அடுத்தது என்ன ?

       அடுத்தது என்ன ?

இதுவும் கடந்துபோகும்.
ஆமாம் எல்லாமே கடந்து போகக் கூடியதுதான்.
நிரந்தரம் என்று எதுவும் இல்லை.
மாற்றங்கள் நிகழ்வது இயல்பான ஒன்று.

இரவு என்றால் பகல் வரும்.கோடைகாலம்
வந்தால் பின்னாலேயே குளிர்காலமும் 
வரத்தான் செய்யும்.
மழையும் வெயிலும் மாறி மாறி
வந்து போகும்.
தொடர்ந்து மழை பெய்துகொண்டு 
இருந்தாலும் தாங்காது.
தொடர்ந்து வெயிலாக இருந்தால்
கருகிப் போய்விடுவோம்.
ஒன்றிலிருந்து ஒன்று 
மாறிக்கொண்டே இருப்பதால்தான்
உலகம் இன்றளவும் இயல்பாக இயங்கிக்
கொண்டிருக்கிறது.

மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு 
இருந்தால் மட்டுமே
அடுத்தது என்ன என்ற ஒரு 
எதிர்பார்ப்பு்  இருக்கும்.

மாற்றம் என்ற சொல் மட்டுமே மாறாதது.
மற்றவை யாவும் மாறிக்கொண்டே இருக்கும்.
மாறிக்கொண்டிருக்கும் உலகில் நாம்
மட்டும் மாறாதிருந்தால் எப்படி?
நாம் மாற வேண்டும்.
மாறித்தான் ஆக வேண்டும்.

நேற்று என் பெற்றோர் இப்படி இருந்தனர்.
முந்தாம்நாள் என் தாத்தா பாட்டி 
அப்படி இருந்தனர்.
என்று பழைய பஞ்சாங்கம் பாடிக் கொண்டு
இருந்தோமானால் நாமும் பழைய கால
தாத்தாக்களைப்போல காதில் கடுக்கனும்
கொண்டையும் முடிந்து கொண்டு திரிய
வேண்டியதுதான்.

பெண்கள் எல்லாம் தண்டட்டியும்
பாம்படத்தையும் போட்டுக்கொண்டு
காதைக்காதை ஆட்டிக் கொண்டு திரிய
வேண்டியதுதான்.
நினைத்துப் பார்க்கவே 
முடியவில்லை அல்லவா!

அது அந்தக் காலத்து கலாச்சாரம்.
முடிவெட்ட, அழகுபடுத்த இத்தனை
தொழில்நுட்ப வசதி வாய்ப்பு 
இல்லாத காலம்.
அதனால் அவர்களால் அப்படித்தான்
இருக்க முடியும்.

காலச்சூழல் பொருளாதாரம் யாவும்
அவர்களை அப்படி இருக்க வைத்தது.

இப்போது நமக்கு எல்லா விதமான
தொழில்நுட்ப வசதி வாய்ப்புகளும்
எளிதாக கிடைக்கின்றன.
இந்தச் சூழலில் நாம் மாற்றத்திற்கு ஏற்ப 
நம்மை மாற்றிக் கொள்ளுவதுதான் 
புத்திசாலித்தனம்.

பழைமையைப் போற்றுங்கள். 
தப்பே இல்லை.
ஆனால் கால ஓட்டத்திற்கு ஏற்ப நாமும்
ஓடிக் கொண்டே இருக்க  வேண்டும்.
ஒரே  இடத்தில் தேங்கி நின்றுவிடக் கூடாது.
ஓடவில்லை எனில் அனைவரும் நம்மை
முந்தி சென்று கொண்டே இருப்பார்கள்.
நாம் பின்தங்கியவர்களாகி விடுவோம்.

வேட்டி அணிந்து ஓட்ட பந்தயத்தில்
ஓட முடியாது.
இல்லை...நான் மாறப்போவதில்லை.
வேட்டியோடுதான் ஓடுவேன் என்றால்
நாலுமீட்டர் ஓடுவதற்குள்  வேட்டி இடறி
வீழ்ந்து கிடக்க வேண்டியதுதான்.

வேட்டி நம் முன்னேற்றத்திற்கு தடையாக
உள்ளதா? 
வேட்டியைக் கழற்றி வைத்துவிட்டு
அரை காற்சட்டை அணிந்து ஓடுவதில்
தப்பே இல்லை.
நான் அரை காற்சட்டை அணிய மாட்டேன்
முட்டு தெரியும் ....முழங்கால் தெரியும்
என்று புலம்பிக் கொண்டே இருந்தால்
முட்டைக் கட்டிக்கொண்டு ஒரே இடத்தில்
நின்று விட வேண்டியதுதான்.

ஒன்றைப் பெற்றதும் அதில் 
திருப்தியடைந்து
ஒரே இடத்தில் நின்றுவிடாதபடி
நாளும் புதுப் புனலைச் சுமந்து ஓடும்
நதியாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.
தேடலை நிறுத்திவிட்டால்
தேங்கி நிற்கும் குட்டையாக 
ஒரே இடத்தில் நின்றுவிடுவோம்.

அடுத்தது என்ன...அடுத்தது என்ன என்ற 
கேள்வி சதா ஒலித்துக் கொண்டே 
இருக்க வேண்டும்.
மாற்றத்தை நோக்கிய பயணம் 
தொடர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மாற்றம் ஒரே நாளில்  நிகழ்ந்துவிடாது.
மாறுபட்ட சிந்தனையாளர்
களின் புத்தகங்களைப் படித்தல்
வாழ்க்கை வரலாறு புத்தகங்களைப் படித்தல்
என்று நம்மை மெருகேற்றிக் கொண்டே
இருந்தால் மட்டுமே நம்மில்
நல்ல மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.

மாற வேண்டிய கட்டாயம் எல்லா
உயிரினங்களுக்கும் உள்ளது.
மாற்றம் நிகழும்போது ஆரம்பத்தில்
அதை ஏற்றுக்கொள்ள மனம் தயங்கும்.

காலப்போக்கில் எல்லாம் இயல்பு நிலைக்கு
வந்துவிடும்.
அது எப்படி என்றால் காலையில் எழும்பும்
பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள
ஆரம்பத்தில் சிரமப்படுவோம்.நாளாக ஆக
அதுவே வழக்கமாகிப் போவதால்
எளிமையாக உணர முடியும்.
ஒருமுறை ஒரு அரசர் தன் மந்திரிகளிடம்
 நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில்
 சொல்பவருக்கு சிற்றரசர் பதவி 
வழங்கப் போகிறேன் என்றாராம்.
அனைவரும் என்ன கேள்வி கேட்கப் 
போகிறார் என்று ஆவலோடு மன்னனைப் 
பார்த்தனர்.
கேள்வி என்னவென்றால் "வெற்றி 
பெற்றவரிடம் அந்த வார்த்தையைச் 
சொன்னால் கலங்க வேண்டும்.
தோல்வி பெற்றவரிடம்  அந்த வார்த்தையைச் 
சொன்னால் மகிழ வேண்டும்."  
இதுதான் கேள்வி  என்றார் மன்னர்.
எல்லோரும் அது எப்படி?
ஒரு வார்த்தை இரண்டு பேரிடம் இரண்டு
விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?
விடை சொல்ல முடியாமல் ...குழம்பிப்போயினர்.
அப்போது மந்திரி ஒருவர் எழும்பி
 "மன்னா ,எனக்கு இந்த கேள்விக்கு விடை
 தெரியும் "என்றார்.
அனைவரும் மந்திரியை இவர் என்ன 
சொல்லிவிடப் போகிறார் என்பது போல 
பார்த்தனர்.
மந்திரி "இதுவும் மாறும் என்பதுதான் 
இதற்கான விடை "என்றாராம்.
"சரியாகச் சொன்னீர்கள் . பாராட்டுகிறேன் "
என்றார் மன்னர்
'எப்படி ...'.என்பது போல அனைவரும் 
மன்னரையே பார்த்தனர்.
"வெற்றி நிலையானது அல்ல .....
 இதுவும் மாறும் காலம் வரும் என்று 
தெரிந்தால் வெற்றியாளன்  கலங்கிப் போவான்.
தோல்வி நிரந்தரமானதல்ல... என்று தெரிந்தால் 
நாளை நமக்கு வெற்றி கிடைக்கும் 
என்ற நம்பிக்கையில் தோல்வி 
அடைந்தவன் மகிழ்ச்சி அடைவான்" 
என்று விளக்கம் அளித்தார் மந்திரி.
அரசரும்  அமைச்சரின் அறிவை 
மெச்சி அவருக்கு சிற்றரசர் பதவி
கொடுத்து மகிழ வைத்தார்.

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும்
மனநிலையை வளர்த்துக் கொள்வோமானால்
எதுவுமே நம்மை பாதிக்காது.
மாற்றங்கள் ஏற்றங்களுக்குப் படி அமைத்துக்
கொடுப்பவையாக இருக்கும்
என்ற நம்பிக்கையோடு நடைபோடுவோம்.

ஒரு செடியானது இலை, கிளை, பூ ,காய், கனி
என்று அடுத்த படிநிலையை நோக்கிய
மாற்றங்களை  நிகழ்த்தும்போதுதான்
முழுமையான பலனைத் தந்ததாக
கருதப்படுகிறது.
அப்படியான உயர்ச்சி நம்மிலும்
நிகழ வேண்டும்.

மாறுதல்கள் தவிர்க்க முடியாதவை.
மாற்றங்கள் நிகழும்போதுதான் செயல்
நடைபெறும்.இயக்கம் இருந்தால்
எய்த முடியாதது எதுவுமில்லை.

அடுத்து என்ன...அடுத்தது என்ன 
என்ற தேடலை நோக்கிய நம் பயணம்
தொடரட்டும்.














Comments

Popular Posts