தாழ்வுமனப்பான்மை வேண்டாம்

    தாழ்வுமனப்பான்மை வேண்டாம்


"தாழ்வு இழிவல்ல.
  தாழ்ந்தே கிடப்பதுதான் இழிவு."
      

உங்களால் நன்றாக படிக்க முடியவில்லையா....
நான் அழகாக இல்லையே என்று வருத்தமா....
என்னால் ஜெயிக்கவே முடியவில்லையே
என்று கவலையா .....
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது
என்ற புலம்பலா....
என்னை மட்டும் யாருக்குமே
  பிடிக்கமாட்டேங்குதே என்ற அங்கலாய்ப்பா....
  

அட போங்கங்க... இதெல்லாம்
பெரிய காரியமே இல்ல...
தூக்கி ஒரு ஓரமா போட்டுவிட்டு போய்கிட்டே இருங்க.
     
" அட ....போங்கங்க...நீங்கபாட்டுக்கு
சொல்லிவிட்டு போய்விடுவீங்க..
அவமானப்பட்ட எங்களுக்கு அல்லவா
அதன் வலி தெரியும்" என்ற விசும்பல் கேட்கிறது.

வலியையும் அவமானங்களையும் தாண்டி
வந்ததால்தான் இத்தனை துணிச்சலாக
உங்களிடம் பேச முடிகிறது.

இதெல்லாம் ஒன்றுமே இல்லங்க..
நாங்களெல்லாம் கடந்து வந்த
பாதைகள் எவ்வளவு கரடுமுரடானவை என்பது
எங்களுக்கு மட்டுமே தெரியும்.
கடக்கும்வரை சற்று கடினமாகதான் இருக்கும்.

தாழ்வு மனப்பான்மை என்ற கவசத்தை
அணிந்து கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத்
தொடங்குவோமானால் நாலு அடிகூட
சரியாக  முன்னோக்கி எடுத்து வைக்க முடியாது.
அந்தத் தாழ்வு மனப்பான்மை நம்மை
கீழ்நோக்கி இழுக்கும்.
மேலே எழும்ப விடாது.

நாம் தாழ்வுமனப்பான்மை என்னும்
சங்கிலியால் கட்டப்பட்டு கிடக்கிறோம்.
அதை கழற்றி வீசிவிட்டு நடந்து பாருங்கள்.
கை வீசி உற்சாகமாக முன்னோக்கி நடக்கலாம்.

தாழ்வு மனப்பான்மை நம் வளர்ச்சிக்கு
நாலாபக்கங்களிலிருந்தும் முட்டுக்கட்டையிட்டு
நம்மை தலை தூக்கவிடாது.

நானெல்லாம் இதற்கு லாயக்கே இல்லை
என்று நமக்கு நாமே ஒரு தீர்ப்பு எழுதி
வைத்துக் கொள்ளச் செய்யும்.


அங்கெல்லாம் போனால் பெரிய பெரிய
ஆட்கள் இருப்பார்கள். நானெல்லாம் எம்மாத்திரம்...
என்று சான்றோர் இருக்கும் அவைக்குச்
செல்ல ஒரு தயக்கத்தை உருவாக்கி
வைத்துவிடும்.

கூட்டத்தில் ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று
உற்று உற்றுப் பார்க்க வைக்கும்.

கடைசி வரிசையில் கூச்சத்தோடு
இருக்க வைத்துவிடும்.

தொடர்ந்து நாலு வார்த்தை
பேச விடாமல் தடுக்கும் .
எத்தனை காலத்திற்கு  இந்தச் சிரமத்தை எல்லாம் அனுபவிக்கப் போறீங்க...

வேண்டாம்... வேண்டவே வேண்டாம்.
     
இவை எல்லாமே நம்மிடம் உள்ள தாழ்வு
மனப்பான்மையின் வெளிப்பாடுதாங்க...
எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி
இருப்பது.... தயங்கி தயங்கி நிற்பது...

இதனால் எத்தனை இடங்களில் நமக்குக்
கிடைக்க இருந்த வாய்ப்பை இழந்திருப்போம்.

எப்போதாவது எண்ணிப் பார்த்துண்டா..
நினைத்துப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டுமே !
அது என்னிடம் இல்லையே..
நாலுபேரைப்போல எனக்கு  நன்றாக
பேசவே வராதே......
என்னிடம் போதுமான படிப்பறிவில்லையே....
நன்றாக ஆங்கிலம் பேச வரவில்லையே...
போதுமான பணவசதி இல்லையே....
பிறகு எனக்கு எப்படிங்க தன்னம்பிக்கை
வரும்.
தாழ்வு மனப்பான்மைதான் வரும்
என்பதுதான் உங்கள் உள்ளத்தில்
இப்போது ஓடிக்கொண்டிருக்கும்.

பிறக்கும்போதே தனித்திறனோடு யாராவது
பிறந்து விட்டார்களா என்ன?

அது இல்லை... இது இல்லை ...
என்ற புலம்பல் இனியும் வேண்டாம்.
உங்களிடம் படிக்கும் திறன் இருக்கிறது.
படித்துக் கொள்ளலாம்.
உங்களிடம் உழைக்கும் திறன் இருக்கிறது.
வெற்றியாளனாகலாம்.

இருப்பவற்றில் மகிழ்ச்சி அடையும்
பண்பை வளர்த்துக் கொண்டாலே
தாழ்வு மனப்பான்மை காணாமல் போய்விடும்.
தாழ்வு மனப்பான்மை இருந்தால்
அதனை இன்றே தூக்கி வீசுங்கள்.

என்னால் முடியாது... நான் ரொம்பவும்
சின்னப் பெண்ணாக இருக்கிறேனே...
எனக்கு எதிராக விளையாட வரும்
வீராங்கனைகள் பலசாலிகளாக
என்னைவிட உருவத்தில் பெரியவர்களாக
இருப்பார்களே என்று ஒரு தாழ்வு மனப்பான்மையை
வளர்த்து வைத்திருந்தால் ஒரு
மேரிகோம் கிடைத்திருப்பாரா...

மாரியப்பனைத்தான் இந்த உலகம் அறிந்திருக்குமா!தாழ்வுமனப்பான்மையை வீசிவிட்டு
பயணத்தைத் தொடங்கியதால்தான்
அவர்களால் வெற்றியை நோக்கி
முன்னேற முடிந்தது. 
சாதனையாளர்கள் என்ற பட்டியலில்
இடம்பிடிக்க முடிந்தது.

நம்மிடம் இருக்கும் குறைகள்
ஒருபோதும் குறைகளே அல்ல.
தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிப்
போட்டுவிட்டு தன்னம்பிக்கை என்னும்
கேடயத்தை அணிந்து பாருங்கள்.

முடியாதது எதுவுமில்லை.முயன்று பார்க்கலாம்
என்ற ஆர்வம் மேலோங்கும்.
நரி புலியைவிட வலிமையில் குறைவான
விலங்குதான். அந்த நரியே என் தந்திரத்தால்
புலியை வீழ்த்த முடியும் என்று 
முடிவு எடுக்கக் காரணம் தன்னிடம் இருந்த
  தன்னம்பிக்கை மட்டுமல்ல.
  நான் புலியைவிட தாழ்ந்தவன் இல்லை என்ற
  சிந்தனை நரிக்குள் வேரூன்றி இருந்ததால்தான்
  நரியால் புலியை வெல்ல முடிகிறது.
  
கட்டை விரலுக்கு எப்போதும் ஒரு கர்வம்.

"நான் இல்லாமல் மற்ற விரல்களால்
எந்த வேலையுமே  செய்ய முடியாது .
வெற்றி என்றால் முதன் முதலாக
என்னைத்தான் தூக்கிக் காட்டுவார்கள்
அதனால் நான்தான் நம்பர் ஒன் என்று
சொல்லிவிட்டு கெக்கெக்கே ....பெக்கக்கே"
என்று சிரித்தது.

பக்கத்திலிருந்த ஆள்காட்டி விரலுக்குச்
சும்மா இருக்கமுடியவில்லை.
"யாரையும் சுட்டிக்காட்ட நான்தான்
முன்னே வருவேன்.அதுமட்டுமல்ல என்
துணையில்லாமல் ஒரு பொருளைக்கூட
உங்களால் சரியாக தூக்க முடியாது .
அதனால் நான் தான்
பெரியவன் "   என்று தம்பட்டம் அடித்துக்
கொண்டது.

"நான் தான் நடுவிரல். நான் இல்லை
என்றால் உங்கள் மொட்டை கையைப்
பார்க்க சகிக்காது. அழகு நான்தான் .
அதனால்தான் கடவுள்  என்னை நேர்த்தியாக,
நீட்டமாக நடுவில் வைத்திருக்கிறார் .
நான் மட்டும் இல்லாமல் உங்களால்
வேலை செய்துவிட முடியுமா !
ஆளிலும் உயர்ந்தவன்.உங்கள் அனைவரிலும்
உயர்ந்தவன். "என்றபடி அனைவரையும்
நக்கலடித்தது நடுவிரல்.

" அட...போங்கப்பா....ரொம்ப பெருமைப்படாதீர்கள்.
பெருமை பட வேண்டியவன் நான் மட்டும்தான்.
என்னைப் பெருமைப்படுத்ததான் பொன்னை
வைத்து அழகு பார்க்கிறார்கள்.
இதிலிருந்தே தெரியல... யார் பெரியவன் என்பது ...
எனக்கு மட்டும்தான் மோதிரம் போட்டு
அழகு பார்க்கின்றனர்.புரிகிறதா..."என்றபடி
மோதிரவிரலில் போட்டிருந்த மோதிரத்தை 

முன்னே... முன்னே ...வந்து நீட்டி ...நீட்டி

மினுக்கு காட்டியது மோதிரவிரல்.

சுண்டு விரலுக்கு ஒரே வருத்தம்.
"தன்னிடம் அவர்களைப்போன்று
பெருமையாக சொல்லிக் கொள்வதற்கு
எதுவுமே இல்லையே "எனத் தனக்குள்ளே
வருந்தியது.

கடைசியில் கடவுளிடம் போய்
கண்ணீர் விட்டது.

".என்னை மட்டும் ஒன்றுக்கும் உதவாமல் 

படைத்து விட்டீர்களே" என்று
அழுது புலம்பியது.

கடவுளுக்கு சுண்டுவிரலின் அழுகையைக்
கண்டதும் தேற்றாமல் இருக்க முடியவில்லை.

"எதற்கு இந்த தாழ்வு மனப்பான்மை.
கும்பிடும்போது நீ எங்கே இருக்கிறாய் ?"
என்று கேட்டார் கடவுள்.

"முன்னால்.." என்றது சுண்டுவிரல்.

   "யாருக்கு முன்னால்.." கேட்டார் கடவுள்.
  
" உங்களுக்கு முன்னால்." என்றது சுண்டுவிரல்.

"அப்போ எனக்கு முன்னால் முதல் ஆளா
நிற்பது நீதான் இல்லையா ?" என்றார் கடவுள்.

  "ஆமாம்.." என்றது சுண்டுவிரல்.
 
"அப்படியானால் நீதானே பெரியவன்.
பெருமைக்கு உரியவன்"
என்றார் கடவுள்.

" ஆமால்ல...இத நான் ஒரு போதும்
நினைத்துப் பார்க்கவே இல்லையே...
நான் தான் கடவுளுக்கு அருகில் இருக்கும்
பெருமைக்கு உரியவன்" என்று
கூறியபடி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது
சுண்டுவிரல்.

உண்மையைப் புரிந்து கொண்ட
சுண்டு் விரல் தாழ்வு மனப்பான்மையைத்
தூக்கிப் போட்டுவிட்டு கம்பீரமாக
நிற்க ஆரம்பித்துவிட்டது.

பார்த்தீங்களா...சுண்டுவிரலே தாழ்வு
மனப்பான்மையைவிட்டு
வெளியில் வந்துவிட்டதுங்க...
நாம் மட்டும் அந்த தாழ்வு மனப்பான்மையை
கட்டிக்கொண்டு ஏன் அழ வேண்டும்?

அந்த வார்த்தையையே உங்கள் அகராதியில்
இருந்து தூக்கி வீசுங்கள்.
இனி அந்த பக்கமே திரும்பி பார்க்கக்
கூடாது என்று முடிவு எடுத்துவிட்டீர்களல்லவா!

இதுவரை உங்கள் வளர்ச்சிக்கு
முட்டுக்கட்டையாக இருந்த ஒரு எதிரி
இன்றோடு தொலைந்தான்.

தாழ்வு மனப்பான்மையோடு
கொள்ளுங்கள் பிணக்கு.
தொடங்கட்டும் உங்கள் வெற்றிக் கணக்கு.
   
   
         
          

 

Comments

  1. நம்பிக்கையூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts