சுனைவாய்ச் சிறுநீரை...

சுனைவாய்ச் சிறுநீரை.......

   

சங்க இலக்கியப் பாடல்கள் காதலையும்
வீரத்தையும் சொல்வதாகவே இருக்கும்.
காதல் காட்சிகளைச் சொல்வதாக இருந்தாலும்
அதிலும் ஒரு அருமையான செய்தி
புதைந்திருக்கும்.
இங்கே மாறன் பொறையனார் என்ற புலவர்
காட்டில் நிகழும் ஒரு அருமையான காதல்
காட்சியை நம் கண்முன் படம் பிடித்துக்
காட்டுகிறார்.

தலைவன் ஒருவன் பிரிந்து
சென்றுவிட்டான்.
அவன் சென்ற இடமோ நீரில்லாப்
பாலைநிலம்.
அந்தப் பாலை நிலத்தையும்
சொல்ல வேண்டும்.
அவன் பாலை வழியேசென்றான் ஆயினும்
உன்மீது கொண்ட அன்பு குறையாதவன்
என்றும் சொல்ல வேண்டும்.

அதற்குப் புலவர் கையாண்ட உத்தியைப்
பாருங்கள்.
காட்டில் ஒரு பெண்மானும்
ஆண்மானும் வாழ்கின்றன.இருவருக்கும்
தாகம்.
தொலைவில் கிடக்கும் சுனையைத்
தேடி செல்கின்றன.
சுனையில் கிடக்கும் நீரோ ஒருத்தர்
மட்டும் குடிப்பதற்குப் போதுமானதாக உள்ளது.
ஆண்மான் குடிக்கவில்லை என்றால்
பெண்மான் நீர் குடிக்காது.
தான் மட்டும் குடித்துவிட்டால்
பெண்மானுக்கு குடிப்பதற்கு
நீர் இருக்காது.
இப்போது என்ன செய்யலாம்
என்று யோசித்தது ஆண்மான்.

நீரில் வாய் வைத்து உறிஞ்சிக்
குடிப்பதுபோல பாவனை செய்தது.
நீர் குறையவே இல்லை.
நீயும் வந்து குடி என்று
பெண்மானை அழைத்தது.


பெண்மான் தான் குடித்தால்
ஆண்மானுக்குக் குடிக்க நீர் இருக்காதோ
என்று எண்ணி தானும் ஆண்மானைப்
போலவே குடிப்பது போல
பாவனை செய்தது.
நீர் கொஞ்சம் கூட வற்றவே இல்லை.

இதுதான் காட்சி.

ஒருவருக்கொருவர்  எவ்வளவு அன்பு பாருங்கள்!
விட்டுக் கொடுக்கும் பண்பு இரு மான்களிடமுமே
இருந்திருக்கிறது.
இதுதாங்க உண்மையான அன்பு.
உண்மையான அன்பு வந்துவிட்டால்
கூடவே விட்டுக் கொடுக்கும் பண்பும்
வந்துவிடும் என்பதைச் சொல்வதற்குத்
தான் இந்த காட்சி.

இப்படிச் சொல்வதற்காக மட்டும் புலவர் இந்த
காட்சியைத் தன் கவிதையில் சொல்லிச்
செல்லவில்லை.
தலைவன் சென்றுள்ள காட்டில்
அப்படிப்பட்ட காதல் காட்சிகள்
நிகழும். தலைவன் அதனைக் கண்டதும்
உன் நினைப்பு வர உடனே திரும்பி வருவான்
என்று சொல்வதற்கான காட்சியாகவும்

இது அமைந்துள்ளது.

இதில்  மான்கள் நீரருந்தும் காட்சி மூலமாக
நமக்குச் சொல்லப்படுகிற மற்றுமொரு
செய்தியும் உண்டு.
அன்பு என்றால் அதில் விட்டுக்கொடுத்தல்
இருக்க வேண்டும்.
ஒருவர் நலனை இன்னொருவர்
பேண வேண்டும் என்ற அக்கறை இருத்தல்
வேண்டும் என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது.

ஒரு சின்ன காட்சி.
அதன்மூலமாக எவ்வளவு பெரிய வாழ்வியல்
உண்மையைச் சொல்லித் தருகிறார் புலவர் .
இதுதாங்க சங்க இலக்கிய
பாடல்களின் சிறப்பு.

சுனைவாய்ச் சிறுநீரை

 எய்தாதென்றுஎண்ணியப்

பிணைமான் இனி துண்ண

வேண்டிக் கலைமாத்தன்

கள்ளத்தின் ஊச்சும்

சுரம்என்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி
                    ஐந்திணை ஐம்பது _38

இந்தப்பாடலை எழுதியவர் மாறன்
பொறையனார் என்ற புலவராவார்.

பெரும்பாலும் திருமணவீடுகளில்
மணமக்களை வாழ்த்தும்போது
இந்த மான்களைப்போல மணமக்கள்

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து 

வாழ்தல் வேண்டும் என்று கூறி வாழ்த்துவர்.
நல்ல வாழ்த்துல்ல.. !



Comments

  1. அழகான இலக்கியப் பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts