கொரோனாவிடம் கற்றேன்

            கொரோனாவிடம் கற்றேன்

 கவளச்சோற்றுக்காய் ஆலாய்ப் பறக்கும்
  கண்ணீர் மாந்தர் கதைகளைக் கேட்டேன்
  கடக்க நினைத்த பாதைகள் எல்லாம்
  கானல் ஆறெனப் பாடம் கற்றேன்!
         
 கண்களை மூடி நெடுநாள் கிடந்தேன் 
 கனவிலும் மிரட்டும் பேயென பயந்தேன்
 காலாற நடக்கும் இன்பத்தைத் தொலைத்தேன்
 கால் இல்லா கொடுமை இதுவென சபித்தேன்!
 
சுழற்சியில் உலகம் இயங்கிட கண்டேன்
பிறழ்ச்சி ஏதென புரியாது நின்றேன்
உயர்ச்சியைத்தேடி ஓடிடும் கால்கள்
தளர்ச்சியாய்த் தடுமாறுதல் கண்டேன்!

ஒற்றைக் காயை வட்டிலில் தேடலில்
வெற்றுக் குழம்பும் சுவையென உணர்ந்தேன் 
வேண்டா வெறுப்பாய் தின்றவை யாவும்
விருப்ப உணவாய் மாறிட கண்டேன்!
            
மூலையில் முடங்கிடும் முதுமையை நினைத்தேன்
முடக்குதல் பாவம் என்பதைப் புரிந்தேன்
தூக்கியே அருகில் வைத்திட நினைத்தேன்
முடியா நிலைமையில் ஊமையாய்க் கிடந்தேன்!
      
 பசியின் வலியால் துடிப்போர் கண்டேன் 
 கொடிது கொடிது பசியென வெறுத்தேன்
 கூப்பிடு சத்தம் குடலினில் கேட்டேன்
 சாப்பாடு உலகமயமாதல் ஆனதென வியந்தேன் !
               
 பாலுக்காய் ஏங்கும் குழந்தையைப்போல
 கூழுக்காய் அழும் வறியவர் போல
 புறங்கை பருக்கையைத் தேடிடும் மனிதர்
 வெறுங்கையை நக்கி  வீழ்ந்திட கண்டேன்!
        
யாசித்தலின் கொடுமை யாதென் றறிந்தேன்
யாசகம் என்ற சொல்லையே வெறுத்தேன்
இருந்தபோது தெரியாத உண்மைகள்
இழந்தபோது பாடமாய்ப் படித்தேன்!

முடங்கிய விரல்களை நிமிர்த்தியே பார்த்தேன்
முரட்டு வாதம் பிடிப்பவர் போல
மறுத்து அடம் பிடித்திட கண்டேன் 
மடக்கியே  வைத்து மறுபடி படுத்தேன்!
      
 வானமே வீடென்று வாழ்வோரை நினைத்தேன்
 தானம் தரும் இயற்கையை மதித்தேன்
 யானம் ஏந்திடும் நிலைமையைப்  பழித்தேன்
 நானும் அவனும் ஒன்றென உணர்ந்தேன்!
 
கொரோனா வியாபாரம் நடந்திட கண்டேன்
கொரில்லா தந்திரம் இதுவென புரிந்தேன்
கொல்ல வந்த தொற்றென சொல்லி
கைகழிவிடும் கலையை இப்போது கற்றேன் !
 
ஒளிந்த கோள்களைத்  தேடி கண்டவனும்
ஒழிக்க முடியாதென திணறுதல் கண்டேன்
கொரோனா ஊசி வந்திடும் நாட்கள்
 வாராதோவெனக் காத்துக் கிடக்கிறேன்!
          










Comments

  1. கொரோனா நோய் தாக்கத்தை ஆதங்கமாய் பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment