கல்வி கரையில கற்பவர் நாள்சில....
கல்வி கரையில கற்பவர் நாள்சில....
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து "
ஒரு பிறவியில் பெற்ற கல்வி ஏழேழு பிறவிக்கும்
பாதுகாப்பாக வரும்.
ஆதலால் கற்க வேண்டும் என்றார் வள்ளுவர்.
"கற்கை நன்றே கற்கை நன்றை
பிச்சைப் புகினும் கற்கை நன்றே "
கற்றல் நன்மை தருவது. ஆதலால்
இரந்தாவது கற்றுவிடுங்கள்
என்றார் ஔவையார்.
"கற்றது கைம்மண்ணளவு
கல்லாதது உலகளவு "
ஆதலால் கற்றுக் கொண்டே இருங்கள்
என்றார் ஔவை.
இதற்கும் ஒருபடி மேலே போய்,
" இம்மை பயக்குமால் ஈயக்குறை வின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து "
என்கிறது நாலடியார்.
ஒருமுறை கல்வி கற்றுவிட்டால்
அதற்கு அழிவே கிடையாது.கல்வியைப்
போன்று அறியாமையை ஒழிக்கும் மருந்து
வேறு எந்த உலகத்திலும் கிடைக்காது.
ஆதலால் படியுங்கள் .
இப்படி கல்வியைப் பற்றி பாடியவருக்கு
அதோடு நிறுத்திவிட மனமில்லை.
நம்ம பாட்டுக்கு படியுங்கள்...படியுங்கள்
என்று சொல்லிவிட்டோம்.
எப்படி படிக்க வேண்டும்?
என்று சொல்லித்தரவில்லையே
என்ற மனக்குறை.
நமக்கும் அந்த மனக்குறை உண்டு.
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக "
என்று வள்ளுவர் சொல்லிவிட்டார்.
இப்போது "நிற்க அதற்குத் தக..."என்று
கூறிவிட்டதால் எல்லாவற்றையும்
படித்துவிட்டு அதன்படி ஒழுகுதல்
கூடுமா? என்ற கேள்வி நமக்குள்
எழுகிறதல்லவா!
அதற்கும் எங்களிடம் பதில் உள்ளது
என்பதுபோல அமைந்ததுதான் இந்த
நாலடியார் பாடல்.
"கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல
தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே
நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து "
_ நாலடியார்
கல்விக்கு எல்லையே கிடையாது.
கற்பதற்கு நமக்குக் கிடைத்த
நாட்களோ குறைவு.அப்படி கிடைத்த
நாட்களிலும் படிக்க முடியாதபடி
பல்வேறு இடையூறுகள் வந்து
நிற்கும். ஆதலால் படிக்கும் காலத்தில்
கண்ட கண்ட நூல்களை எல்லாம்
கற்க வேண்டாம்.
பாலுடன் நீரும் கலந்து
வைத்திருக்கும்போது நீரிலிருந்து
பாலை மட்டும் தனியாகப் பிரித்து
அருந்தும் அன்னப் பறவையைப் போல
சிறந்த நூல்களை மட்டுமே
ஆராய்ந்து தேர்ந்தெடுத்துக்
கற்க வேண்டும் என்கிறது இந்தப் பாடல்.
நல்ல நூல்களைக் கற்க வேண்டும் சரி.
அதனை எப்படி தேர்ந்தெடுத்துக்
கற்க வேண்டும் என்பதற்குச்
சொல்லப்பட்ட உவமையைப்
பாருங்கள்.
அன்னப் பறவையைப் போல நமக்கு
நன்மை பயப்பது எது எனத் தனியாகப்
பாகுபடுத்திப் பார்த்து அந்த நூல்களை
மட்டுமே படித்தல் வேண்டுமாம்.
வெறுமனே நல்ல நூல்களை மட்டும்
தேர்ந்தெடுத்துப் படியுங்கள் என்றால்
கேட்பதற்கு சுவை இருக்காது இல்லையா !
பாடலிலும் நயம் இருக்க வேண்டும்.
கேட்பவர் கவனத்தையும் ஈர்க்க வேண்டும்.
அதற்காக எவ்வளவு அருமையான
உவமை கூறப்பட்டுள்ளது பாருங்கள்!
நமக்கு இதுவரை அன்னப்பறவையைப்
பற்றி தெரியாதிருந்திருக்கலாம்.
அன்னப்பறவை என்ற ஒரு பறவை
உண்டு. அது பாலுடன் நீர் கலந்திருந்தால்
அப்படியே குடித்து விடாது.
பாலை மட்டும் தனியாக பிரித்து
எடுக்கும் திறன் அன்னப் பறவைக்கு
உண்டு. அப்படி பிரித்து எடுத்து
உண்பதுதான் அன்னப்பறவையின்
பண்பு என்று அன்னப் பறவையை
நமக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.
அந்த அன்னப் பறவையைப் போன்று
நமக்கும் நல்ல நூல்களை வடிகட்டி,
பிரித்து எடுத்துப் படிக்கும் பண்பு
வேண்டும் என்கிறார்.
அதாவது படிக்கும்போது நீங்கள்
அன்னப்பறவையாக மாறிவிட
வேண்டுமாம்.
அப்பப்பா....என்னே புலமை!
என்னே புலமை!
மறுபடி ..மறுபடி ...எனைப்படி என்பதுபோல
பாடலுக்குள் எப்படி நம்மைக்
கட்டிப் போட்டுவிட்டார் பாருங்கள் !
Kalvikku Arputhamana uvamaigal.
ReplyDeleteஅழியா செல்வம் கல்வி. அதை திறம்பட பெறும் வழிகளை பதிவிட்டது மிக அருமை.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteApappa enna Arumaiyana villakkam. Miga Arumai.
ReplyDelete