மகிழ்ச்சியைத் தேடி....

   மகிழ்ச்சியைத் தேடி......

அனைவருக்கும் மகிழ்ச்சியாக 
 வாழ வேண்டும் என்று ஆசை.
 ஆனால் எது மகிழ்ச்சி என்று
 அறிவதில்தான் சிக்கல்.
  
 சிலருக்கு பணம் நிறைய தேடினால்
 மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற
 எண்ணம் இருக்கும்.
 
 இன்னும் சிலருக்கு நல்ல பதவி
 இருந்தால் மகிழ்ச்சியாக
 இருக்கலாம் என்று தோன்றும்.
 
 சிலர் அழகாக இருப்பவர்கள்
 எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
 என்று நினைப்பர்.
 
 நிறைய படித்துவிட்டவர்கள் எல்லாம்
 மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று 
 நினைப்பவர்களும் உண்டு.
 இப்படி ஆளாளுக்கு மகிழ்ச்சியைப்பற்றி
 வெவ்வேறு கண்ணோட்டம் இருக்கும்.
 
 எங்கே மகிழ்ச்சி....
 எங்கே மகிழ்ச்சி என்று ஆளாளுக்கு
 நாலாபக்கமும் தேடிக் கொண்டிருக்கிறோம்.
 ஆனால்  நமக்குள்தான் மகிழ்ச்சி இருக்கிறது
 என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை.
 ஒத்துக் கொள்வதுமில்லை.

வெளியில் தேடிக்கொண்டிருப்பதால்தான்
பல நேரங்களில் மகிழ்ச்சியைத் 
தொலைத்துவிட்டு எங்கெங்கோ தேடி 
அலைகிறோம்.

நமது மனநிலையும் நாம் வீட்டிலும்
வெளியிலும் நடந்து கொள்ளும் 
விதமும்தான் நம்மை மகிழ்ச்சியாக இருக்க 
வைக்க முடியும்.

மகிழ்ச்சியை மனதிற்குள் வைத்துக்
கொண்டு ஊரெல்லாம் தேடுவதில்
என்ன பயன்?

காலணா பெறாத காசுக்கெல்லாம்
வீட்டில் சண்டைப் போட்டு மகிழ்ச்சியை
தொலைப்பவர்கள் அதிகம்.

மகிழ்ச்சி அடுத்தவர்கள் நமக்குத் தருவதல்ல..
நமக்கு நாமே தேடிக் கொள்வது.

மகிழ்ச்சியை வெளியில் தேடுவது
மூக்குக் கண்ணாடியை கண்களில்
போட்டுவிட்டு அறை எல்லாம் தேடுவது
போன்றதாகும்.

ஒரு பணக்காரர் ஒருவர்
 காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
பல மணி நேரப் பயணம் 
சற்று சோர்வைத் தந்துவிட 
சாலை ஓரமாக நின்ற 
ஆலமரத்தடியில் காரை நிறுத்திவிட்டு
கீழே இறங்கி நின்றார்.

ஆலமரத்து நிழலில் ஒரு விறகுவெட்டி
தான் வெட்டி வந்த விறகு கட்டை
ஆலமரத்தில் சாத்தி வைத்துவிட்டு
நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான்.

அருமையான தென்றல் காற்று
வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தது.
நேற்று பெய்த மழையின்
மண்வாசனை.
அங்கங்கே மரங்களிலிருந்து
பறவைகளின் கீச்கீச்சென்ற 
சிணுங்கல்கள்.
எங்கும் சில்லென்று பூத்துக்
கிடந்து சிரிக்கும் மலர்கள்.
 இப்படி ஒரு  அழகிய சூழல்.
 
 விறகு வெட்டி இவற்றை எல்லாம்
 அனுபவித்தபடி நிம்மதியாக
 தூங்கிக் கொண்டிருந்தான்.
 
ஆனால் காரில் வந்து இறங்கிய
பணக்காரருக்கோ இவை எதையுமே நுகரும்
மனநிலை இல்லை.
மனம் எதையோ இழந்துவிட்டுத் தவிக்கும்
நிலையில் இருப்பு கொள்ளாமல்
தவித்துக் கொண்டிருந்தது.
எங்கெங்கோ பார்த்தபடி ஒரு
பரிதவிப்பில் நின்றுகொண்டிருந்தார்.

"இந்த விறகுவெட்டி எவ்வளவு மகிழ்ச்சியாக
தூங்குகிறான்!
நானோ தூக்கமும் இல்லாமல்
மகிழ்ச்சியும்  இல்லாமல் நிம்மதி இழந்து
தவிக்கிறேனே!
இறைவா! எனக்கும் இந்த
விறகுவெட்டியைப்போல மகிழ்ச்சியைக்
கொடு "என்று வேண்டிக்கொண்டார்.

"அப்படியானால் நீயும் விறகுவெட்டியைப்போல
எதைப் பற்றிய சிந்தனையுமே இல்லாமல்
ஒரு அரைமணி நேரம் நன்றாக படுத்து தூங்கு.
மகிழ்ச்சி தானாக வந்துவிடும்"
என்றார் கடவுள்.

"அது எப்படி முடியும்? 
நான் தூங்கிவிட்டால்...
காரில் பணம் இருக்கிறது.
யாராவது தூக்கிப் போய்விட்டால்...."
என்றார் பணக்காரர்.

"ஏன் ...விறகுவெட்டிக்கும்தான் பக்கத்தில்
விறகு கட்டு இருக்கிறது. அவன் அதை யாரும்
தூக்கிச் சென்று விடுவார்களே என்று 
கவலைப்படவில்லையே" என்றார் கடவுள்.

"விறகுக்கட்டும் என்னிடம் இருக்கும் 
லட்ச ரூபாய் பணமும் ஒன்றா?" என்று
எதிர்க் கேள்வி கேட்டார்  பணக்காரர்.

"ஒன்றுதான் "என்றார் கடவுள்.

"அது எப்படி ஒன்றாக இருக்க முடியும்?"
குறுக்குக் கேள்வி போட்டு மடக்கினார்.

"அவன் கொண்டு வந்திருக்கும் விறகுக் கட்டை
விற்று பணம் பெற்றால்தான் அவன்
வீட்டில் உள்ளவர்கள் பசியாற முடியும்.
இருப்பினும் அவனுக்கு  அந்த விறகுக்கட்டை
யாரும் தூக்கிச் சென்றுவிடுவார்களோ
என்ற கவலை இல்லை.

அவன் கடவுள்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு
நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறான்.
உனக்கோ உன்மீதும் நம்பிக்கை இல்லை.
கடவுள் மீதும் நம்பிக்கை இல்லை.
மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு
தவியாய்த் தவிக்கிறாய்." என்றார் கடவுள்.

"அது முடிகிற காரியமா?..".ஐயத்தோடு கேட்டார்
பணக்காரர்.

"எல்லாவற்றையும் நானே சுமந்து
கொள்வேன் என்று சுமந்து 
கொண்டிருந்தால்
ஒருபோதும் மகிழ்ச்சி இருக்காது.
யார் மீதாவது நம்பிக்கை வேண்டும்."
என்றார் கடவுள்.

"இப்போதெல்லாம் யாரையும்
நம்ப முடியவில்லை.
திருடன் எப்போது வருவான்
எப்படி வருவான் என்று தெரியவில்லை."
என்றார் பணக்காரர்.

"நீ இப்போது வண்டியிலிருந்து
இறங்கி வந்து நிற்கிறாய்.
வண்டியில் இருக்கும் பணத்தை 
யாராவது திருடிச் சென்றுவிட்டால்
என்ன செய்வாய்?" என்றார் கடவுள்.

"ஆ...என் பணம்...பணம் "என்றபடி
வண்டியை நோக்கி ஓடினார்
பணக்காரர்.

வண்டிக்குள் உட்கார்ந்து பணப்பையை
எடுத்து மார்போடு அணைத்து 
உட்கார்ந்து கொண்டார்.

சிரித்தார் கடவுள்.

"எனது பரிதவிப்பு உங்களுக்கு 
சிரிப்பாகத் தெரிகிறது..."என்றார்
பணக்காரர்.

"உன் செய்கையைப் பார்த்து சிரிக்காமல்
வேறென்ன 
செய்வது? வண்டியின் சாவி உன் கையில்
இருக்கிறது. பக்கத்தில் தான் நீயும்
நிற்கிறாய்? 
அப்புறம் யார் வந்து உன் பணத்தை எடுத்துச்
செல்ல முடியும்?" என்று கேட்டார் கடவுள்.

"ஆமா இல்ல...பதற்றத்தில் வண்டி
சாவி என் கையில் இருப்பதை மறந்து
போய்விட்டேன் "என்றார் பணக்காரர்.

"பார்த்தாயா... சற்று நேரத்தில் நிம்மதியைத்
தொலைத்து எப்படி பரிதவித்துப் போனாய்.
மகிழ்ச்சி  உன்னிடம்தான் இருக்கிறது. 
அதைத் தொலைப்பதும் பாதுகாப்பதும்
உன் கையில்தான் இருக்கிறது "என்று
சொல்லி மறைந்தார் கடவுள்.

"உன்காலடியில் மகிழ்ச்சி உறங்கிக்
கொண்டிருக்கிறது.
அதை உனதாக்கிக் கொள்ளும் 
சூட்சுமத்தைத்
தெரிந்துகொள். அப்போதுதான் 
மகிழ்ச்சியாக வாழ 
முடியும் " என்றது மனசாட்சி.

இதை மாதிரி தாங்க ...எல்லாப் பாரத்தையும்
நானே சுமப்பேன் .யாரையும் நம்ப மாட்டேன்
என்று அலைந்து கொண்டே இருந்தால்
ஒருநாளும் மகிழ்ச்சியோடு வாழ முடியாது.

நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாம்
நமக்கு சாதகமாக இருக்கும் என்று
எதிர்பார்க்க முடியாது.

எல்லாவற்றையும் நமக்கு சாதகமாக்கிக்
கொள்ளவும் முடியாது.

நம்மைச் சுற்றி நடப்பவை நம்மைப்
பாதிக்கா வண்ணம் பார்த்துக்
கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

விட்டுக் கொடுங்கள். அல்லது
போனால் போகட்டும் என்று
விட்டுவிடுங்கள். மகிழ்ச்சி தானாய்
வந்துவிடும்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களை 
மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால்
போதும்.....நீங்களும் மகிழ்ச்சியாக
இருக்கலாம்.

எல்லா இடங்களிலும் இது சாத்தியம்
இல்லாமல் போகலாம்.
விதிகளுக்கு விதிவிலக்கு
உண்டல்லவா! 
அப்படித்தான் இதுவும் என்று
விட்டுத்தள்ளிவிட்டு போய்க்கொண்டே
இருக்க வேண்டும்.

மகிழ்ச்சி என்னைச் சார்ந்தது.எனது சூழலை
நான் மகிழ்ச்சியாக வடிவமைத்துக்
கொள்கிறேன் என்ற மனநிலையில்
நம்மை தாயார்படுத்தி வைத்துக்கொள்ள
வேண்டும்.

நமது தொடர்பு யார் யாருடன்
இருக்க வேண்டும் என்ற புரிந்துணர்வு
அடிப்படையில் நமது செயல்பாடுகள்
இருந்தாலே அடுத்தக்கட்ட
நகர்வு மகிழ்வானதாக இருக்கும்.

இருப்பதில் திருப்தி கொள்வது...
ஆசையில் மனதை அலைபாயவிடாமல்
இருப்பது...தேவையில்லாத பேச்சு
என்று நம்மை ஒரு கட்டுக்குள்
வைத்துக் கொள்பவர்களால்
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

ஏன் நம்மால் மட்டும் இது கூடாதா என்ன...
நம்புவோம். மகிழ்ச்சி தானாய் வந்து
குடியேறும்.
குடியேறுபவர் மகிழ்வானவராக
இருந்தால் குடியேற்ற நாட்டில்
மகிழ்ச்சிக்குக்  குறைவா இருக்கப் போகிறது!




















 

 
  

Comments

  1. மகிழ்ச்சி நமக்குள் தான் இருக்கிறது என்பதை கதை மூலம் பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts