தன்னம்பிக்கை நாயகன் பாரதி

     தன்னம்பிக்கை நாயகன் பாரதி


பாரதி என்ற மூன்றெழுத்து நாமத்தை
 உச்சரிக்கும்போதே நம்முள் ஓர் உணர்ச்சி
 பொங்கும்.
 உத்வேகம் ஓடி வந்து எட்டிப் பார்க்கும்.
 வறுமையைக் கண்டு வாடிப்போனவன்
 அல்ல பாரதி.
 பொறுமையாக காத்திருக்க வேண்டும்
 என்ற மிதவாதிகளின் சொற்கள்
 ஒருபோதும் பாரதியின் காதுகளில் 
 கேட்பதில்லை.
 பாரதி என்றாலே வேகம்...விவேகம்...
 நாட்டுப்பற்று ...மொழிப்பற்று...எவருக்கும்
 அஞ்சா துணிவு...
 அந்த முண்டாசுக்குள்ளும் முறுக்கிவிட்ட 
 மீசைக்குள்ளும் ஒளிந்து கிடந்த துணிச்சலைக் 
 கண்டு உள்ளம் வியக்கும்.
 நம்பிக்கை நாயகன் பாரதி.

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து
நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

துச்சமாக எண்ணி நம்மைத்
தூறுசெய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

இச்சைகொண்ட பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

எவ்வளவு உலகத்தில் உள்ளோர் எல்லாம்
எதிர்த்து நின்றாலும் பரவாயில்லை.
அட..போடா என்று போய்க்கிட்டே 
இருப்பேன் என்று சொல்லும்
துணிச்சல் யாருக்கு வரும்.

 எத்தனைமுறை என்னை அவமானப்
படுத்தினாலும் அதிலிருந்து மீண்டு
வருவோம். அதற்காக அஞ்சி
புறப்பட்ட இடத்திலேயே
நின்றுபோகப் போவதில்லை
என்று சொல்லும் நம்பிக்கை.

எல்லாவற்றையும் இழந்தாயிற்று.
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை 
என்றநிலை.
அப்போதும் ஒருபோதும் யாருக்கும்
அஞ்சி எங்கள் தன்மானத்தை 
விட்டுவிடப் போவதில்லை.
இவை எல்லாம் பாரதியிடம்
கற்றுக் கொள்ள வேண்டிய
பாடங்கள்.
              பாடல்  2
              
கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள்வீசு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

நச்சைவாயி லேகொணர்ந்து
நண்பரூட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

பச்சையூ னியைந்த வேற்
படைகள் வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து 
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே !

அடேங்கப்பா....யாருக்கும்
அஞ்சாதவன் பாரதி என்பதற்கு
இதைவிட வேறு சான்று
வேண்டுமா?

வறுமையின் கையில் சிக்கிக்
கிடந்தபோதும் அஞ்சாமல் 
வீறு கொண்டு எழுந்தவன் பாரதி.

"நல்லதோர் வீணை செய்தே_ அதை
நலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி"

என்று சக்தியையே கேள்வி
கேட்கும் துணிச்சல் பெற்றவர்.

நான்வாழ வேண்டும். எதற்காக..
எனக்காகவா...இல்லை..இல்லை.

வல்லமை தாராயோ _ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி_ நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

எனக் கேட்கிறார் பாரதி.
வாய்ப்புகளைத் தனதாக்கிக் கொண்டவன்
பாரதி.

செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன
நலம்ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை
நாற்பதாயிரம் கோவிலில் சொல்லுவேன்!

என்று எவ்வளவோ இன்னல்களைத் 
தாண்டி வந்தவன்தான் இத்தனை
துணிச்சலையும் தன்னம்பிக்கையையும்
நமக்குள் விதைத்து நிற்கும் பாரதி.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வைண்டும்
கைவசமாவது வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண்திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண்விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண்பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்

என்ற பாரதியின் வரிகளைப் 
படிக்கும்தோறும் நம்முள்ளும்
ஏதோ ஒரு உறுதி பிறப்பதென்னவோ
உண்மை...

பாரதியின் கவிதைகள் வெறும்
வார்த்தை விளையாட்டல்ல...
நம்மைத் தட்டி எழுப்பும் மந்திரச்
சொற்களால் கட்டப்பட்டவை.
அவை உணர்ச்சி பூர்வமானவை மட்டுமல்ல.
உணர்வு பூர்வமானவை.

"தனி ஒருவனுக்கு
உணவில்லையெனில் 
செகத்தினை 
அழித்திடுவோம் "
 என்று உலகத்தின்மீதே கோபம்
கொண்டவன் பாரதி.

"சமுதாயத்துக்குக் கேடுவிளைவிக்கும்
ஈயாக நீ மாறாதே.
வானில் எழுந்து வட்டமிடும்
கூரிய பார்வையும் இலக்கைப் 
பாய்ந்து சென்று எடுக்கும் ஆற்றலுமுள்ள
கருடனாக நீ மாறு.
அப்போது இன்பம் வாழ்வில் 
மலைபோல கொட்டும்.
அப்போதும் துன்பம் ஏற்பட்டு விடலாம்.
துவண்டுவிடாதே.
அதனை வெட்டி வீழ்த்து.
வேகம் விவேகம் இரண்டும் உனக்குத்
தேவை "என்று பொட்டில் அடித்தாற்போல்
உரக்கச் சொல்லித் தந்தவன் பாரதி.

பாரதி என்றாலே தன்னம்பிக்கை.
பாரதியின் பாடல்கள்  எல்லாமே 
ஒரு மந்திரம்.
நம்மை கட்டி இழுக்கும்.
தட்டி எழுப்பும்.
சோர்வு வரும் போதெல்லாம்
துவண்டு போகாதபடி செய்யும்.
நம்மை எப்போதும் உயிர்ப்போடு
இருக்க வைக்கும் .
நம்பிக்கையோடு மேலெழுந்துவர
வேண்டும் என்ற சக்தியைக் கொடுக்கும்.

பாரதியை நம்பிக்கை நாயகன்
 என்று சொல்வதைத் தவிர
வேறு வார்த்தை எதுவுமில்லை.

Comments

  1. பாரதியின் பாடல்களின் மகத்துவத்தை பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts