ஒருமுகப்படுத்து

              ஒருமுகப்படுத்து 
  "ஒன்றே செய் நன்றே செய் ;
 அதுவும் இன்றே செய்."
 
ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே 
செய்ய வேண்டும்.செய்யும் வேலையை
நல்லபடியாகச் செய்ய வேண்டும்.
அதனையும் உடனடியாக இன்றே
செய்ய வேண்டும்.

நாளை நாளை என்பதெல்லாம் வேலைக்கு
ஆகாது. அது அந்த வேலையைச் செய்யாமல்
தட்டிக் கழிப்பதற்காக நாம் சொல்லும்
சாக்குபோக்கு  வார்த்தையாகும்.

எந்த ஒரு வேலையையும் தொடங்குவது
கடினம். தொடங்கிவிட்டால் பாதி வேலை
முடிந்த மாதிரிதான்.

வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை.
காரணத்தைத் தேடுபவன் வெற்றியை 
எட்டுவதே இல்லை என்று சொல்வார்கள்.
  
ஒருபோதும் அகலக்கால் வைக்கக் கூடாது.
பலமரம் பார்த்த தச்சன் 
ஒரு மரத்தையும் அறுக்க மாட்டான்.

ஒன்றே ஒன்று மட்டுமே செய்ய வேண்டும்.
அதிலும் உங்கள் பெயர் சொல்லும்படி
செய்ய வேண்டும்.
முழு ஈடுபாட்டோடு செயலில்
இறங்க வேண்டும்.

சிந்தையை ஒருமுகப்படுத்தி ஒரு 
வேலையில் ஈடுபடும்போதுதான் நம்மால்
வெற்றி காண முடியும்.
கவனச்சிதறல் காரியத்தைக் கெடுத்துவிடும்.

சிலருக்கு ஒரு  குணம் உண்டு .
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை 
பிடிக்க நினைப்பார்கள்.
அவர்கள் மனம் ஒரு இடத்தில்
நிலையாக நிற்காது.
ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போதே
இன்னொரு வேலையைப் பற்றி நினைத்துக் 
கொண்டிருப்பார்கள்.
இவர்களால் எந்த வேலையையும் 
சரிவர செய்ய முடியாது.

மகாபாரதத்தில்  வில்வித்தை முடிந்து 
மாணவர்களுக்குப் பரிட்சை வைக்கும் நேரம்.
துரோணாச்சாரியார் முதலாவது யதிஷ்டரை 
அழைக்கிறார்.
அதோ, அந்த மரத்தில் ஒரு பறவை
வைக்கப்பட்டிருக்கிறது.
பறவையின் கண் மட்டும் வண்ணம் 
தீட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
நீ குறி வைத்து கண்ணைத் தாக்க 
வேண்டும் என்கிறார்.
கையில் அம்பைக் கொடுத்துவிட்டு,
நீ இப்போது மரத்தில் என்ன பார்க்கிறாய் 
என்று கேட்கிறார் துரோணாச்சாரியார்.

மரம் ,மரத்திலுள்ள கிளைகள் 
இலைகள் , கிளையில் அமர்ந்திருக்கும் 
பறவைகள் எல்லாம்  தெரிகின்றன 
என்கிறார் யதிஷ்டர்.

வில்லை வைத்துவிட்டு ஒதுங்கி நில் 
என்றார் துரோணாச்சாரியார்.
காரணம் புரியாமல் ஒதுங்கி
நின்றார் யதிஷ்டர்.

அடுத்து துரியோதனனை அழைத்தார்
துரோணாச்சாரியார்.
துரியோதனனும் யதிஷ்டர் கூறியது 
போலவே கிளைகள் இலைகள் இன்னும் 
பல பறவைகள் தெரி்கின்றன  
என்றான்.
 துரியோதனனிடமும் வில்லைக் கீழே 
வைக்கும்படி கூறினார் துரோணாச்சாரியார்.

அடுத்து பீமன், நகுலன், சகாதேவன் 
யாவரிடமும் கையில் அம்பைக் கொடுத்து
இதே கேள்வி கேட்கப்பட்டது.
எல்லோரும் மரம் ,கிளை ,இலை ,பறவை
எல்லாம் தெரிகின்றன என்றே கூறினர்.

 இறுதியாக அர்ஜுனன் அழைக்கப்பட்டான்.
 அர்ஜுனன்," பறவையின் கண் மட்டுமே
 எனக்குத் தெரிகிறது" என்றான்.
 அம்பை எய்தும்படி கூறினார் 
துரோணாச்சாரியார்.
சரியாக பறவையின் கண்ணைக்குறி 
வைத்து வீழ்த்தினான் அர்ஜுனன்.
அர்ஜுனன் வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்பட்டான்.
வில்லுக்கு விஜயன் என்ற பட்டத்தைத்
தனதாக்கிக் கொண்டான்.

ஒருமுகப்படுத்தினால்தான் 
இலக்கை அடைய முடியும்.
கவனச்சிதறல் இருந்தால் எடுத்த 
காரியத்தில் வெற்றி அடைய முடியாது.

பெண் கழுகு ஆண்கழுகைத்
தேர்ந்தெடுக்கும்முன் ஒரு பரிட்சை
வைக்குமாம்.
ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு
உயரே பறந்து சென்றுவிடும்.
ஒரு குறிப்பிட்ட உயரம் சென்றதும்
குச்சியைக் கீழே போட்டுவிடுமாம்.
ஆண் கழுகு குச்சி கீழே விழாதபடி
கவனமாக அதனை கவ்விக் கொண்டுவர
வேண்டுமாம்.
கொஞ்சம் கவனச்சிதறல் இருந்தால்கூட
குச்சி கீழே இருந்துவிடும்.
கவனம் இல்லாமல் குச்சியைக் கீழே
விட்டுவிடும் கழுகுக்கு மறுபடியும் மறுபடியும்
அதே பரிட்சை வைக்கப்படுமாம்.
அப்போதும் தோற்றுப்போய்விட்டால்
நிராகரித்துவிட்டு தன் போக்கில் 
போய்விடுமாம் பெண்கழுகு.
கவனமாக இரையைப் பற்றுவதுபோல
குச்சியைப் பற்றிக்கொண்டுவரும்
ஆண்கழுகுதான் தன்னை நன்றாக
பார்த்துக் கொள்ளும் என்பது
பெண்கழுகின் கணிப்பு.
பெண்கழுகின் புத்திசாலித்தனம்
எப்படி இருக்கிறது பாருங்கள்!

சிங்கத்திற்கு மான் வேட்டை என்றால் ரொம்ப 
ரொம்ப பிடிக்கும். வேட்டையாடும்போது
குறுக்கே எந்த விலங்கு வந்தாலும்
சிங்கம் தன் கவனத்தைத் திசை
திருப்புவதே இல்லை.
முழு கவனமும் அந்த வேட்டையின்மீதே 
இருக்கும்.சிங்கத்தின் குறி மானின்மீது
 மட்டுமே இருப்பதால் எளிதாக மானைப்
பிடிக்க முடியும்.

நமது முயற்சிகளும் சிங்க வேட்டை 
மாதிரி இருக்க வேண்டும்.
 நம் செல்லும் பாதையில் எத்தனையோ 
இடையூறுகள் வரலாம்.
நம் கவனத்தைத் திசைத்திருப்ப
வைக்கும் வேறு சில 
நிகழ்வுகளும் நடக்கலாம்.

இலக்கை அடையும்வரை  நம்
சிந்தை முழுவதும் அதை
நோக்கியதாகவே இருக்க வேண்டும்.

கவனமாக ஓட்டப்பந்தயத்தில்
பங்கேற்போம்.
வெற்றி என்ற மூன்றெழுத்து
மட்டுமே நம் கண்களுக்குத் தெரியட்டும்.

கவனச்சிதறலோடு கொள்ளுங்கள் பிணக்கு.
கவனமாய்த் தொடங்கட்டும்
வெற்றிக் கணக்கு.
      
      

Comments


  1. வெற்றியின் இரகசியத்தை பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts