கார்காலத்தில் பூக்கும் கொன்றை
கார்காலத்தில் பூக்கும் கொன்றை
கொன்றைமலர் பூத்துக் கிடப்பது
அழகோ அழகு.
மஞ்சள் மலர்களை ஏந்தி கார்காலத்திற்கு
வரவேற்பு கொடுத்து நிற்கும்.
சங்க இலக்கியத்தில் கொன்றை மலர்களைப்
பற்றிய நிறைய தகவல் உண்டு.
குறுந்தொகைப் பாடலில் தலைவி
ஒருத்தி கொன்றை மலர் பற்றி
மாறுபட்ட ஒரு தகவலைத்
தருகின்றாள்.
கொன்றை மலர்கள் பூத்ததென்றால்
காதலர்களுக்கு கார்காலம்
வந்துவிட்டது என்ற நினைப்பு
வந்துவிடும்.
ஓதலாந்தையார் கூறும் தலைவியோ
கார்காலம் வந்ததென்று கொன்றை
பொய் சொல்கிறது என்கிறாள்.
அப்படி என்ன பொய் சொல்லி
விட்டது கொன்றை மரம் !
வெளியூர் சென்ற தலைவன் எப்போது
திரும்புவான் என்று ஏக்கத்தோடு
காத்திருந்திருக்கிறாள் தலைவி.
கார்காலத்தில் வருவேன் என்று
சொல்லிச் சென்ற தலைவன் இதுவரை
வரவில்லை.
தலைவன் வரவில்லை என்றால்
கார்காலம் வரவில்லை என்றுதானே அர்த்தம்.
ஆனால் காட்டில் கார்காலத்தில் பூக்கும்
கொன்றை மலர்கள் பூத்துக்
குலுங்கிக் கிடக்கின்றன.
அப்படியானால் இயற்கையாகவே
கார்காலம் வந்துவிட்டது.
ஆனால் தலைவிக்கு கொன்றை மலர்
கார்காலத்தில் பூக்கும்
என்பதிலேயே இப்போது ஒரு சந்தேகம்
எழுந்துவிட்டது.
நம்பமாட்டேன்....நான் நம்பமாட்டேன்.
கொன்றை மரம் தன் பூக்களைப்
பரப்பி கார்காலம் வந்துவிட்டது
என்று சொல்லி நிற்பதை நான்
ஒருபோதும் நம்ப மாட்டேன்.
அதென்ன...என் தலைவன் பொய்
சொல்ல மாட்டானே...அவன் வரவில்லை
என்றால் இது கார்காலமாக
இருக்கவே இருக்காது.
இந்தக் கொன்றை மரங்கள்தான்
தவறான காலத்தில் பூத்துக் கிடக்கின்றன.
இந்தக் கொன்றை மரங்கள்
கார்காலம் வருவதற்கு முன்னதாகவே
பூத்துவிட்டது தலைவியின் நினைப்பு.
அதையே தன் தோழியிடம் கூறுகிறாள்.
தலைவன்மீது எவ்வளவு அசைக்க
முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறாள்
பாருங்கள்.
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே !
ஓதலாந்தையார், குறுந்தொகை
Comments
Post a Comment