பழக்கவழக்கம்

              பழக்கவழக்கம்

"சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம் "


தொடர்ந்து ஒரு செயலை செய்துகொண்டு
வரும்போது  நாம் செய்கிற செயலில்
நல்ல புலமை ஏற்படுகிறது.
நல்ல தமிழை உச்சரிக்கத் 
தெரியாதவர்கள்கூட தொடர் 
பயிற்சியினால் நன்கு பேச முடியும்.

பழக்கம் வழக்கமாக நடைபெற்றுக் கொண்டே
 இருக்கும்போது அது பழக்கவழக்கமாக
 மாறி விடுகிறது.
 
" காலையில் எழும்பு ."
 அம்மா அடிக்கடி சொல்லி அலுத்துப் 
 போய்விட்டார்.
 
"வெளியில் போய்வந்தால் கை, கால்களைக்
 கழுவு  ....சொல்லி சொல்லி வெறுத்தே 
 போய்விட்டேன் "பெரும்பாலான வீடுகளில்
 அம்மாவின் அங்கலாய்ப்பு இப்படி இருக்கும்.
 
"எடுத்த பொருளை எடுத்த இடத்தில் 
வைக்க வேண்டும். கண்ட கண்ட 
இடத்தில் வைக்காதே.
குப்பையைக் குப்பைக் கூடையில் போடு.
தலை சீவினால் சீப்பில் இருக்கும் 
முடியை எடுத்துவிட்டு சீப்பைச் சுத்தமாக 
வைக்க வை.
பள்ளியில் இருந்து வந்ததும் 
புதைமிதியைக்  கழட்டி 
வைக்க வேண்டிய இடத்தில் வை."

இவை எல்லாம்  எப்படியாவது நம்மை
நல்வழிபடுத்திவிட வேண்டும் என்று 
அம்மா வாயிலிருந்து வரும் சொற்கள்.

இவற்றைக் கேட்டுக் கேட்டுச்
 சலிப்படைந்து
விடுவோம்.
அம்மாவுக்கும் நம்மிடம் சொல்லிச் சொல்லி
ஒரு கட்டத்தில் அலுத்துப்
போவார்கள்.

இது என்னங்க பெரியபழக்கம்.
இதுக்கெல்லாம் சலித்துக் கொண்டால்.....
இந்த சின்ன சின்ன நல்ல பழக்கங்களைப்
பழகிக் கொள்வதில்  அப்படி என்ன
தயக்கம்?
எப்படியும் கிடக்கட்டும் என்று
 தாறுமாறாக வீசிவிட்டுச் செல்லுதல்
 தவறு என்று உங்களுக்கே தெரியும்.
  
 இருப்பினும் இந்த அம்மாவுக்கு வேறு 
 வேலை இல்லை என்று முணுமுணுத்துவிட்டு 
 கடந்து போய்க்கொண்டே இருப்போம்.
 
 அப்படி என்ன பிடிவாதம்?

நல்ல பழக்கத்தைப் பழகிக்கொள்வதில் 
ஏன் இந்தச் சுணக்கம்?
இன்று இல்லை என்றால் நாளை 
அவற்றை எல்லாம் பழகுதல் நன்று
என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

அந்தப் பழக்கங்களை இப்போதே 
ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பழக்கம் .....நாளாக  ஆக...வழக்கமாகும்.

வழக்கமாக நாம் செய்யும் எந்த செயலும்
கடினமாகத் தெரிவதில்லை. 
காலையில் எழும்பும் பழக்கத்தை 
வழக்கமாக்கிப் பாருங்கள். 
அது ஒன்றும் கடினமான செயலாகத் 
தெரியாது.
அலாரம் அடிக்காமலே டாண் என்று 
எழும்பி விடுவோம்.

கை கால் கழுவுறது எல்லாம் பெரிய 
வேலையே இல்லை.
ஐந்து நிமிட வேலை.
இது தூய்மையாக இருக்க உதவும்.
எந்த நோய்த்தொற்றும் அண்டாது.

எடுத்த பொருளை எடுத்த இடத்தில் 
வைத்துப் பாருங்கள்.
வெளியில்செல்லும்போது 
அதைக் காணவில்லை..... இதைக் 
காணவில்லை 
என்று ஏற்படும் எரிச்சல், பதற்றம் 
எல்லாம் குறையும்.

ஒழுங்காக உட்கார்ந்து பாருங்கள்.
உடம்பு தெம்பாகத் தெரியும்.

வரிசையில் நின்று செல்லும் பழக்கத்தை 
ஏற்படுத்திப் பாருங்கள்.
அடுத்தவர்மீது வரும் கோபம் குறையும்.
எதிலும் ஒரு நேர்த்தியைக்
கடைபிடிக்கும் எண்ணம் வரும்.

இப்படித்தாங்க நல்ல பழக்கங்களை 
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தப் பழக்கம் எல்லாம் வழக்கம் 
ஆகும்போது நல்ல பழக்கவழக்கங்கள் 
தானாய் வந்து ஒட்டிக் கொள்ளும்.

இதுதான் இன்று வந்துள்ள நோய்த் தொற்று 
நமக்குச் சொல்லித் தந்து
கொண்டிருக்கும் பாடம்.
 
எல்லாவற்றிற்கும் ஒட்டு மொத்த மருந்து 
நல்ல பழக்கவழக்கம்தான்.

 உடல் நலம் பேண்.
குறித்த நேரத்தில் எல்லா 
வேலைகளையும் செய்.
தூய்மை கடைபிடி.

இப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் நன்றாக 
இருந்தால் நோய்கள் அருகில் வரவே அஞ்சும்.

சில பழக்கங்கள் வழக்கமாக நடைபெற்றுக் 
கொண்டே இருக்கும்போது அது 
மரபாக மாறிவிடுகிறது.
இப்படித் தோன்றியவைதான் நமது
கலாச்சாரமும் பண்பாடும்.

பழக்கங்கள்தான் கலாச்சாரத்தைத் 
தோற்றுவிக்கின்றன.
நம் முன்னோர்கள் கடைபிடித்த பழக்கங்கள் 
யாவும் நமது கலாச்சார வடிவங்களாக
நம்மால் பின்பற்றப்படுகின்றன.

எல்லா கலாச்சாரங்களும் நன்மையை
நோக்கிய கண்ணோட்டத்தில்
 தொடங்கப்பட்டவையாகவே இருந்திருக்கும்.
இன்றைய பழக்கம் நாளைய கலாச்சாரத்திற்கு
விதையாக அமையலாம்.

நல்ல வழக்க பழக்கங்களைக்
கற்றுக் கொடுப்போம்.
பெரியவர்களை மதிக்கும்
பழக்கத்தைப் சொல்லிக் கொடுப்போம்.
பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை
வீட்டிலேயே கற்பிப்போம்.
சகிப்புத் தன்மையை ஊட்டி
வளர்ப்போம். 
உறவுகளை நேசிக்கும் பண்பை
சொல்லித் தருவோம்.
முதியவர்களுக்கு உதவும் பண்பை
வளர்ப்போம்.
பழக்க வழக்கங்கள் நல்லவையாக
இருக்கட்டும்.
 நாளைய தலைமுறை நல்ல பழக்க
வழக்கம் கொண்டவர்களாக வளரட்டும்.


       
       
    

Comments

Popular Posts