்நூறு
ஐந்து + நூறு = ஐந்நூறு

ஆதலால் முன்னூறு என்று எழுதக்
கூடாது.முந்நூறு  மூட்டை நெல்,
முந்நூறு பழங்கள் என்றுதான்
எழுத வேண்டும்.
.
 அருகாமை, அருகில்

  அருகாமை என்றால் அருகில் இல்லாமை 
  என்று பொருள்படும்.

   அருகில் என்றால் பக்கத்தில் என்று
   பொருள்.

ஆதலால் பக்கத்தில் என்ற பொருள்பட
எழுத வேண்டும் என்றால்
அருகாமை என்று எழுதுவதைத்
தவிர்க்க வேண்டும்.

 அருகில் என்று எழுதுவதே சரி.
   


 தேனீர், தேநீர்

  தேநீர் என்றால் தேயிலை நீர் என்பதாகும்.

  தேனீர் _ என்றால் தேன் போன்ற நீர்
  எனப் பொருள்படும்.

தேனீர் கடைக்குப் போகிறேன்
என்றால் தேன் போன்ற நீர் உள்ள
கடைக்குப் போகிறேன்
என்று பொருள்படும்.

ஆதலால் தேனீர் கடை
 என்று எழுதுவது தவறு.

தேநீர் கடை என்றுதான் எழுதி
வைக்கவேண்டும்.

தேநீர் - சரி

வளவள, வழவழ

இந்த இரண்டு சொற்களும் எழுதும்போது
அவற்றின் பொருள் அறிந்து 
எழுத வேண்டும்.

வளவளவென்று பேசிக்கொண்டே
இருப்பது என்பது தொடர்ச்சியாக
பேசுவது.


ஆனால் வழவழவென்று பேசினான்
என்றால் ஒருமாதிரியாக 
புரியாமல் கொழகொழவென்று
பேசி மழுப்புவார்களே அந்த இடங்களில்
இந்த வழவழ என்ற சொல்
பயன்படுத்தப்பட வேண்டும்.

இப்படி எல்லா சொற்களையுமே
ஓரளவுக்குப் பொருள் புரிந்து
எழுதினால் தவறுதலாக எழுதாமல்
இருக்கலாம்.

இப்போது ஒருசில சொற்களில்
 சற்று தெளிவு பிறந்திருக்கும்
என்று நம்புகிறேன்.
   
இது போன்று உங்களுக்கு எழும்
சந்தேகங்களைப் 
பதிவிடுங்கள்.தொடர்ந்து கட்டுரையாக
வெளியிடுகிறேன்.


  

  
 
    
    

Comments

  1. மிகச்சிறப்பான பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  2. கேட்டது ஒன்று கிடைத்தது நூறு நன்றி தமிழம் மா

    ReplyDelete
  3. உள்ளம்+ஆற = உளமாற. உள்ளம் ஆற(நிறைய) வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts