எழுதுங்கால் கோல்காணாக்....


 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்....

"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து"
                             குறள் எண்  : 1285

எழுதுங்கால்  _ கண்ணிற்கு மை எழுதுங்கால்
கோல் _ மை தீட்டும் கோல்
காணா _ ,காணப்படாது
கண்ணேபோல் _ கண்களைப் போன்று
கொண்கன் _ கணவன்
பழி _ குற்றம் , தவறு
காணேன் _ காண மாட்டேன்
கண்டவிடத்து _ பார்த்தபோது , காணும்போது

கண்களுக்கு மை தீட்டும்போது மை தீட்டப்
பயன்படுத்தும் கோல் கண்களுக்குத் தெரிவதில்லை.
 அதுபோல கணவனைக் கண்டதும் அவன் செய்த
 குற்றம் கண்களுக்குத் தெரிவதில்லை.
 
விளக்கம் :

பெண்கள் கண்களுக்கு மை தீட்டும்போது அருகில் 
 கொண்டு செல்லும்வரை அந்தக் கோல் 
 கண்களுக்குத் தெரியும். மிக அருகில் 
 கொண்டு சென்றதும் கோலைக் கண்களால் 
 காண முடியாது.

அதுபோன்றுதான் கணவன் செய்யும் குற்றங்கள்
 கணவன் அருகில் இல்லாதபோது பெரிதாகத்
 தெரியும். இன்று வரட்டும்... வரட்டும் ...
இரண்டில் ஒன்று பார்த்துவிட 
வேண்டியதுதான் என கங்கணம் 
 கட்டுவோம். கணவனைக் கண்டதும் 
 இயல்பாக  எல்லாமே மறந்து போய்விடும். 
 மறைந்தும் போய்விடும்.
இது இயல்பாக எல்லா வீடுகளிலும்
நடக்கின்ற நிகழ்வு.

இது கணவனுக்கு மட்டும் பொருந்துவதல்ல. 
காதலர்களுக்கும் பொருந்துவதாக இந்தக்
குறள் அமைந்துள்ளது இதன் சிறப்பு.

தலைவன் ஒருவன் பிரிந்து சென்று விட்டான்.
தலைவி தன் தோழியிடம்  அவனைப்பற்றி 
சொல்லி சொல்லி புலம்புகிறாள்.
அவன் இல்லாதபோது அவன்மீது
உள்ளகுறைகள் மட்டுமே அவளுக்குத் 
தெரிந்தது. காதலன் வந்துவிட்டான்.
காதலன் வந்ததும் தலைவி சண்டை
 போடுவாள் என்று எதிர்பார்த்தாள் தோழி. 

 தலைவியோ ஒன்றுமே நடைபெறாததுபோல
எல்லாவற்றையும் மறந்து இயல்பாக
 சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள் .
 
அட...இதுவரை வரட்டும் ...வரட்டும்...
என்று என்னவெல்லாம் பேசினாள்.
 காதலனைக் கண்டதும் எப்படி மாறிப்போனாளே...
என்று நினைத்தாள் தோழி. 

தோழியின் நினைப்பைப் புரிந்துகொண்ட
தலைவி " எழுதுங்கால் காணமாட்டாத கோல்போல 
காதலனைக் காணுங்கால் அவன்
தவறு்களைக் கண்டிலன்  தோழி "என்று
பதில் கூறினாளாம்.

அருமையான காதல் காட்சியைக் கண்முன்
கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் வள்ளுவர்.

நினைத்து நினைத்து  இன்புற வைக்கும் 
அருமையான பாடல் இல்ல...


English couplet : 

"The eyes sees not the rod that paints it , nor can I  see
any fault when I behold my husband nigh "


Explanation 

     Like the eyes which see not the pencil that paints it,
     I cannot see my husband's fault just when I meet him .


Transliteration:

"Ezhudhungaal kolkaanaak kannepol konkan
pazhikaanen kanta Itaththu "

Comments

  1. வள்ளுவர் கூறும் காதல் காட்சி ஓவியக் கண்களே பிரதிபலிக்கின்றன.

    ReplyDelete
  2. சின்னச் சின்ன உணர்வுகளையும் ஓவியமாக்கிய வள்ளுவரின் குறளுக்கு விளக்கம் தந்து வியக்கச் செய்துவிட்டீர்கள். 👏👏👏👏

    ReplyDelete

Post a Comment

Popular Posts