கட்டைவிரல் குருதட்சணையான கதை

கட்டைவிரல் குருதட்சணையான கதை


"அண்ணா... குருதட்சணை...குருதட்சணை
என்று கூறுகிறார்களே அது என்ன ?"

"படிப்பதற்கு ஆசிரியருக்கு கொடுக்கும்
பொருள் அல்லது பணம் குருதட்சணை.
ஏன் திடீரென்று இந்தக் கேள்வி?"

"பணமும் பொருளும்தான்
குருதட்சணை என்கிறாய்...ஆனால்
கட்டைவிரலையே குருதட்சணையாக கொடுத்தான்
ஏகலைவன் என்று தொலைக்காட்சியில்
பேசினார்களே....அது என்ன ?"

"ஓ...அதுவா அது பெரிய கதை..
அந்தக் கதை எல்லாம் உனக்கு எதற்கு?"

"ஏன்  ...நான் தெரிஞ்சுக்கக் கூடாதா ?"

"ஏன் கூடாது...எல்லோரும் தெரிந்து
வைத்திருப்பதில் தப்பில்லை."

"அப்படியானால் எனக்கும் அந்தக்
கட்டைவிரல் கதையைச் சொல்லுங்களேன்."

"ரொம்ப பிடிவாதம் பிடிக்காதே...
உன்னை மாதிரியே
காட்டில் ஒரு வேட்டுவ சிறுவன் இருந்தான்."

"தனியாகவா...? "

"சொல்லவிடேன்...தனியாக எப்படி இருப்பான்?
தன் பெற்றோர்களுடன்தான் காட்டில்
வசித்து வந்தான்.போதுமா ?"

"எனக்காக பொய்  கதை ஏதும்
சொல்லலியே!"

"இது புராணக்கதைப்பா....
நான் ஏன் பொய் சொல்லப் போறேன்.
கொஞ்சம் அமைதியாகக் கேள்..அல்லது நான்
கட்டைவிரல் கதையைச் சொல்ல மாட்டேன்."

"கோபப்படாதே....சொல்...சொல்.."

"அந்த சிறுவன் பெயர் ஏகலைவன்.
ஒருநாள் அவன் காட்டில்
விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது
மருளும் கண்களோடு மான் ஒன்று
பயந்தபடி ஓடி வருவதைப்
பார்த்தான்."

"மானா...எனக்கு ரொம்ப பிடிக்கும்
அப்புறம் சொல்லு ....சொல்லு.."

"பின்னாலேயே வேட்டைநாய்
ஒன்று மானைத்
துரத்திக் கொண்டு வந்தது.
அதைப் பார்த்த சிறுவனுக்கு
எப்படியாவது அந்த மானைக்
இந்த வேட்டை நாயிடமிருந்து
காப்பாற்றிவிட வேண்டும் என்று ஆசை.

"ஆனால் எப்படி முடியும்?
அவனுக்குத்தான் வில்வித்தை தெரியாதே!"

"அதையேதான் சிறுவனும் நினைத்தான்.
அன்றிலிருந்து மனம் முழுவதும்
வில்வித்தைக் கற்றுவிட வேண்டும்
என்று ஆசை."

"காட்டில்தான் பள்ளிக்கூடம் இருக்காதே.
அவன் எப்படி கற்பான் ?"

" நான் ஒரு காட்டு வேடனின் மகன்.
எங்கே போய் கற்றுக் கொள்ள முடியும் ?
இதையேத்தான் அவனும் தனக்குள்ளேயே
சொல்லி  சமாதானம்
அடைந்து கொண்டான்."

"அப்புறம்....அந்தக் கட்டைவிரல்....கட்டைவிரல்.."

"வருகிறேன்....பறக்காதே...
அவன் மனதில் இருந்த
வில் வித்தைப் படிக்க வேண்டும்
என்ற ஆசை மட்டும்
அனலாக இருந்து கொண்டே இருந்தது.
ஒருநாள் தற்செயலாக துராணாச்சாரியர்
பஞ்ச பாண்டவர்களுக்கு வில்வித்தை
கற்றுக் கொடுப்பதைப் பார்த்தான்."

"துரோணாச்சாரியாரா?
அவர் கௌரவர்களுக்கும் வில்வித்தை
சொல்லிக் கொடுப்பவராயிற்றே!"

"ஆமாம்....அஸ்தினாபுரத்து
அரச குடும்பத்து அத்தனை குழந்தைகளுக்கும்
அவர்தான் கலைகளைக் கற்றுத் தருவார்."

"ம்...அப்புறம்...கதை சுவாரசியமாக போகிறதே."

"இப்போது வில் வித்தை கற்றே ஆக வேண்டும்
என்ற வேட்கை மிகுந்துவிட
நேரே அப்பாவிடம்போய் தான் பார்த்த
ஆசிரியர் பற்றிக் கூறுகிறான் ஏகலைவன்."

"ஏன் அப்பாவிடம் போக வேண்டும்..
நேரே ஆசிரியரிடம் போக வேண்டியதுதானே!"

"அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கு
வித்தை சொல்லிக் கொடுக்கும்
ஆசிரியரை எளிதில் நெருங்க முடியுமா என்ன..."

"சொல்லுங்க...சொல்லுங்க..
அப்பா என்ன சொன்னாங்க..."

"அப்பா என்ன சொல்லுவாரு...
அரசவீட்டுப் பிள்ளைகளுக்கு கற்பிக்கும்
ஆசிரியர் நம்மைப் போன்ற சாதாரண
வேட்டுவ குல பிள்ளைகளுக்குக் கற்றுத்தர
சம்மதிக்க மாட்டார் என்று சொன்னார் ."

"அவ்வளவு தானா அப்போ....
ஏகலைவன் படிக்கலியா...."

"ஏகலைவன் கேட்பதாக இல்லை .
அழுது அடம்பிடித்தான்.
இறுதியாக வேறு வழியில்லாது மகனையும்
அழைத்துக் கொண்டு துரோணாச்சாரியரிடம்
சென்றார் ஏகலைவனின் அப்பா..."

"அப்பாடா...ஒருவழியா ஏகலைவனுக்கு
அட்மிஷன் கிடைச்சுது என்று சொல்லு."

"அதுதான் இல்லை...
எப்படியாவது தன் மகனுக்கு
வில்வித்தை கற்றுத் தர வேண்டும்
என்று கெஞ்சிப்பார்த்தார் வேடன்.
நான் இளவரசர்களுக்கு வித்தைக்
கற்றுத்தரும் ஆசிரியர்.
என்ன தைரியத்தில் உன் மகனும்
இளவரசர்கள்போல வில்வித்தை கற்றுக்
கொள்ள வேண்டும் என்று கூட்டி
வந்துள்ளாய்? என்றுகூறி
பிடிவாதமாக மறுத்துவிடுகிறார்
துரோணர்."

"இருந்தாலும் இந்த துரோணர்
ரொம்ப மோசம்.ஏழைகள் என்றால்
படிக்கக் கூடாதா என்ன !"

"ஏழைகள் பெரிய ஆசைப்படலாமா?
ஆசை நிராசையாகிவிட்ட நிலையில்
இருவரும் வீடு திரும்புகின்றனர்."

"ஐயோ! ஏகலைவன் ரொம்ப பாவமில்ல...
படிக்க முடியாம போயிடுச்சி.
ஏகலைவனை நினைத்தால் எனக்கு
பாவமாக இருக்கு."

"ஆனால் ஏகலைவன் அப்பா ,...துரோணர்
மறுத்துவிட்டாரே என்று சும்மா இருக்கவில்லை.
தானே ஆசிரியராக இருந்து எல்லா
வித்தைகளையும் கற்பித்தார்."

"அப்பாடா...இப்போதான் நிம்மதியாக
இருக்கிறது.இருந்தாலும் அந்தக்
கட்டைவிரல் பற்றி
நீ சொல்லவே இல்லையே!"

ஒருநாள் பயிற்சியில் இருக்கும்போது

ஒரு காட்டுப்பன்றி் சத்தம் போட்டபடி
ஓடி வந்தது.
காட்டுப்பன்றியின் சத்தம் பயிற்சியில்
தன்னை ஒருமுகப்படுத்தவிடாதபடி
ஒரு கவனச்சிதறலை ஏற்படுத்தியது.
உடனே நான்கு வில்களை ஒன்றாக
குறுக்கும் நெடுக்குமாக செல்லும்படியாக
மாட்டி அந்தக் காட்டுப்பன்றியை
அதற்குமேல் மூச்சுவிடவிடாதபடி
அம்பை எய்தான்.
நான்கு அம்புகளும் குறுக்கும்
நெடுக்குமாக நின்று ஒரு அரணாக நின்று
காட்டுப்பன்றியைக் குரல் எழுப்ப
விடாதபடி தடுத்தன.
தற்செயலாக இதைப் பார்த்துவிட்ட
பீமன் ஆச்சரியத்தில் அப்படியே
உறைந்து போய்விட்டான்.
காட்டுப் பன்றியைக் கொல்லாமல்
தடுத்து நிறுத்தும் வித்தையை
அறிந்து வைத்திருப்பவன் யார்?
நகுலனும் பீமனும் அருகில் சென்று
இத்தனை அருமையாக வில் வித்தை
யாரிடம் கற்றாய் ?என விசாரித்தனர் ."

"அவர்களுக்கு இப்படி எல்லாம்
சொல்லித் தரவில்லையா ?"

"அப்படித்தான் நினைக்கிறேன்.
ஓடிச்சென்று துரோணாச்சாரியாரிடம்
கூறுகின்றனர்.தன்னைவிட திறமைசாலி
ஒருவன் இந்த காட்டில் இருக்கிறானா....
அர்சுனன் முகம் வாடிப் போகிறது."

"பின்னர் இருக்காதா என்ன?
வில்லுக்கு விஜயன் என்று
பட்டம் வாங்கி வைத்தவனாயிற்றே..."

"துரோணர் ஏகலைவனை அழைத்துவரும்படி
கட்டளை பிறப்பிக்கிறார்.
வீரர்கள் ஏகலைவனையையும்
அவனுடைய தந்தையையும்
கொண்டுவந்து துரோணர்முன்
நிறுத்துகின்றனர்.
துரோணரைக் கண்டதும் இருவரும் காலில்
விழுந்து வணங்குகின்றனர்..
உன் மகனுக்கு இந்த வித்தையைக்
கற்றுத் தந்தது யார் என்று கேட்கிறார் துரோணர்.
தங்களைக் குருவாக வைத்துதான்
இவனுக்கு இந்தக் கலையைக் கற்பித்தேன்
என்று  பெருமையாகக் கூறினான்
வேடன்."

"எப்படி...அவர்தான் ஏகலைவனுக்குச்
பாடம் சொல்லித்தரவில்லையே..."

"மரத்தின் பின்னால் மறைந்துநின்று
கற்ற வித்தை இருந்ததல்லவா!
மேலும் துரோணரை மானசீக குருவாக
வைத்துத்தான் ஏகலைவன் தன்
அப்பாவிடம் வில்வித்தை கற்றான்.
இந்த உண்மையைத்தான் துரோணரிடம்
கூறினார் வேடன்."

"துரோணருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்குமே.."

"இருக்காதா என்ன...மகிழ்ந்து
போகிறார் துரோணர்."

"ஏகலைவனுக்கு அபார அறிவு இல்ல...
துரோணரை நினைத்துக்கொண்டே
இவ்வளவு வித்தையைக் கற்றிருக்கிறானே!.
அப்புறம் அந்தக் கட்டைவிரல்...."

"நான் குரு என்றால் குருதட்சணையாக
என்ன கொடுத்தாய் என்று
கேட்டார் துரோணர்.
என்ன வேண்டுமோ கேளுங்கள்
தருகின்றேன் என்றார் ஏகலைவனின் அப்பா."

"எதற்கு தட்சணை கொடுக்கணும்.?
படித்துக் கொடுக்காமலேயே பீஸ்
கேட்பதுபோல் இருக்கிறதே"

"ஆசிரியருக்கு வரக்கூடாத ஒரு
விபரீத ஆசை துரோணர்
மனதில் வந்துவிட உன் மகனின்
கட்டைவிரலைத்
தட்சணையாக தந்துவிடு
என்கிறார் துரோணர்."

"எவ்வளவு கொடுமை....படித்தும்
கொடுக்கவில்லை....அப்புறம் தட்சணையாம்
தட்சணை"

"இப்படித்தான் ஏகலைவனும் குமுறினான்.
தன் கட்டைவிரலைத் தர முடியாது என்று
மறுத்தான்.உன் அப்பா
வாக்குக் கொடுத்துவிட்டதால்
கொடுத்தே ஆக வேண்டும்
என்று பிடிவாதமாக இருந்தனர் வீரர்கள் "

"இதற்கு ஏகலைவன் அப்பா சம்மதித்தாரா ?"

"சம்மதித்துதானே ஆக வேண்டும்.
வாக்குக் கொடுத்துவிட்டாரே
வேறு வழி..."

"முடிவாக என்னதான் நடந்தது..."

"வீரர்கள் ஏகலைவனின் கட்டைவிரலை
வெட்டிவிட்டனர்....
துரோணாச்சாரியார் நிம்மதி
பெருமூச்சுவிட்டார்.
அர்ச்சுனனுக்கும் மகிழ்ச்சி.
அன்றுமுதல் குருதட்சணையாக
ஏகலைவன் கட்டவிரலைக் கொடுத்தான்
என்ற ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது."

"ஐயையோ.....எனக்கு பயமாக இருக்குது..
ஏகலைவன் பாவமில்ல....
கட்டை விரலும்  இல்லாமல்
வில்வித்தையும் படிக்க முடியாமல்...
என்ன பாடுபட்டிருப்பான்."

"அதுதான் இல்லை .
கட்டைவிரலை  இழந்த பின்னரும்
நான்கு விரல்களை வைத்து் பயிற்சி
பெற்று நல்ல வில்வீரனாக
மாறினானாம் ஏகலைவன்."

"சரி போதும்...திரும்ப திரும்ப
கட்டைவிரலை நினைவுபடுத்தாதே...
ஏழைகள் படிக்கணும் என்றால்
எத்தனை தடைகள்....எத்தனை இடையூறுகள்!
எனக்கு படிக்கணும்....வருகிறேன்!"

Comments

  1. கதை மூலம் கற்க ஆர்வம் இருந்தால் எந்த இடையூர்களையும் வெல்லலாம் என்பதை மிக அருமையாக பதிவிட்டது மிகச்சிறப்பு.

    ReplyDelete
  2. ஆகா எவ்வளவு ஆர்வம். மனதில் உறுதி. சூப்பர் கதை👌👌

    ReplyDelete

Post a Comment

Popular Posts