நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்....

          நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்....

"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும் "
                    திருக்குறள்  :  138

நன்றிக்கு _ நன்மையான செயல்கள், உதவி,அறம்
வித்தாகும்  _ விதை, அடிப்படை
நல்லொழுக்கம் _ நன்னடத்தை , நற்பண்பு
தீயொழுக்கம் _ தீய நடத்தை, தீய பண்புகள்
என்றும் _ எப்போதும், எந்நாளும், எக்காலத்திலும்
இடும்பை  _ துன்பம், தீமை, வறுமை
தரும் _ சேர்க்கும் ,தந்துவிடும்

நல்லொழுக்கம் நன்மை விளைவதற்குக் 
காரணமாக அமையும். தீயொழுக்கம்
எந்நாளும் துன்பத்தைக் கொண்டு வந்து
சேர்க்கும்.

விளக்கம் :

"விதைத்தவன் தூங்கினாலும் விதைகள்
தூங்குவதில்லை" என்பார்கள்.
நாம் செய்த வினைக்கான பலனை நாம்
அடைந்தே தீரவேண்டும்.

ஒருவன் நல்ல ஒழுக்கநெறிகளைக்
கடைபிடித்து வாழ்வானானால்
அவனுக்கு நன்மை வந்து சேர்வது உறுதி.
நிலத்திற்குள் புதைக்கப்பட்ட விதைகள்
முளைத்து வளர்ந்து நல்ல பலனைத் 
தருவதுபோல நல்லொழுக்கமும் 
இன்று இல்லாவிடினும் என்றாவது
ஒருநாள் நல்ல பலனைத் தந்து
நிற்கும்.அவனுக்கு உயர்ச்சியைத் தரும்.
புகழைத் தேடித் தரும்.

தீய ஒழுக்கம் உடையவர்களுக்கு 
தீமை விளையப் போவது உறுதி.
துன்பம் வந்து சேர்வது திண்ணம்.
வினை விதைத்தவன்  வினை
அறுத்தே தீருவான்.
விதைத்த வினை ஒன்றும் பத்துமாக
விளைந்து நாளும் துன்பத்தைத்
தந்து கொண்டே இருக்கும்.

"விரை ஒன்று போட்டால் சுரையொன்று
முளைக்குமா?"
நாம் எந்த விதையைப் போட்டோமோ அந்தச்
செடிக்கான பலனை மட்டும்தானே 
எதிர் பார்க்க முடியும்.
"பண்ணிய பயிரில் புண்ணியம்
தெரியும்" என்பார்கள்.

ஆதலால் நல்ல விதையாகிய 
நல்லொழுக்க நெறிகளைக்
கடைபிடித்து வாழுங்கள் என்கிறார்
வள்ளுவர்.

English couplet : 

'Decorum true' observed a seed of good will be;
'Decorum's breach' will sorrow yield eternally"

Explanation : 

Propriety of conduct is the seed of virtue ; 
Impropriety will ever cause sorrow. 

Transliteration. : 

"Nandrikku viththakum Nallozhukkam Theeyozhukkam
endrum itumpai tharum "


Comments

Popular Posts