நா நெகிழ் பயிற்சி
நா நெகிழ் பயிற்சி
மொழி விளையாட்டு சொற்களை
உச்சரிக்கும் பயிற்சி தருவதாக இருக்கும்.
ழகர றகர லகர எழுத்துகள் சரியாக
உச்சரிக்கப்பட சில சொற்றொடர்களைச்
சொல்லிச்சொல்லி
பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக
இத்தகைய சொற்றொடர்களைச்
சொல்லி விளையாடுவர்.
அதுகூட நல்ல தமிழ் உச்சரிப்புக்கு
உதவுவதாக இருக்கும்.
இன்றும்கூட ஒரு சில மாவட்டங்களைச்
சேர்ந்தோர் ள , ல , ழ வேறுபாடு
இல்லாமல் பேசுவதைக்
கேட்கும்போது தமிழ்
என்ன பாடுபடுகிறது என
வருந்துவதைத் தவிர
வேறுவழி தெரியாது.
படியாதவர் என்றால் அட ....போகட்டும்
அறியாமை என்று விட்டுவிடலாம்.
படித்தவர்கள் புத்தகங்களில்
கண்டிப்பாக நல்ல தமிழ்ச் சொற்களை
மட்டுமே படித்திருப்பார்கள்.
அவர்கள் தவறாக உச்சரிக்கும்போது
வியப்பாக இருக்கும்.சரியான உச்சரிப்பு
இல்லை என்றால் பொருள் மாறிப் போகுமே....
பிழைபட பேசுவது தவறாகாதா.?...
பிழையில்லாமல் பேச பயிற்சி
எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் மொழி என்பதை தமில் மொலி
என்றால் எப்படி இருக்கும்?
வாழைப் பழம் என்று சொல்ல வராது.
வாயப் பயம் என்பவர்களை என்னவென்பது!
" சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்"
நாளும் பயிற்சி எடுத்துக் கொண்டால்
நல்ல தமிழ் பேச முடியும்.
நாநெகிழ் சொற்றொடர்கள் அதற்குத்
துணைபுரிவதாக இருக்கும்.
அத்தகைய பயிற்சி எடுத்துக்கொள்ள
நா நெகிழ் சொற்றொடர்கள்
உதவுவதாக இருக்கும்.
அடுத்தது நா பிறழ் பயிற்சி.
நா பிறழ் பயிற்சி என்பது
ஒத்த ஒலியுடைய சொற்கள்
அடுத்தடுத்துவரும்படி அமைந்த
தொடர்களை விரைவாகவும் பிழையின்றியும்
கூறுமாறு பயிற்சி அளிப்பதுதான்
நா பிறழ் பயிற்சி.
பள்ளிப் பருவத்தில் சொல்லிப்
பழகியவைதான்.
மேலும் சொல்லிப் பழகுங்கள்.
"இயேசுவின் மலைமொழி
இனிய மணி மொழி"
" ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி
உருளுது புரளுது."
" கொக்கு நெட்ட கொக்கு
நெட்ட கொக்கு இட்ட முட்ட
கட்ட முட்ட"
" இது யாரு தச்ச சட்டை
எங்க தாத்தா தச்ச சட்டை "
" வீட்டுகிட்ட கோரை
வீட்டு மேல கூரை
கூரை மேல நாரை"
"அவள் அவவளந்தாள்
இவள் அவலளப்பாள்
இவல் அவலளந்தால்
அவள் அவலளப்பாள்
அவளும் இவளும் அவலளக்காவிட்டால்
எவள் அவலளப்பாள்"
" ஆடுகிற கிளையில
ஒரு கிளை தனிக் கிளை
தனிக்கிளை தனில் வந்த
கனிகளும் இனிக்கல"
" கிழட்டுக் கிழவன்
வியாழக்கிழமை
சடுகுடு விளையாட
குடுகுடுவென ஓடி
வாழைப்பழத் தோலில்
வழுக்கி விழுந்தான்."
" பச்சை நொச்சை கொச்சை
பழி கிழி முழி
நெட்டை குட்டை முட்டை
ஆடு மாடு மூடு"
"காக்கா காக் காவென்று கத்தினதால
காக்கான்னு பேரு வந்ததா
காக்கான்னு பேரு வந்ததால
காக்கா காக் கான்னு கத்துதா"
"ஒரு கை எடுக்க
மறு கை கொடுக்க
பிற கை மடக்க
பல கை அடக்க
வடக்கே போனான் கடுக்கன்"
"ஏணிமேல கோணி
கோணிமேல குண்டு
குண்டுமேல புல்லு
புல்லுக்குள்ள பூச்சி
பூச்சி எங்க என
கேட்டது ஆச்சி
விட்டது மூச்சு"
"சரக்கு ரயிலை
குறுக்கு வழியில்
நிறுத்த நினைத்த
முறுக்கு மீசை மைனர்
சறுக்கி விழுந்தும்
முறுக்கு மீசை இறங்கவில்லை"
"இங்கு அங்கு எங்கு போனாலும்
நுங்கு தின்னலாம்"
"புட்டும் புதுப்புட்டு
தட்டும் புதுத்தட்டு
புட்டைக் கொட்டிட்டு
தட்டைத் தா"
"மேல ஏழு ஓலை
கீழ ஏழு ஓலை
ஆகப் பதினான்கு ஓலை."
"ரெண்டு செட்டு சோளத் தோசையில
ஒரு செட்டு சோளத் தோசை
சொந்தத் தோசை "
சொல்லிப் பழகுங்கள்.
நல்ல பயிற்சியாக இருக்கும்.
Arumaiyana payirchi. Superb.
ReplyDeleteஅருமையான பயிற்சி.அனைவரும் பழகலாம்.
ReplyDelete