மயங்கொலிகள்_ ல , ழ , ள

         மயங்கொலிகள்  _ல , ழ , ள

ல , ழ , ள  இந்த மூன்று எழுத்துகளும்
பேசும் போது  நிறைய குழப்பம்
தருவதுண்டு.
பொருள் மயக்கம் தரும்
இந்த மூன்று எழுத்துகளையும்
எழுதும்போது அதிக கவனம்
எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் மொழியின் சிறப்பே அதன்
உச்சரிப்பில்தான் இருக்கிறது.

சிறப்பு ழகரம் உள்ள சொற்களை 
உச்சரிக்கும்போது அதிக கவனம்
எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறப்பு ழகரத்தை நாக்கை மடித்து
உள்நோக்கி இழுத்து தொண்டையிலிருந்து
உச்சரிக்கவேண்டும்.

அப்போதுதான் அதன் சிறப்பை 
வெளிப்படுத்த முடியும்.

இப்போது லகர ளகரம் பிறக்கும்
இடங்களைப் பார்ப்போம்.

' 'என்ற எழுத்தை மேல் நோக்கிய 
 லகரம் என்று அழைக்கிறோம்.
 
 இதனை ஒலிக்கும் போது நுனி நாக்கு
 முன் பல் வரிசைக்கு மேல் உள்ள 
 அண்ணத்தைத் தொட்டு ஒலிக்க வேண்டும்.
 
' ள 'என்ற எழுத்தை  கீழ் நோக்கிய ளகரம்
 என்று அழைக்கிறோம்.
 
 இவ்வெழுத்தை ஒலிக்கும்போது நாக்கு 
 மேலண்ணத்தின் மையப்பகுதியைத்
 தொட்டு ஒலிக்க வேண்டும்.
 
 எழுதும்போதும் பொருள் வேறுபாடு
 தெரிந்திருந்தால் மட்டுமே தவறில்லாமல் 
 எழுத முடியும்.
 
லகர ழகர ளகர வேறுபாடு அறிய
வைப்பதற்காக சில சொற்கள்
 இதோ:

 அலகு _ பறவையின் மூக்கு, அளவு
 அழகு  _  வனப்பு
 அளகு  _ சேவல் , பெண் கூகை
  
 அழம்  _ பிணம் 
 அலம்  _ கவப்பை 
 அளம்  _ உப்பு 
 
 அழி   அழித்து விடு 
 அலி  _ பேடி , காகம்  
  அளி  _ கருணை  , கொடு  , கள்  , வண்டு
  
 அழை.  _ கூப்பிடு 
அலை  _ கடலலை , நீரலை ,அலைதல்
அளை  _  நண்டு , புற்று  , தயிர்

 உலவு  _ நட 
 உளவு  _  ஒற்று
 உழவு  _ கலப்பையால் நிலத்தை உழுதல்
 
உழி _ இடம் , பொழுது  ,
உளி  _  தச்சுக் கருவிகளுள் ஒன்று
 
உழு _ நிலத்தை உழு 
உளு  _ உளுத்துப் போதல்
                         
உலை  _ கொல்லன் உலை  , நீருலை 
உழை  _  பாடுபடு ,கலைமான்
உளை _  சேறு  , தலை. , பிடரி மயிர்

உழுவை  _  புலி ,
உளுவை  _  மீன் வகை 

 ஒலி  _ சப்தம் , நாதம், காற்று 
 ஒழி _ அழி ,   கொல் , துற 
 ஒளி  _  வெளிச்சம் , மறைத்து வை 
 
ஒல் _ ஒலிக் குறிப்பு 
ஒள்  _ அழகு , உண்மை , அறிவு , ஒளி
  
கலகம்  _ போர்  , அமளி , இரைச்சல்
கழகம் _ சங்கம்  , கூட்டமைப்பு 

கழங்கம்  _ கழங்கு , விளையாட்டுக் கருவி 
களங்கம் _ குற்றம் ,அழுக்கு 

கலி  _  கலியுகம் , ஒரு பா வகை , சனி 
கழி  _  கோல் , மிகுதி , உப்பளம் 
களி _ மகிழ்வு , இன்பம்
 
கலை  _  ஆண்மான் , சந்திரன் , கல்வி 
கழை  _ மூங்கில் , கரும்பு ,
களை  _ அழகு , புல்பூண்டு , அயர்வு 
 
கல்  _ மலை , பாறை  , சிறுகல்
கள் _ மது , தேன்

கலம்  _ கப்பல் , பாத்திரம் , 
களம் _ இடம் , போர்க்களம் , இருள்
  
காலி  _ ஒன்றுமில்லாதது , வெற்றிடம் 
காளி _ துர்க்கை  , மாயை
காழி  _ சீர்காழி

காலை  _ அதிகாலை , காலைப் பொழுது , நேரம்
 காளை  _ காளைமாடு , இளைஞன்
  
கிலி  _ அச்சம் ,  பயம் 
கிழி  _ கிழித்துவிடு  , பொன் முடிப்பு 
கிளி  _  ஒரு பறவை வகை 
 
 கிழவி  _  முதியவள்  ,  மூதாட்டி 
 கிளவி   _ சொல்  , மொழி 
  
 குலி _  மனைவி
 குழி  _  பள்ளம்  , பாத்தி  , வயிறு
  
 குழவி _  குழந்தை , இளமை , யானைக்கன்று ,          
 குளவி  _  ஒரு வண்டு 
 
 கூலம்  _  தானியம் , கடைத்தெரு 
 கூளம்  _ குப்பை 
  
 கோலம்  _  அழகு  ,  அலங்காரம்
 கோளம்  _  உருண்டை  ,  வட்டம்
 
 சூலை  _  வயிற்று நோய்
 சூளை  _  செங்கல் சூளை 
 
 சூள்  _ சபதம்,சூளுரை
 சூல்  _  கர்ப்பம்
 சூழ்  _   சுற்றிக் கொள்
               
சோழி  _ பலகரை 
சோளி _ கூடை வகை

தவளை _  ஓர் உயிரி 
தவலை _ பாத்திரம்
 
தலம் _ இடம் ,   பூமி 
தழம்  _  தைலம்  
தளம்  , _ மேடை  , வீட்டின் மேல் அடுக்கு 

 பீழை  _  துன்பம்  
 பீளை  _ கண்  அழுக்கு
                          
  வலி   _  வலிமை
  வளி  _  காற்று
  வழி  _  பாதை
  
 விழி  _  கண் கருவிழி
 விளி  _  கூப்பிடு , அழை

வல்லி   _  பெண்
வள்ளி  _ ஆபரணம்

வாழ்  _ வாழ்வாயாக
வாள் _  நீண்ட கத்தி , போர்வாள்
வால் _ விலங்குகளின் வால்

விலை _ மதிப்பு
விழை  _  விரும்பு
விளை  _ விளைவி ,ஒரு வகை மீன்

விலக்கு  _  விலக்கிவிடு
விளக்கு _ விளக்கமாக சொல் , தீபம்

வேலை  _  பணி
வேளை  _  பொழுது ,நேரம்

மெல்ல  _  மென்று தின்பது
மெள்ள  _ மெதுவாக

தாழ் _  தாழ்தல்
தாள் _  பாதம், காகிதம்

இழை  _தேய்த்து  ,நூலிழை
இளை  _  மெலிந்து,
இலை _ செடிகளின் இலை

கல்வி  _  படிப்பு
கள்வி  _  திருடி

குழம்பு   _ சோற்றோடு சேர்த்து உண்ணும் உணவு
குளம்பு  _  மாட்டு கால் நுனி

உலுக்கு.  _ குலுக்கு
உளுக்கு _ சுளுக்கு
உழக்கு _ ஒரு அளவை

செதில்  _  மரச்செதில்
செதிள் _ மீன் செதிள்

தாலி  _ மங்கல நாண்
தாளி _ சமையலுக்குத் தாளித்தல்
தாழி  _ பெரிய பானை

கலி  _  வறுமை
களி  _ மகிழ்ச்சி
கழி _  நீக்கு
_________________________________________________________________
                 சிறப்பு ழகரம்

தமிழின் சிறப்பு  எழுத்தான
ழகரம் உச்சரிக்கத் தெரியாமல்
உச்சரிப்பவரின் பேச்சைக்கேட்டு
சிரிக்காமல் இருக்க முடியுமா என்ன..

வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு
இந்த ழகரத்திற்கு உண்டு.

தமிழ், மலையாளம்,மாண்டரீயன்
சீனம் உட்பட சில மொழிகளில்
மட்டுமே இந்த ழகரம் உள்ளதாம்.

தமிழில் உள்ள முக்கிய வாழ்வியல்
சொற்கள் எல்லாம் ழகரத்தைத்
தன்னகத்தே கொண்டுள்ளன என்பதை
படித்தபோது உண்மையிலேயே தமிழர்
மொழி ஆளுமையை எண்ணி
வியக்காமல் இருக்கமுடியவில்லை.

வாழ்க்கை
ஒழுக்கம்
அழகு
தொழில் 
விழாக்கள்
உழைப்பு

என்று  வாழ்வியல் சார்ந்த சொற்கள்
எல்லாம் சிறப்பு ழகரம் கொண்டு
பேசப்பட்டதும் எழுதப்பட்டதும்
தமிழரின் மொழி ஆளுமைக்கும் மொழி
பற்றிய சிந்தனைக்கும் நல்ல 
எடுத்துக்காட்டுகளாகும்.

 ழகரத்தை வள்ளுவர் கையாண்ட விதமே
 இனிமையானது.
 
"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். "

கேட்டுப்பாருங்கள் .மழலையின் குரலோடு
தமிழின் இனிமையும் புரியும்.

ஒருமுறை ஒரு பெரியவரைப் பார்க்க
ஒரு மனிதர் கையில் வாழைக்குலையோடு 
வந்தார்.

"என்ன ....வாழைக் குலையோடு 
வந்தாப்ல இருக்கு "என்று விசாரித்தார்
பெரியவர்.

"வாயக்குலை தன்பயம் பயுத்துருந்துது
அதுதான் கொண்டு வந்தேன் "என்றார்
அந்த மனிதர்.

"கூடவே கையில என்னவோ எடுத்து
வந்துருக்கிறீகளே "என்றார் பெரியவர்.

"கியங்கு...பனங்கியங்கு "என்றார் 
அந்த மனிதர்.
உனக்கு பனங்காடு இருக்குதா?"
கேட்டார் பெரியவர்

"கியக்கு விலையில நாலு மரம் நிக்கு"
என்றார் அந்த மனிதர்.

பெரியவருக்கு அந்த மனிதர் என்ன
சொல்கிறார் என்பது நன்றாக புரிந்து
போயிற்று.

'வாழைப்பழம் 'என்பதை 'வாயப்பயம்'
என்றும்,
'பழுத்திருந்தது 'என்பதைப் 'பயுத்துருந்தது '
என்றும்,
'கிழங்கு ' என்பதை 'கியங்கு 'என்றும்,
'கிழக்கு  விளையில் '  என்பதை 
' கியக்கு  விலையில 'என்றும்
சொல்லியிருப்பது உங்களுக்கும்
புரிந்து போயிருக்கும்.

பாவம்...அவர் ஒரு அப்பாவி.
பிறந்ததிலிருந்தே அப்படியே சொல்லிப்
பழகிவிட்டார்.

ஆனால் படித்தவர்களும் 
தொலைக்காட்சியில் பேசும் சிலரும்
சரியான உச்சரிப்பு இல்லாமல் பேசுவது
ஏன் என்பது புரியவில்லை.

மழையை மலை என்றும்
பழைய என்பதைப் பலய என்றும்
மொழியை மொலி என்றும் 
உச்சரிக்கும்போதும்
சொல்லும் போதும்
உண்மையிலேயே நம்மை சற்று
சங்கடப்படுத்ததான் செய்கிறது.

எதற்கும் கொஞ்சம் மெனக்கெட்டால்
வராமல் போகாது.

இல்லை...இதுவே போதும்...நன்றாகதான்
இருக்கிறது என்று திருப்திபட்டுக்
கொண்டார்களா என்று தெரியவில்லை.

தமிழின் சிறப்பே அதன் உச்சரிப்பில்தான் 
இருக்கிறது என்பதைத் தமிழ் பேசும் 
ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

"தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு  குணம்உண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்"
                              _  நாமக்கல் கவிஞர்

Comments

Post a Comment

Popular Posts